படம்: லிப்ட்
நடிப்பு:கவின்,அம்ரிதா,கிரண் கொண்டா,பாலாஜி வேணு கோபால், முருகானந்தம்,
தயாரிப்பு: ஹெப்ஸி
இசை: பிரிட்டோ மைக்கேல்
ஒளிப்பதிவு:எஸ்.யுவா
இயக்கம்: வினீத் வரபிரசாத்
ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் குரு வேறு கம்பெனியிலிருந்து மாற்றலாகி சென்னை வருகிறார். முதல்நாள் வேலையில் சேரும் அவருக்கு டீம் ஹெட் பொறுப்பு வழங்கப்படுகிறது. அதே கம்பெனி யில் எச் ஆராக இருக்கிறார் ஹரிணி. ஏற்கனவே இவர்களுக்குள் ஏற்கனவே நடந்த சந்திப்பில் சிறுமோதல் ஏற்பட்டிருந்ததால் அலுவலகத்தில் இருவரும் ஒருவரையொருவர் முறைத்துக்கொள்கின்றனர். அன்று மாலை பணி முடிந்து எல்லோரும் வீட்டுக்கு புறப்பட்ட நிலையில் குருவுக்கு அவரது மேனேஜர் சில வேலைகள் தந்து அதை இரவு எந்நேரமானாலும் முடிக்க சொல் கிறார். அதற்கு ஒப்புக்கொண்டு வேலையை கவனித்துக்கொண்டிருக் கிறார் குரு. அப்போது அமானுஷ்ய விஷயங்கள் நடக்கிறது. மனதில் பயத்துடன் வேலையை முடித்து விட்டு புறப்பட தயாராகும் நிலையில் அவர் லிப்டில் சென்று பட்டனை அழுத்தும்போது அது திரும்ப திரும்ப ஒரே இடத்தில் வந்து நிற்கிறது. பிறகுதான் அதே அலுவலகத்தில் ஹரிணியும் சிக்கிக்கொண்டிருப்பது தெரிகிறது. இருவரும் அங்கிருந்து கிளம்ப முயலும்போது அந்த லிப்டில் இருக்கும் பேய் இருவரையும் தப்பி செல்ல முடியாமல் வழி மடக்கி கொல்லப் பார்க்கிறது.திகிலுடன் மாடிக்கும் அலுவலகத்துக்கும் ஒடிச் சென்று மறைய முயலும் இருவரும் பேயிடமிருந்து தப்பித்தார்களா என்பதை படபடப்புடன் படம் விளக்குகிறது.
பிக்பாஸ் பிரபலம் கவின் இப்படத்தில் தனக்கென ஒரு இமேஜை உருவாக்கி கொள்ள கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.
ஐ டி கம்பெனியில் இணையும் கவின் (குரு) அங்கிருக்கும் அம்ரிதாவுடன் (ஹரிணி) மோதல் போக்கை கடை பிடிக்கும் காட்சிகள் சுவாரஸ்யம்.
கையெழுத்து போட பேனா இல்லாதது போல் கவின் தடுமாற உடனே அம்ரிதா தன்னிடம் இருக்கும் பேனாவை தர முயல திடீரென்று பாக்கெட்டிலிருந்து பேனா எடுத்து கையெழுத்துபோட்டு அவரை தொங்கலில் விடும் கவின் கலகலக்க வைக்கிறார்.
இந்த சீண்டல் சிணுங்கள் எல்லாம் சில நிமிடங்களுக்கு மட்டுமே சிறிது நேரத்தில் பேயின் ஆட்டம் தொடங்கி விடுகிறது. குடித்துவிட்டு அருகில் வைக்கும் காபி கப் தள்ளிப்போய் இருப்பதை கண்டதும் லேசாக பயத்தை வெளிப்படுத்தும் கவின் பின்னர் லிப்டில் சென்று அங்கிருந்து தப்பிக்க முடியாமல் பேயின் பிடியில் சிக்கிக்கொள்வதும் அதனிடமிருந்து தப்பிக்க ஓடி ஓடி ஓய்ந்துபோவது திகிலின் தொடர்கதை.
கவின்தான் சிக்கிக்கொண்டார் என்று பார்த்தால் திடீரென்று அம்ரிதாவும் பேயிடம் சிக்கிக்கொண்டு தப்பிக்க முடியாமல் திணறுவது பரபரப்பு.
தன்னை காப்பாற்றச் சொல்லி கவின் அலறும் நிலையில் அங்கு வரும் செக்யூரிட்டி தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொள்வது மேலும் அதிர்ச்சி.
ஐ டி கம்பெனியில் நடக்கும் வேலை இழப்புகள்,பணி இழப்பால் நடக்கும் தற்கொலைகள் படத்தில் தோலுரித்துக் காட்டப்பட்டிருக்கின்றன.
ஒரே கட்டிடத்துக்குள் இவ்வளவு பரபரப்பையும் திகிலையும் புயல் போல் சுழன்றடிக்கச் செய்திருக்கிறார் இயக்குனர் வினீத் வரபிரசாத். இயக்குனர் உணர்வுகளுக்கு ஏற்ப அதிரடியான இசை தந்து படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறார் இசை அமைப் பாளர் பிரிட்டோ மைக்கேல்.
ஒளிப்பதிவாளர் யுவா நேரடியாக பேய் முகங்களை கோரமாக காட்டாமல் ஊகத்திலேயே அவைகளை உலவிட்டிருப்பது அமர்க்களம்.
பிரபலமான இன்னா மயிலு பாட்டு கிளைமாக்ஸ் முடிந்து ஒரு ரிலாக்ஸ்.
ஹெப்ஸி படத்தை தயாரித்திருக்கிறார்.
லிப்ட்- இருக்கை நுனியில் அமர வைக்கும் திகில்.