திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார். அவர் இன்று தமிழக முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர் கூறியதாவது:
கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல் நாள், முதல் கையெழுத்திலேயே ரேஷன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 நிவாரணம், உள்ளூர் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், ஆவின் பால் விலை ரூ.3 குறைப்பு, பொதுமக்களின் தனியார் மருத்துவமனை சிகிச்சை கட்டணத்தை அரசே செலுத்தும் வகையில் காப்பீடு, புகார் மனுக்கள் மீது 100 நாட்களில் தீர்வு காண புதிய துறை உருவாக்கம் என மக்கள் வரவேற்கும் செயல்திட்டங்களில் கையெழுத்திட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
மக்களின் பொருளாதார தேவையை பூர்த்தி செய்து, முழு ஊரடங்கு அமல்படுத்தலாம் என நேற்று முன்தினம் விடுத்த அறிக்கையை நினைவுகூறி, தமிழக குடும்பங்களுக்கு மே மாதம் ரூ.2000 வழங்கவிருப்பதை பாராட்டுகிறேன். அதேசமயம், இந்த இக்கட்டான கொரோனா சமயத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இனி ஒரு உயிர் கூட தமிழகம் இழக்காத அளவிற்கு புதிதாக அமைந்துள்ள அரசு ஆக்சிஜன் தடையின்றி கிடைப்பதற்கும், ரெம்டெசிவர் மருந்து கள்ளச்சந்தையில் விற்கப்படுவதை தடுப்பதற்கும் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டு, என் சார்பிலும், என் குடும்பத்தின் சார்பிலும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பிலும் மீண்டும் ஒருமுறை நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி, வணக்கம்
உழைப்பவரே உயர்ந்தவர்
இவ்வாறு ரா.சரத்குமார் கூறியுள்ளார்.