பத்மஸ்ரீ நடிகர் விவேக்கின் நடிப்பு மற்றும் சமூக சேவையை போற்றும் வகையில் காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம் நடக்கும் என அரசு அறிவித்துள்ளது. நடிகர் விவேக் மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரகுமார் வெளியிட்டுள்ள இரங்கல்:
அருமை நண்பரும், நன்மனிதரும், உயர்ந்த பண்பாளருமான பத்மஸ்ரீ டாக்டர்.விவேக் அவர்கள் திடீர் உடல்நலக்குறைவால் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மீண்டு வருவார் என தமிழகமே பிரார்த்தித்த நிலையில், இன்று அதிகாலை பிரியாவிடை அளித்து மறைந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அன்புச் சகோதரரின் இழப்பு தமிழினத்திற்கும், தமிழ் திரையுலகிற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
1987 ஆம் ஆண்டில் ”மனதில் உறுதி வேண்டும்” திரைப்படம் வாயிலாக தமிழக மக்களுக்கு அறிமுகமான நண்பர் விவேக் அவர்களுடன் நம்ம அண்ணாச்சி, தென்காசிப்பட்டிணம், 1977 திரைப்படங்களில் இணைந்து பணியாற்றிய நாட்களை எண்ணிப்பார்க்கிறேன். பல பரிமாணங்களில் நடித்து சீர்திருத்த கருத்துகளை சமூகத்தில் மக்களிடையே பரப்பிய நல்ல மனிதர். தனது சமூக சிந்தனையால் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் வழிகாட்டியாக பல சமூக சேவைகள் செய்தவர் அருமை நண்பர் விவேக் அவர்கள்.
சின்ன கலைவாணர் என அன்புடன் அழைக்கப்படும் அவர், கலாமின் கனவை நனவாக்குவதற்காக தன் வாழ்நாளில் பல லட்ச மரக்கன்றுகளை நட்டவர் என்பதை அனைவரும் அறிவோம். உலகிற்கு ஆக்சிஜன் கொடுக்கும் மரம் வளர்க்க உழைத்த நாயகனின் சுவாசத்திற்கு ஆக்சிஜனின்றி அவரது ஆன்மா இயற்கையுடன் கலந்ததை தமிழகத்தில் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
நண்பர் விவேக் இனி மீண்டு வர முடியாது என்றாலும், அவரது திரைப்படங்களால், சமூக சேவைகளால், சமூக சீர்திருத்த கருத்துகளால் என்றும் மக்கள் உள்ளங்களிலும், இல்லங்களிலும் வசித்துகொண்டே இருப்பார். மாணவர்களும், இளைஞர்களும் அவரது அறிவுரைகளை ஏற்று அவர் விட்டுச்சென்ற பணிகளை நிறைவேற்றுவதே அவருக்கு செய்யும் இறுதி மரியாதையாக இருக்கும்.
நிலையில்லா உலகில் எதிர்பாராத விதமாக நேர்ந்த இந்த பிரிவின் வலியை வார்த்தைகளால் போக்கிவிட முடியாது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், தமிழ்த்திரையுலகினருக்கும், தமிழ்மக்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இயக்குனர் எஸ்.பி,.முத்துராமன்:
அன்பு நண்பர்களுக்கும், திரையுலக சகோதரர்களுக்கும் , என்றென்றும் என் மீது அன்பும் பாசமும் வைத்திருக்கும் பத்திரிகை சகோதர சகோதரிகளுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் நான் கொராவினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த போது என் நலனுக்காகபிரார்த்தனை செய்த , என் நலம் பற்றி விசாரித்தஅத்தனை பேருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் நான் நலம்பெற்று வீடு திரும்பிவிட்டேன் இன்னும் 15 நாள் வீட்டில் தனிமையில் இருக்க விரும்புகிறேன்
உங்களின் அன்பிற்கும் பிரார்த்தனைக்கும் மறுமுறை நன்றிகூறுகிறேன்.
ஓவியர்-நடிகர் ஸ்ரீதர்”
அப்துல் கலாம் அய்யாவின் கனவுகளை நிஜமாக்கிய கலைஞன்…, சக கலைஞர்களையும் ஊக்குவித்த மகா கலைஞன்… சகோதரர் விவேக்கின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு – ஓவியர் ஸ்ரீதர் இரங்கல்.
நடிகர் செந்தில்:
அன்பு தம்பி சின்னக்கலைவாணர் விவேக்கின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. நானும் அவரும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளோம். சிறந்த கலைஞர். மிகவும் அன்பானவர். எண்ணற்ற மரங்களை நட்ட அவர், இயற்கை இருக்கும் வரை இவ்வுலகில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார். சினிமா இருக்கும் வரை அனைவரின் நினைவிலும் வாழ்ந்து கொண்டு இருப்பார். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இயக்குனர் ப.ரஞ்சித்:
சிறந்த நகைச்சுவை கலைஞர் நடிகர் திரு.விவேக் அவர்களின் மரணச் செய்தி பெரும் கவலை அளிக்கிறது. அவரின் பிரிவில் வாடும் திரை உலகிற்க்கும், ரசிகர்களுக்கும், குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்!!
இவ்வாறு கூறி உள்ளனர்.
விவேக்கின் உடல் இன்று மாலை போலீஸ் மரியதையுடன் விருகம்பாக்கம் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.