சரத்குமார் தலைமையிலான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 20.03.2022 – மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக்கூட்ட தீர்மானங்கள்
1. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 – இல் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும், வெற்றிபெற்ற கவுன்சிலர்களாக பொறுப்பேற்றவர் களுக்கும் இக்கூட்டம் நல்வாழ்த்து களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
2. தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான (EPFO – Employees Provident Fund Organization) வட்டி 8.5 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதமாக குறைத்திருப்பது தொழிலாளர்களின் நம்பிக்கைக்கு முரணானது. தொழிலாளர்களின் பொருளாதார நலனை உறுதி செய்து, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு உடனடியாக வட்டி குறைப்பு அறிவிப்பை திரும்பப்பெற்று, பழைய வட்டி விகிதத்தையே தொடர வேண்டும் என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
3. 07-02-1960-இல் அன்றைய முதல்வர் பெருந்தலைவர் கே.காமராஜர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்ட கல்வெட்டு, தற்போது புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் அமைக்கப்பெறாதது நியாயமற்றது. உடனடியாக பெருந்தலைவரின் கல்வெட்டி நிறுவி, “கல்விக்கண் திறந்த உன்னத தலைவர்” பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பெயரை பாளையங்கோட்டை பேருந்து நிலையத்திற்கு சூட்டி சிறப்பிக்க வேண்டும் என இக்கூட்டம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.
4. கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, சமையல் எண்ணெய் விலை பல மடங்கு உயர்ந்து வருகிறது. இந்தியா தனது உள்நாட்டு சமையல் எண்ணெய் தேவையில் 70% இறக்குமதி செய்கிறது. 1990-களில் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற இந்தியா, தற்போது இறக்குமதியை நம்பியிருப்பதும், 2017-ம் ஆண்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான சிறு இறக்குமதியாளர்களின் உரிமத்தை மத்திய அரசு புதுப்பிக்காமல் இருப்பதுமே எண்ணெய் விலையேற்றத்தின் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. சாமானிய மக்களை பெரும் பாதிப்புக்குள்ளாக்கும் சமையல் எண்ணெய் உட்பட பிற அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை மத்திய அரசு கவனத்தில் கொண்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
5. உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக் கிடையேயான போர் சர்வதேச அளவில் பொருளாதார தாக்கத்தையும், அந்நாட்டு மக்களின் உயிரிழப்புக்கு காரணமாக அமைவதால், இந்திய அரசும், ஐக்கிய நாடுகள் சபையும் இரு நாட்டு பிரச்சனை யில் தலையிட்டு, சமாதானப்புறாவாக செயல்பட்டு போர் நிறுத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
6. அரசுப் பள்ளிகளில் 6 – 12 வரை படித்து உயர்கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்ற தமிழக பட்ஜெட் வரவேற்கத்தக்க அம்சங்கள் கொண்டிருந்தாலும், தமிழக பட்ஜெட் வரவேற்கத்தக்க அம்சங்களை கொண்டிருந்தாலும், ₹90,116 கோடி அளவுக்கு நிகரக் கடன் பெற திட்டமிட்டு, 2023 இல் நிலுவைக் கடன் ₹6.53 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கும் என்பது வேதனைக்குரியது. தொலைநோக்கு திட்டங்கள் மற்றும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளின் வாயிலாக கடன் தொகையை குறைத்து, பட்ஜெட் அறிவிப்புகள் என்பதோடு நின்றுவிடாமல் பொருளாதார வளர்ச்சியை மென்மேலும் ஊக்குவிக்க வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
7. 2024 பாராளுமன்ற தேர்தலில், தலைவர் புரட்சிதிலகம் அவர்களின் கரங்களை பலப்படுத்தும் விதமாகவும், ஆட்சிப்பொறுப்பில் நமது கட்சி அங்கம் வகிக்கும் விதமாகவும் தமிழகமெங்கும் கட்சி வளர்ச்சியை முதன்மையாக கொண்டு தீவிரமாக மக்கள் பணியாற்றுவோம் என்று இக்கூட்டம் உறுதியேற்கிறது.
8. கிராமப்புற, நகர்ப்புற மாணவர்களுக் கிடையே நிலவும் சமூக, பொருளாதார வேறுபாடுகளை களையாமல், சமத்துவத்தை உருவாக்காமல், ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களின் வாய்ப்புகளை பறிக்கும் தடுப்பாக அமைந்துள்ள நீட் தேர்வுக்கு விலக்குக் கோரி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை தமிழக முதல்வர், ஆளுநரிடம் ஒப்புதலுக்கு அனுப்பிய நிலையில், நடப்பு கல்வியாண்டிலேயே தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்களித்து ஆணை பிறப்பிக்க வேண்டுமென மத்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
.9. கச்சத்தீவு பகுதியில் எல்லைத் தாண்டி மீன்பிடிப்பதாக கூறி 1983 முதல் தொடர்ந்து இலங்கை அரசு தமிழக மீனவர்களை கைது செய்தும், படகுகளை சிறைப்பிடித்தும், நாட்டுடைமையாக்கி, ஏலம் விட்டும் வருகிறது. இலங்கை அரசின் இந்த போக்கு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்குவதை உணர்ந்து, மத்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்கள் கைது நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
10. கட்டுமான பொருட்களின் விலை எதிர்பாராத அளவு உச்சத்திற்கு சென்றுள்ளதால், கட்டுமானத் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதை அரசு கவனித்து, உடனடியாக கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை கட்டுக்குள் வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
11. வேளாண்மைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்த தமிழக அரசின் அறிவிப்பில், கரும்பு டன் ஒன்றின் விலை ரூ.4000 என நிர்ணயிக்கப்படாததும், கள் இறக்குவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்குவதற்கான வழிமுறை இல்லாமல் இருப்பதும் வேதனைக்குரியது. இயற்கை பானமான கள் இறக்குவதற்கு தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
12. பல இடங்களில் தேர்தல் சமயங்களில் வாக்குக்கு பணம் கொடுப்பதாக, ஆதாரப்பூர்வமாக நிரூபணம் ஆகின்ற சூழலில் வருங்காலங்களில் நடைபெறவுள்ள தேர்தலில் எந்தவொரு பண அரசியலும் நிகழாமல் தடுக்கும் வகையில், தேர்தல் ஆணையம் கடுமையான நட்வடிக்கை எடுக்க வேண்டும். பண அரசியல் மக்களை நிர்பந்திக்காமல் இருந்தால் தான் உண்மையான ஜனநாயகம் தழைக்கும். மேலும், தேர்தல் சமயங்களில் வாக்கு சேகரிக்க செல்லும் போது கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் பிரச்சாரம் செய்ய தடை விதித்தால் தான் மதநல்லிணக்கம், ஒற்றுமை உணர்வு, எம்மதமும் சம்மதம் என்ற மதங்களுக்கு அப்பாற்பட்ட நல்லெண்ணம் வேரூன்றும் என்பதை தெரிவித்து, தேர்தல் ஆணையம் இத்தகைய சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
13. ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் சிரமத்திற்உ ஆளாகி வருகிறார்கள். அவரவர் பணிகளை உரிய நேரத்தில் மேற்கொள்ள போக்குவரத்து காலதாமதம் காரணமாக அமைவதால் ஸ்மார்ட் சிட்டி பணிகளை இரவு நேரங்களில் கூடுதல் பணியாளர்களை கொண்டு நிறைவேற்ற வேண்டும் என இக்கூட்டம் அரசை வலியுறுத்துகிறது.
14. தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கை மீறி கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அரசியல் குறுக்கீடின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்ததை வரவேற்று, தமிழக மக்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.