படம்: சபாபதி
நடிப்பு: என்.சந்தானம், ப்ரீத்தி வர்மா, எம்.எஸ்.பாஸ்கர், சாயாஜி ஷிண்டே, வம்சி, புகழ், உமா, மயில்சாமி, ரமா, வைஷ்ணவி, மதுரை முத்து,
தயாரிப்பு: சி.ரமேஷ்குமார்
இசை: சாம் சி.எஸ்.
ஒளிப்பதிவு: பாஸ்கர் ஆறுமுகம்
இயக்கம்: ஆர்.ஸ்ரீனிவாசராவ்
கணபதி வாத்தியார் என்கிற தமிழ் ஆசிரியர் எம் எஸ்.பாஸ்கர் மகன் சந்தானம். டிகிரி முடித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கிறார். அவர் லேசாக திக்கி பேசுவதால் தாழ்வுமனப்பான் மையும் சேர்ந்துக்கொள்கிறது. இந்நிலை யில் ஆசிரியர் வேலையிலிருந்து எம் எஸ் பாஸ்கர் ஒய்வு பெறுவதால் குடும்பத்தை சமாளிக்க சந்தானத்தை வேலைக்கு செல்ல வற்புறுத்துகிறார் . பல நேர்முக தேர்வுக்கு சென்றும் அவர் திக்கி பேசும் பழக்கத்தால் வேலை தர மறுத்துவிடு கின்றனர். இந்நிலையில் அவர் வாழ்க்கையில் விதி விளையாடுகிறது. தேர்தலின்போது பட்டுவாடா செய்ய அரசியல்வாதி எடுத்து செல்லும் 120 கோடி இருக்கும் கார் விபத்தில் சிக்கி எரிகிறது. இந்த சம்பவத்தில் 20 கோடி அடங்கிய பெட்டி மட்டும் சந்தானம் கையில் கிடைக்கிறது. அந்த பணத்தை பார்த்த சந்தானம் அதை உரியவரிடம் ஒப்படைக்க எண்ணி சாயாஜிக்கு தகவல் சொல்கிறார். அவர் நைசாக பேசி சந்தானத்திடமிருந்து பணத்தை பெற எண்ணுவதுடன் இந்த விஷயம் வெளியில் தெரியாமலிருக்க சந்தானத்தை கொல்ல முடிவு செய்கிறார். ஆனால் இந்த செயல் சாயாஜியையே பதம் பார்க்கிறது. இந்நிலையில் பணப் பெட்டி காணாமல் போன விஷயம் டிவி செய்தியில் வெளியாவதால் அந்த பெட்டியை என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கிறார் சந்தானம். இதன் முடிவு காமெடி கலந்த கிளைமாக்ஸுடன் நிறைவடைகிறது.
கடகடவென்று சரளமாக பேசி கமெண்ட் அடித்து சிரிக்க வைக்கும் சந்தானம் இதில் பேசுவதற்கே சிரமப்படும் திக்குவாய் வாலிபர் சபாபதியாக நடித்திருக்கிறார். இந்தபடத்தில் சந்தனத்தின் கலாய் காமெடி அம்பேல் என்று நினைத்தால் முழுவதுமாக ஆக்ஷன் காமெடி செய்து அரங்கை சிரிப்பலையில் அதிர வைக்கி றார்.
இதில் பலிகடா ஆவது அவரது தந்தையாக நடித்திருக்கும் எம் எஸ் பாஸ்கர்தான். ஏதாவது கேள்வி கேட்டால் உடனே பாஸ்கரை வம்பிழுத்து திணறடிப்பதும் அவரது தலையில் வாந்தி எடுப்பதும், பனியனை கிழித்து தொங்கவிடுவதுமாக சந்தானம் செய்யும் சேட்டைகள் வயிற்றை பதம் பார்க்கிறது. எதற்கெடுத்தாலும் தூக்கில் தொங்கிவிடுவேன் என்று பாஸ்கர் குடும்பத்தினரை மிரட்டுவதும் காமெடி கணக்கில் சேர்ந்து விடுகிறது.
வேலையிலிருந்து ரிடையர்டு ஆன வாத்தியாராக வரும் லொல்லு சபா சாமிநாதன் பெண்டாட்டி கையில் அடிபட்டு கதறுவது குபீர் சிரிப்பு.
அரசியல்வாதியாக சாயாஜி ஷிண்டே நடித்திருக்கிறார்.
ஹீரோயின் ப்ரீத்தி வர்மா அழகான பதுமைபோல் வந்து செல்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் காமெடிக்கு துணை நின்றிருக்கின்றன.
சி.ரமேஷ்குமார் தயாரித்திருக்கும் இப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார் ஆர்.ஸ்ரீனிவாசராவ். சந்தானத்தின் காமெடிக்கு மட்டுமல்லாமல் அவரது நடிப்பு திறனையும் வெளிக்கொண்டு வந்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் பாஸ்கர் ஆறுமுகம் காட்சிகளை அழகாக படம் பிடித்திருக்கிறார். சாம் சி.எஸ். இசையில் மெலடி பாடல்கள் சந்தானத்துக்கு புது ரசிகர்களை ஈர்த்துதரும்.
சபாபதி- காமெடி பாதி கதை பாதி.