சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி இன்று அறிவித்தார். வரும் ஜனவரி மாதம் புதிய கட்டசி தொடங்குவேன், டிசம்பர் 31ம் தேதி அதற்கான தேதி அறிவிப்பேன் என்று டிவிட்டரில் பதிவு செய்திருந்தார்.
இதுகுறித்து சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்தார். அவர் கூறியதா வது:-
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் சுற்றுப் பயணம் செய்வது ஆபத்து என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். என் உயிரே போனாலும் மக்களே முக்கியம் என களம் இறங்கி உள்ளேன். அரசியல் மாற்றம் தேவை. கட்டாயம் நிகழும்.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தோம். கொரோனாவால் என்னால் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செல்ல முடியவில்லை. 2017 டிசம்பர் 31-ல் அரசியலுக்கு வருவது உறுதி என கூறி இருந்தேன். தமிழகத்தில் அரசியல் மாற்றம் வந்தாகணும். எல்லாத்தையும் மாத்துவோம். நான் ஒரு கருவிதான். மக்கள்தான் எல்லாத்தையும் மாத்தணும்.
நான் ஒப்பந்தம் செய்துள்ள படத்தை முடித்து கொடுத்து விட்டு வருவேன். எனது கட்சிக்கு மேற்பார்வையாளராக தமிழருவி மணியனை நியமித்துள்ளேன். தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியை நியமித்துள்ளேன். எல்லோருக்கும் தலையெழுத்து இருக்கும். அதேபோல, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. எல்லோரும் சேர்ந்து மாத்துவோம். இப்ப இல்லேன்னா.. எப்பவும் இல்லே..
தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம்தான். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்து விட்டது. கொடுத்த வாக்கில் இருந்து என்றுமே தவறமாட்டேன். தேர்தலில் நான் வெற்றி பெற்றால் அது மக்களின் வெற்றி. என் உயிரே போனாலும் மக்களே முக்கியம் என களம் இறங்கி உள்ளேன்.
இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.
ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்குவது குறித்து அறிவிப்பு வெளியிட்டதும் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். அடுத்த ரஜினி தலையில்தான் தமிழகத்தின் ஆட்சி அமையும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.