Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பட அதிபர் ஏவிஎம் சரவணன் காலமானார்: திரை உலகம் இறுதி அஞ்சலி

புரட்சித்தலைவர் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் போன்ற பிரபல நடிகர்களின் மாபெரும் வெற்றி படங்களை தயாரித்த ஏவிஎம் நிறுவனத்தின் முக்கிய இயக்குநரும், தயாரிப்பாளருமான ஏவிஎம் சரவணன் (வயது 86) இன்று டிசம்பர் 4-ந் தேதி அதிகாலை காலமானார்.
கடந்த சில மாதங்களாக உடல்நலம் இல்லாமல் இருந்த நிலையிலும் அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக அவர் காலமானார். ஏவிஎம்
பட அதிபர் ஏவிஎம் சரவணன் மறைவுக்கு சரவணன் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கலை தெரிவித்தார். அத்துடன் பல்வேறு அரசியல் கட்சியை தலைவர்கள் இரங்கல் தெரிவித்தவுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமலஹாசன் உள்ளிட்ட ஏராளமான நடிகர் நடிகைகள் மற்றும் பட அதிபர்கள் இயக்குனர்கள் ஏவிஎம் சரவணன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.
ஏ.வி.எம். சரவணனின் பிறந்த நாள் நேற்று டிசம்பர் மூன்றாம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில், இன்று டிசம்பர் 4-ந் தேதி அதிகாலை அவர் காலமானது அவரது குடும்பத்தினரை துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஏவி எம் நிறுவனத்திற்கு நீண்ட வரலாறு உண்டு. அது பற்றி ஒரு பார்வை..

1945 ஆம் ஆண்டு ஏ.வி.மெய்யப்ப செட்டியாரால் நிறுவப்பட்டது ஏ.வி.எம். திரைப்பட நிறுவனம். ஏ.வி.மெய்யப்ப செட்டியாரின் மகன் எம். சரவணன் 1940-ம் ஆண்டு பிறந்தார். தந்தையின் ஏவிஎம் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பை இளம் வயதிலேயே ஏற்றுக் கொண்டார் சரவணன்.
சரவணன் நிர்வாகப் பொறுப்பை ஏற்ற பிறகு ஏ.வி.எம். நிறுவனம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்டது.

முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், என்.டி.ராமாராவ், ஜெயலலிதா ஆகியோர் ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த பல படங்களில் பணிபுரிந்து இருக்கிறார்கள்.

மறைந்த ஏவிஎம் சரவணன், இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பின் தலைவர், அகில உலகத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைவர், தமிழ்நாடு சுற்றுலா வாரியத்தின் பண்பாட்டுக் கழக இயக்குநர், சென்னை மாநகர செரீப் போன்ற பொறுப்புகளை வகித்தவர்.

தமிழக அரசின் கலைமாமணி விருது, புதுவை அரசின் பண்பின் சிகரம் போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.

ஏ.வி.எம். சரவணன் மறைவுக்கு திரை உலகினர், அரசியல் கட்சி தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது.
தமிழ்த் திரையுலகின் முதுபெரும் ஆளுமைகளில் ஒருவரும் வரலாற்றுப் புகழ்மிக்க AVM நிறுவனத்தின் முகமாகவும் திகழ்ந்த ஏவி.எம். சரவணன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். தமிழ்த்திரையுலகின் பாதையைத் தீர்மானித்து உருவாக்கியதில் ஏவி.எம். நிறுவனத்தின் பங்கு எவ்வளவு முக்கியமானதோ – அதே அளவுக்கு ஏவி.எம். நிறுவனத்தின் பாதையைத் தீர்மானித்ததில் திரு. சரவணன் அவர்களுடைய பங்கும் அளப்பரியது.

புதல்வராகவும் – திரைத்துறை ஆளுமையாகவும் “அப்பச்சி” என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட அவரது தந்தை மதிப்பிற்குரிய ஏவி.எம். அவர்களுக்குப் புகழ் சேர்த்தவர் சரவணன் அவர்கள். பேரறிஞர் அண்ணாவின் “ஓர் இரவு”, தலைவர் கலைஞரின் “பராசக்தி”, முரசொலி மாறன் அவர்களது “குலதெய்வம்” என ஏவி.எம். நிறுவனத்துக்கும் திராவிட இயக்கத்தின் திரைப்பயணத்துக்கும் நெடிய தொடர்புண்டு. அந்த பந்தம் குடும்பப் பாசமாகி, எங்கள் குடும்பத்துடன் நெருங்கிப் பழகியவர் ஏவி.எம்.சரவணன் அவர்கள்.

கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் ஏவி.எம்-மின் ஹெரிடேஜ் அருங்காட்சியகத்தை நான் பார்வையிடச் சென்றபோது, அந்த நினைவலைகளைப் பகிர்ந்து பாசமுடன் பழகினார். அமைதியும் எளிமையுமே பண்புநலமாகக் கொண்டு எல்லோரிடமும் அன்பொழுகப் பழகிய அவரது மறைவால் வாடும் ஏவி.எம் குடும்பத்தாருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என். இராமசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ”
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் துவக்கப்பட்ட நாள் முதல் மூத்த தயாரிப்பாளர்கவும், ஆயுட்கால உறுப்பினராகவும் இருந்து வந்த ஏ.வி.எம் சரவணன் அவர்கள் காலமானார் என்ற செய்தி திரைத்துறையில் உள்ள தயாரிப்பாளர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவருக்கும் பேரதர்ச்சியாகும்.
தமிழ் திரை உலகில் வி.சி.குகநாதன், எஸ்.பி. முத்துராமன், ஏ.சி. திருலோகசந்தர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், பாரதிராஜா, இராம நாராயணன், விசு, கே. ரங்கராஜ், ஆர்.வி. உதயகுமார், ஷங்கர் என முன்னணி இயக்குனர்கள் பலரும் ஏ.வி.எம்.-ல் பணியாற்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். மேலும் எம்.ஜி.ஆர். , சிவாஜி, கமல், ரஜினி, விஜயகாந்த், அஜித், பாக்யராஜ், பாண்டியராஜன் நடிகர்களின் படங்கள் மட்டுமல்ல சிறுமுதலீட்டில் தயாரித்த சிறப்பான படங்கள் உட்பட 150 படங்களுக்கு மேல் தயாரித்த நிறுவனம் ஏ வி எம்.மில் முக்கிய பங்கு வகித்தவர் சரவணன் அவர்கள்.
சிறு முதலீட்டில் ஏவி எம் தயாரித்த “சம்சாரம் அது மின்சாரம் ” படம் தேசிய விருது பெற்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்படத் தொழிலை மிக நேர்த்தியாக கையாண்ட நிறுவனம் ஏவிஎம் நிறுவனம். தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழி திரைப்படங்களிலும் கோலோச்சிய நிறுவனம்.
அவரது மறைவு திரைத்துறைக்கு மிகப்பெரிய இழப்பாகும். அவரது குடும்பத்தாருக்கும், ஏவிஎம் நிறுவனத்தின் ஊழியர்களுக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பிலும் ஒட்டுமொத்த தயாரிப்பாளர்கள் சார்பிலும்,ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது. ” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் T.G. தியாகராஜன், பொதுச் செயலாளர் T. சிவா மற்றும் நிர்வாகிகள் இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது/:

தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர்களில் ஒருவரான திரு.AVM. சரவணன் அவர்களின் மறைவு தமிழ் சினிமாவில் உள்ள அனைவருக்கும் வருத்தத்தை தந்துள்ளது.

தமிழ் சினிமாவில் பல வருடங்கள் கோலோச்சி வரும் AVM Productions-ன் நிறுவனர் திரு.ஏ.வி.மெய்யப்பனின் மகன்களில் ஒருவரான ஏவிஎம் சரவணன், தங்களது திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் நிர்வாக ரீதியாக பல்வேறு பொறுப்புகளை கவனித்துள்ளார். 50 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் பல முக்கிய, மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்களை தயாரித்துள்ளார். 1980-களில் தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றி, வணிக ரீதியில் பல வெற்றி படங்களை உருவாக்கியவர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் K. பாக்யராஜ் என பல முக்கிய நடிகர்களின் படங்களை தயாரித்து மாபெரும் வெற்றிகளை கண்டவர். எளிமைக்கும், பண்புக்கும், நட்புக்கும், தூய்மையான எண்ணங்களுக்கும் சொந்தக்காரர். தமிழ் நாட்டின் பல முதலமைச்சர்களுடன் நெருக்கமாக இருந்தவர். சென்னை நகரின் SHERIFF-ஆக பணியாற்றியவர்.

இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பின் (Film Federation of India) தலைவர் பொறுப்பையும் இவர் கவனித்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார். தனது தூய்மையின் அடையாளமாக வெள்ளை நிற ஆடையை மட்டுமே அணிந்தவர்.

திரைப்பட தயாரிப்பு துறையை பற்றி தெரிந்து கொள்ள அவர் எழுதிய ‘நானும் சினிமாவும்’ மற்றும் ‘முயற்சி திருவினையாக்கும்’ போன்ற புத்தகங்களையும், அவரின் பேட்டிகளை பார்த்தாலே போதும். அப்படிப்பட்ட ஒரு மாமனிதரை இழந்து வாடும் AVM குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அறிகையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

சீமா பிஸ்வாசின் சம்பல் டு குலசேகரபட்டின பயணம்

Jai Chandran

த வெ க மாநாடு விஜய் திடீர் அறிக்கை

Jai Chandran

Varun Dhawan talks about Bhediya

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend