Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

‘பன்றிக்கு நன்றி சொல்லி’ ஹீரோவை நடுநிசியில் விரட்டிய பிளாட்பாரவாசிகள்..

சமீபத்தில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சோனிலிவ் தளத்தில் வெளியிட்ட ‘பன்றிக்கு நன்றி சொல்லி’ திரைப்படம் அதன் வித்தியாசமான கதையம்சத்திற்காக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. பாலா அரன் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் சினிமாவில் இயக்குனராக போராடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிஷாந்த் ரூஸோ, யார் இவர் என ரசிகர்களின் கவனத்தில் பதியும் விதமாக தனது பங்களிப்பை தந்துள்ளார்.

கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி எடுத்துக்கொண்ட நிஷாந்த் ரூஸோ-விற்கு நண்பர் ஒருவர் மூலமாக 2018ல் ‘ஆண்டனி’ என்கிற படத்தில் கதாநாயகனாக சண்டக்கோழி வில்லன் நடிகர் லாலுக்கு மகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது..

அந்தப்படத்தின் படப்பிடிப்பு நடந்த சமயத்திலேயே இயக்குனர் பாலா அரனிடமிருந்து பன்றிக்கு நன்றி சொல்லி படத்தில் நடிக்கும் அழைப்பு வந்து, ஆடிசனிலும் தேர்வானார் நிஷாந்த் ரூஸோ. தற்போது அந்தப்படத்திற்கு கிடைத்துவரும் பாசிடிவ் விமர்சனங்களால் உற்சாகமாக இருக்கிறார் நிஷாந்த் ரூஸோ.

“இந்தப்படத்தில் பல காட்சிகளை யாரும் அறியாதவண்ணம் படமாக்கினோம்.. கோவையில் நள்ளிரவில் பிக்பாக்கெட் திருட்டு ஒன்றை படமாக்கியபோது, இயக்குனர் கட் சொன்னது கூட கேட்காமல் நானும் உடன் நடித்தவரும் சற்று தூரம் தள்ளி வந்துவிட்டோம்.. ஆனால் வழியில் எங்களை நிறுத்திய போலீஸார் எனது கிழிந்த உடை, உடன் நடித்தவரின் முகம் எல்லாவற்றையும் பார்த்து, சம்பவம் நிஜமாகவே நடந்திருக்கிறதோ என்கிற அளவுக்கு சந்தேக்கப்பட்டு ஜீப்பில் ஏற்றும் அளவுக்கு தயாராகி விட்டார்கள். ஒரு வழியாக படப்பிடிப்பு நடக்கிறது என கூறி, அனுமதி கடிதத்தை காட்டிய பின்னரே அங்கிருந்து சென்றனர்.

அதேபோல சைதாப்பேட்டை பகுதியில் இரவு நேர படப்பிடிப்பில் சாலை வழியாக ஓடும் காட்சிகளை படமாக்கினோம்.. படப்பிடிப்பு நடைபெறுவதற்கான அறிகுறியே இல்லாததால் நாங்கள் ஓடுவதை பார்த்து பிளாட்பாரத்தில் உறங்கிக்கொண்டு இருந்தவர்கள் திடுக்கிட்டு விழித்து, எங்களை விரட்ட ஆரம்பித்தனர்.. இப்படி பல சுவாரஸ்யங்கள் அந்தப்படத்தின் படப்பிடிப்பில் நடந்தன.

இந்தப்படத்தின் டைட்டில் ஒரு மாதிரி இருக்கிறதே என்று கூட ஆரம்பத்தில் பலர் கேட்டார்கள்.. ஆனால் இந்தப்படத்தின் டைட்டில் தான் ஸ்டுடியோகிரீன் ஞானவேல்ராஜா சாரின் கவனத்தை ஈர்த்து அவரையே இந்தப்படத்தை பார்க்க வைத்தது. படத்தை பார்த்த மறுநாளே அவரே படத்தை வெளியிடுவதாக கூறவும் வைத்தது.

தற்போது நானும் விவேக் பிரசன்னாவும் நடித்துள்ள சர்வைவல் ஆக்ஷ்ன் திரில்லர் படம் ஒன்று ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்தப்படத்தின் டைட்டில் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

அடுத்ததாக ஸ்போர்ட்ஸ் ஜானரில் ‘யார்க்கர்’ எனும் படத்தில் நடிக்கிறேன்.. பன்றிக்கு நன்றி சொல்லி படத்தை பார்த்துவிட்டு சில தயாரிப்பாளர்களும் என்னை பாராட்டியதுடன் விரைவில் இணைந்து பணியாற்றலாம் என நம்பிக்கை கொடுத்துள்ளனர்.. இந்தப்படங்களின் மூலம் அடுத்தடுத்து நல்ல வாய்ப்புகள் வரும் என காத்திருக்கிறேன்” என்கிறார் நிஷாந்த் ரூஸோ நம்பிக்கையுடன்…

Related posts

ஹபீபி பட பாடலை வெளியிட்ட தமிழக முதல்வர்

Jai Chandran

20 ஆண்டுக்கு பிறகு இணையும் மோகன்லால்- மம்முட்டி

Jai Chandran

Aranmanai3 – Only 7 days to go.

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend