படம்: பறந்து போ
நடிப்பு: சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, மிதுல் ராயன், விஜய் யேசுதாஸ், அஜ்ஜு வர்கிஷ், பாலாஜி சக்திவேல், ஸ்ரீஜா ரவி
தயாரிப்பு: ராம், வி.குணசேகரன்
இசை: சந்தோஷ் தயாநிதி
பின்னணி இசை: யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு: ஏகாம்பரம்
இயக்கம்: ராம்
பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்
கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி பேரன்பு போன்ற படங்களை இயக்கிய ராம் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் பறந்து போ.
ராம் படம் என்றாலே ஒரு முத்திரை இருக்கும். அதாவது நெஞ்சை நெகிழ வைக்கும் காட்சிகள், கண்களை குளமாக்கும் பாடல்கள், பாசத்தை நெஞ்சுக்குள் அள்ளிக் ஊற்றும் பாசப் போராட்டம் என சொல்லிக் கொண்டே போகலாம் ஆனால் பறந்து போ முற்றிலும் ஒரு மாறுபட்ட நகைச்சுவை படையல் படைக்கும் தந்தை மகனுக்கும் இடையேயான ஒரு பாச கதையாக உருவாகி இருக்கிறது.
திரையுலகில் உள்ள பிரபல இயக்குனர்கள் எல்லோருமே பறந்து போ பார்த்துவிட்டு படத்தை வரிக்கு வரி பாராட்டி மகிழ்ந்தது சமீபத்தில் நடந்த விழாக்களில் கண் முன் தெரிந்தது. ராம் தங்களுக்கு தெரிந்தவர் என்பதற்காக இப்படி பாராட்டுகிறார்கள் என்றுதான் முதலில் தோன்றியது ஆனால் படத்தை பார்த்த பிறகுதான் அவர்கள் சொன்னதில் இருந்த உண்மை புரிந்தது.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த கோகுல் (சிவா) சிறு சிறு வியாபாரம் செய்து தனது மகனை பெரிய பள்ளியில் படிக்க வைக்கிறார். இதற்காக கோகுலின் மனைவி குளோரியும் (கிரேஸ் ஆண்டனி) புடவை வியாபாரம் செய்து ஒரு பக்கம் சம்பாதிக்கிறார். இவர்களின் மகன் அன்பு (மிதுல் ரியான்) வீட்டுக்குள்ளேயே இருந்து படுசுட்டியாக வளர்கிறான். அப்பா அம்மா இருவரும் வேலைக்கு சென்று விடுவதால் பல நாட்கள் தனிமையில் அன்பு நேரத்தை கழிக்க வேண்டியிருக்கிறது. இதில் அவன் மன வேதனை அடைகிறான். தன்னை தனது தந்தை வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும் என்று அடம் பிடிக்கிறான். அவனது உணர்வை புரிந்து கொண்டு பைக்கில் நீண்ட தூரம் ரோட் ட்ரிப் செல்கிறார் கோகுல். அவர்கள் போகும் வழியில் நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதையாக அமைக்கப்பட்டிருக்கிறது. வளைந்து நெளிந்து செல்லும் நதிகளை போல் திரைக்கதையும் இஷ்டம் போல் வளைந்து நெளிந்து செல்கிறது அது இல்லற கடலை அடைந்ததா என்பதுதான் கிளைமாக்ஸ்.
இதுவரை நடிகர் சிவாவை ஒரு நகைச்சுவை ஹீரோவாகத்தான் பார்த்துக் கொண்டிருந்தோம் அவரை இயக்குனர் ராம் “இங்கே வா, இந்த வேடத்தை ஏற்று நடி. அழு, சிரி, ஓடு, பிள்ளை பாசம் காட்டு, மலை ஏறு, மலை இறங்கு என்று அவரது பெண்டை நிமிர்த்தி இத்தனை காலம் நடிப்பதாக சொல்லி ஏமாற்றி வந்த சிவாவுக்கு நடிக்க தெரிந்த நபர் தான் சிவா என்ற சர்டிபிகேட்டை இப்படம் மூலம் வழங்கியிருக்கிறார் இயக்குனர் ராம்.
சிவாவுக்குள் இப்படி ஒரு நடிகன் ஒளிந்திருக்கிறானா என்று ஆச்சரியப்பட வைக்கும் வகையில் தனது நடிப்பை பக்கெட் பக்கெட்டாக கொட்டியிருக்கிறார். அதேசமயம் தனது நகைச்சுவை பஞ்ச்களையும் ஆங்காங்கே அவர் சேர்ந்திருப்பது புதிய கலவையாக சுவை கூட்டுகிறது.
மலைமேல் ஏறி நின்று தன் தந்தை சிவாவை மலைக்கு மேல் வரச் சொல்லி மகன் அன்பு அழைப்பதும் வேறு வழி இல்லாமல் கால்களில் நடுக்கம் வரும் அளவுக்கு சிவா மலை ஏறி ஏறி செல்வதெல்லாம் அவருக்கு மட்டுமல்ல படம் பார்க்கும் ரசிகர்களுக்கே மூச்சிறைக்கிறது. சிவாவின் நடிப்புக்கு ஏற்ற அப்பா ரொம்ப பாவம் ஒரு பொருத்தமான பாடலை நடிகர் சித்தார்த் பாடி அசத்தியிருக்கிறார்.
தன் மகனை மரத்திலிருந்து இறக்கிவிட்டு சிவா மரத்தின் மீது சிக்கி கொள்வதும் அந்த நேரம் பார்த்து அங்கு வரும் மனைவி கிரேஸ் அவரை,”டேய் கோகுல் கீழே இருங்குடா என்று மலையாள வாடை கலந்த தமிழ் பேசி சத்தம் போட்டு அழைத்து, கல் எடுத்து அடிப்பது அரங்கை குபீர் சிரிப்பில் ஆழ்த்துகிறது.
அதேபோல் மகன் முன் தோற்க கூடாது என்பதற்காக விஜய் யேசுதாஸ் உடன் சிவா போட்டி நடனம் ஆடி எனர்ஜி இழந்து தள்ளாடும்போது உச் கொட்ட வைக்கிறார்.
அஞ்சலி சிவாவின் கிரஷ் ஆக வந்து கலகலக்க வைக்கிறார். அஞ்சலியின் கணவராக வரும் அஜ்ஜு வர்கிஸ் முகத்தை இனி தமிழில் அடிக்கடி காணலாம்.
சந்தோஷ் தயாநிதி இசையில் ஒன்பதுக்கும் மேற்பட்ட பாடல்கள் இருந்தாலும் அது கதையின் ஓட்டத்தை தடை செய்யாமல் ஒரு இசையாக லியிக்ச் செய்து அழைத்துச் செல்கிறது
யுவன் சங்கர் ராஜா பின்னணி இசை இன்னொரு பிளஸ்.
ஏகாம்பரம் கேமராவை தூக்கிக்கொண்டு எப்படித்தான் மலை ஏறி இறங்கி, மரம் ஏறி இறங்கி காட்சிகளை பதிவு செய்தாரோ தெரியவில்லை. அவரது உழைப்பும் படத்தை எந்த ஸ்டாப்பிங்கிலும் நிறுத்தாமல் பாயிண்ட் டு பாயிண்ட் பஸ் போல் பறந்து கூட்டிச் செல்கிறது.

மாரி செல்வராஜ் உள்ளிட்ட இயக்குனர்கள் சிலர் இயக்குனர் ராமை தங்களது குரு என்கிறார்கள். இடைவெளி விட்டு படத்தை இயக்கினாலும் குரு குரு தான் என்று நிரூபித்திருக்கிறார் ராம்.
பறந்து போ – கவலை பறந்து போகும்
நகரம் வெறுத்து போகும்
கிராமம் பறந்து வரும்.

By ஜெயச்சந்திரன். க.
Trendingcinemasnow. com
