படம்: மர் மர்
நடிப்பு:ரிச்சி கபூர் ,தேவ்ராஜ் ஆறுமுகம்,.சுகன்யா ஷண்முகம்,
யுவிகா ராஜேந்திரன்,
அரியா செல்வராஜ்,
தயாரிப்பு: பிரபாகரன்
சவுண்ட் டிசைன்: கெவின் பிரெட்ரிக்
ஒளிப்பதிவு: ஜேசன் வில்லியம்ஸ்
இயக்கம்: ஹேம்நாத் நாராயணன்
பிஆர்ஓ: ஸ்ரீ வெங்கடேஷ்
யூடியூப்பிற்கு குறும்படம் எடுப்பதற்காக நான்கு பேர் குழு ஜவ்வாது மலைக்கு செல்கிறது. அப்பகுதியில் மங்கை என்ற பேய் இருக்கிறது மேலும் சப்த கன்னிகள் 7 பேர் பௌர்ணமி அன்று அங்குள்ள குளத்தில் வந்து குளிப்பார்கள் என்றும் ஒரு பேச்சு இருக்கிறது. அதை நேரடியாக படம்பிடிக்க இந்த யூடியூபர்கள் செல்கின்றனர். காட்டுக்குள் அவர்கள் எதிர்பாராத அமானுஷ்யர்களை கண்டு அதிர்ச்சி அடைகின்றனர். சிலர் திடீரென்று காணாமல் போகிறார்கள். அவர்களால் மங்கை பேயை பார்க்க முடிந்ததா, சப்த கன்னிகளை நேரில் கண்டார்களா என்ற கேள்விகளுக்கு திகிலுடன் பதில் அளிக்கிறது மர் மர்.
ஜவ்வாது மலைப்பகுதியில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. உண்மையில் நடந்த ஒரு சம்பவத்தை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
சினிமா பாணியில் இல்லாமல் கையில் கிடைத்த கேமராவைக் கொண்டு எப்படி எல்லாம் யூடியூபில் படம் எடுப்பார்களோ அப்படியே காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
:ரிச்சி கபூர் , தேவ்ராஜ் ஆறுமுகம்,
சுகன்யா ஷண்முகம்,
அரியா செல்வராஜ் இந்த நான்கு பேர்கள் தான் காட்டுப்பகுதிக்குள் பேயையும் கன்னிகளையும் படமாக்க செல்கிறார்கள். அவர்களுக்கு வழி காட்டுவதற்காக யுவிகா செல்கிறார்.
அடுத்தடுத்து காட்சிகள் வேகமாக நகரும் என்று எதிர்பார்த்தால் காட்டுக்குள் ஒரு இடத்தில் முகாம் அமைத்து விட்டு கேமராவையும் ஒரு இடத்தில் வைத்துவிட்டு பேசுகிறார்கள் பேசுகிறார்கள் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். தம்மடிக்கிறார்கள், தண்ணி அடிக்கிறார்கள் மறுபடியும் தம்மடிக்கிறார்கள் இப்படியே காட்சி நகர்கிறது. அவர்கள் தங்களுக்குள் நடத்தும் உரையாடலும் கூடவே செல்கிறது.
எவ்வளவு நேரம் தான் இப்படி செய்வீங்க என்று தியேட்டரில் முணுமுணுப்பு எழ ஆரம்பித்த நிலையில் மெதுவாக இடம் மாறி வேறு இடத்துக்கு சென்று முகாம் அமைக்க பின்னணி இசையே இல்லாமல் அமைதியான நிலையில் இலை சத்தமும் ஏதோ படபடக்கும் சத்தமும் அரங்கை மயான அமைதியாக்குகிறது.
திடீரென்று மர கிளை முறிந்துவிழும் சத்தம், யாரோ சருகுகள் மீது நடக்கும் சத்தம் என்று லேசாக பயமுறுத்த தொடங்கி அரங்கில் நடுக்கத்தை தொடங்கி வைத்து விடுகிறார் சவுண்ட் டிசைனர் .
ஜேசன் வில்லியம்ஸ்வின் கேமிரா முதலில் சில காட்சிகளில் தலை சுற்ற வைக்கிறது.
பேய் வருகிறதா? கன்னி வருகிறதா? என்பதற்கெல்லாம் கிளைமாக்சில் உடல் ஜில்லிடும் வகையில் பதில் அளிக்கிறார் இயக்குனர் ஹேம்நாத் நாராயணன். ஆங்காங்கே வரும் சரமாரி கெட்ட வார்த்தை அர்ச்சனைகள் சலசலப்பை ஏற்படுத்துகிறது.
மர்மர் – எடிட் செய்யாத பேய் படம் பார்த்த அனுபவம்.