ஜெயம், எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற ஜனரஞ்சகமான வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் மோகன் ராஜா.
இவரது இயக்கத்தில் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் 153-வது திரைப்படத்திற்கு இன்று மிக பிரம்மாண்டமாக பூஜை நடத்தப்பட்டது. ஃபிலிம் நகரில் உள்ள சூப்பர் குட் ஃபிலிம்ஸ் அலுவலகத்தில் இப்பூஜை நடத்தப்பட்டது.
திரைப்படம் குறித்து இயக்குநர் மோகன் ராஜா பேசும்போது, “மெகாஸ்டார் சிரஞ்சீவியின் திரைப்படத்தை இயக்குவது என்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கிகாரமாக கருதுகிறேன். அவருடைய ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நிச்சயமாக இத்திரைப்படம் உருவாக்கப்படும். நாங்கள் ஒரிஜினல் கதையை அப்படியே ரீமேக் செய்யவில்லை. மூலக்கதையை எடுத்துக் கொண்டு மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஏற்ப கதையை மெருகேற்றி மாற்றியிருக்கிறோம்” என்றார்.
திரைப்பட பூஜையில் அல்லு அரவிந்த், அஸ்வினி தத், டிவிவி தனய்யா, நிரஞ்சன் ரெட்டி, மெகா பிரதர் நாகபாபு, இயக்குநர் கொரட்டல்லா சிவா, தயரிப்பாளர்கள் தாகூர் மது, ஜெமினி கிரண், எழுத்தாளர் சத்யானந்த், மெஹர் ரமேஷ், பாபி, ராம் அசந்தா, கோபி அசந்தா, மிர்யாலா ரவீந்தர் ரெட்டி, நவீன் யெர்ரேனி, ஷிரிஷ் ரெட்டி, யுவு கிரியேஷன்ஸ் விக்க்கி மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டு கவுரவித்தனர்.
கொனிடெலா தயாரிப்பு நிறுவனம், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் மற்றும் என்.வி.ஆர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தைத் தயாரிக்க ஸ்ரீமதி சுரேகா கொனிடெலா வழங்குகிறார். திரைப்படத்தை மோகன் ராஜா இயக்குகிறார். இந்த மெகா திரைப்படத்திற்கு தூள் பறக்க இசையமைக்கிறார் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தமன். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். வசனம் லக்ஷ்மி பூபால், கலை சுரேஷ் செல்வராஜன், லைன் புரொடியூசர் வக்கடா அப்பாராவ்.
திரைப்படம் குறித்து தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி மற்றும் என்.வி.பிரசாத் கூறுகையில், “வரும் பிப்ரவரி மாதம் முதல் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளோம். இயக்குநர் மோகன் ராஜா திரைக்கதையில் பல புதுமைகளைப் புகுத்தி மண்ணின் மனம் கமழச் செய்துள்ளார். இந்தத் திரைப்படம் நிச்சயமாக மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட்டாக அமையும். சிரஞ்சீவியின் நடிப்புப் பயணத்தில் ஒரு மைல்கல் திரைப்படமாக இருக்கும்” என்றனர்.
படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகையர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்தது. இந்தத் திரைப்படத்தை ஸ்ரீமதி சுரேகா கொன்னிடெலா வழங்குகிறார்.