லஞ்ச ஊழலை கட்டுப்படுத்திட
“சேவை பெறும் உரிமை சட்டத்தை” தமிழகத்தில் அமல்படுத்தக் கோரிமக்கள் நீதி மய்யம் சார்பில் அளித்த மனு விவரம்:
அனுப்புநர் :
மாவட்ட செயலாளர்,
பெறுநர் :
மாவட்ட ஆட்சியர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
பொருள்: இலஞ்ச ஊழலைக் கட்டுப்படுத்தி, பொதுமக்கள் அரசு சேவைகளை விரைவாகப் பெற்றிட வழிவகுக்கும்
சேவை பெறும் உரிமை சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்தக் கோரிக்கை ( Demanding the enactment of RIGHT TO SERVICES ACT in Tamilnadu )
வணக்கம்,
ஜனநாயகத்தின் மன்னர்களான மக்கள் தரும் வரிப்பணத்தில் இயங்கும் அரசு நிர்வாகமானது துரிதமாகச் செயல்பட்டு அரசின் சேவைகளை எளியமுறையிலும்-விரைவாகவும் மக்களுக்குச் சென்று சேர்க்கவேண்டும். இன்றைய நிலை அப்படியில்லை. பல்வேறு காரணங்களால், அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள் ;
இலஞ்சம் கொடுத்துத்தான் அரசு சேவைகளைப் பெறமுடியும் என்ற நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள். இதன் பின்புலத்தில் பல்வேறு அரசியல் காரணங்கள் உள்ளதாக அறிகிறோம்.
நேர்மையாகச் செயல்பட விரும்பும் அரசு அலுவலர்கள்கூட நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுவதை கண்கூடாகப் பார்க்கிறோம். இதனால் ரேஷன் அட்டை, குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் உள்ளிட்ட அடிப்படை அரசு சேவைகளில் தொடங்கி தொழிற்சாலை துவங்க, உற்பத்தி செய்த பொருட்களை ஏற்றுமதி செய்ய அனுமதி பெறுவது வரையிலான அனைத்து அரசு சேவைகளும் குறித்த காலத்திற்குள் கிடைத்துவிடும் என்பதற்கு உத்தரவாதமில்லாத நிலை உருவாகிவிட்டது. இந்த நிலையை மாற்றி, விரைவான-தரமான அரசுசேவைகளைக் பெறுவதற்கு வழிவகுக்கும் ”சேவை பெறும் உரிமைச் சட்டத்தைத்(Right to Services Act) தமிழகத்தில் கொண்டுவரக்கோரி மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக இம்மனுவினைச் சமர்ப்பிக்கிறோம்.
அரசு நிர்வாகத்தில், மக்களுக்கு வழங்கவேண்டிய பல அரசு சேவைகளுக்கு கால நிர்ணயம் செய்யப்பட்டு ‘குடிமக்கள் சாசனம் – Citizen Charter’ ஏற்கனவே வரையறுக்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு அரசு சேவையும், இத்தனை நாட்களுக்குள் வழங்கப்படவேண்டும் என்பதை உறுதி செய்வதுதான் “குடிமக்கள் சாசனத்தின்” அடிப்படை நோக்கம்.
அரசு அலுவலகங்களில், விளம்பரமாக இவை பார்வைக்கு இருந்தாலும் கூட அவை நடப்பில் சரியாக செயல்படுத்தப்படுகிறதா என்பது பெரும்பாலான இடங்களில் கேள்விக்குறியாகவே உள்ளது. இவ்வாறான கால நிர்ணயம் இல்லாத அரசு சேவை வெளிப்படைத்தன்மையை மறைத்து நிர்வாகத்தில் லஞ்சத்தையும், ஊழலையும் ஊக்குவிக்கிறது. அமைப்பு ரீதியாக இவற்றில் தேவையான சீர்திருத்தம் வரும்வரை, மக்களுக்காக உருவாக்கப்பட்ட ‘குடிமக்கள் சாசனம்’ என்பது பெயரளவில் மட்டுமே இருக்கும். இதைத் தவிர ‘குடிமக்கள் சாசனம்’ இல்லாத அரசு சேவைகளும் தமிழகத்தில் உண்டு. இந்த சேவைகளுக்கும் ‘குடிமக்கள் சாசனம்’ கட்டாயமாக்கப்பட வேண்டும். அப்போதுதான் மக்கள் அலைக்கழிக்கப்படாமல் அவர்களுக்கான அரசு சேவைகள் காலதாமதமில்லாமல் அவர்களைச் சென்றடையும். குடிமக்கள் சாசனம் இருந்தும் அவை செயல்படுத்தப்படாத அரசுத் துறையிலும், குடிமக்கள் சாசனம் இல்லாத அரசுத் துறையிலும் கால நிர்ணயத்துடன் கூடிய அரசு சேவையை உறுதிப்படுத்த தமிழகத்தில் ‘சேவை பெறும் உரிமை சட்டம்’ அமல்படுத்தப்பட வேண்டும்.
தகவல் பெறும் உரிமை சட்டத்தில் எவ்வாறு முறையீடு, மேல்முறையீடு ஆகியவற்றின் மூலம் குறித்த காலத்திற்குள் மனுதாரர் தகவலைப் பெற முடியுமோ, அதே போல் குடிமக்கள் சாசனத்தில் வரையறுக்கப்பட்டபடி அரசு சேவை கிடைக்காத பட்சத்தில், அதற்கு காரணமான அரசு ஊழியர் கேள்விக்கு உட்படுவார் என்பதை இந்த ‘சேவை பெறும் உரிமை சட்டம்’ உறுதிப்படுத்துகிறது. இந்த சட்டத்தின்படி கேள்விக்கு உட்படுத்தப்படும் உயரதிகாரி மக்களுக்கு சரியான எழுத்துப்பூர்வமான பதிலைத் தர வேண்டும். அந்த நிலை வரும்போது நிச்சயம் கால தாமதமில்லாத சேவை மக்களுக்கு கிடைக்கும்.
கால தாமதம் செய்த அரசு ஊழியரின் மீது நடவடிக்கை – அதாவது கால தாமதம் செய்யும் ஒவ்வொரு நாளுக்கும் அவருக்கு அபராதமாக ஒரு குறிப்பிட்ட தொகை அந்த ஊழியரின் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்பட்டு, அந்த பணம் பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு வழங்கப்படும் என்ற நிலையை “சேவை பெறும் உரிமைச் சட்டத்தின்” வழியாக உருவாக்கிவிட்டால் முழுமையான அரசு சேவை அங்கு நிறைவேறும். குடிமக்கள் யாவருக்கும் அரசின் மீது நம்பிக்கை பிறக்கும். ஜனநாயகம் அங்கு தழைத்தோங்கும்.
அரசு அலுவலர்களின் பொறுப்புடைமையை(Accountability) அதிகரித்து, அரசு சேவைகளின் தரத்தை உறுதிப்படுத்தி, மக்களை அதிகாரப்படுத்தும் ‘சேவை பெறும் உரிமை சட்டமானது’ தமிழகத்திலும் அமல்படுத்தப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் ஏற்கனவே பலமுறை கோரிக்கை விடுத்துள்ளது. 7.1.2022 தேதியன்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் இச்சட்டத்தைக் கொண்டுவரக்கோரி விரிவான அறிக்கை விடுத்துள்ளார் ( இணைப்பில் அறிக்கை )
மத்திய பிரதேசம், பீகார்,டெல்லி, கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் இச்சட்டமானது நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. பின்தங்கிய மாநிலமாக சொல்லப்படும் பீகாரில் நிறைவேற்றப்பட்டு 11 ஆண்டுகள் ஆகிவிட்டன. டெல்லியில் சில அரசு சேவைகள் மக்களின் இல்லம் தேடிக் கொண்டுபோய் சேர்க்கப்படுகிறது. அது போல் இல்லாவிட்டாலும் தமிழகத்தில், சேவை பெறும் உரிமை சட்டத்தை அமல்படுத்தி, அரசு சேவைகள் அனைத்தும் காலதாமதமில்லாமலும், லஞ்சமில்லாமலும் நடக்கும் வண்ணமாவது தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்யுமாறு மக்கள் நீதி மய்யம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது.
இப்படிக்கு,
மாவட்ட செயலாளர்
பின்குறிப்பு: காலதாமதமின்றி, விரைவாக அரசு சேவைகள் வழங்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி “கடிகாரம் ஏந்திய கைகளோடு” இம்மனுவைத் தங்களிடம் சமர்ப்பிக்கிறோம்.
