தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் குறித்து மக்கள் நீதி மய்யம் விவசாய அணி மாநில செயலாளர் ஜி.மயிசாமி வெளியிட்டுள்ள. அறிக்கை:
வேளாண் பட்ஜெட்டில் சூரியசக்தி மோட்டார் அமைக்க மானியம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், தேனீ வளர்ப்புக்கான நிதி ஒதுக்கீடு, பனை விதைகள் வழங்குதல் போன்ற நல்ல அறிவிப்புகள் இருக்கின்றன. இவற்றை வரவேற்கிறோம்.
ஆனால், இதுவரையில் முன்வைக்கப்பட்ட உற்பத்திப் பொருட்கள் பாதுகாப்பு, போக்குவரத்து, உட்பட பல்வேறு வேளாண் சிக்கல்களுக்கு இந்த பட்ஜெட்டிலும் தீர்வு காணப்படவில்லை. விவசாய விளைபொருட்கள் சந்தையை வந்தடையும் வரை விவசாயப் பெருமக்கள் சந்திக்கும் இடைநிலை செலவுகளைக் குறைக்கும் தீர்வு இந்த பட்ஜெட்டில் இல்லை. உழவர் சந்தைக்கு விவசாயிகள் நேரடியாகத் தங்கள் பொருட்களை எடுத்துச் செல்வதற்கான வழிகள் சொல்லப்படவில்லை.
கிராமப்புற நெல் கொள்முதல் மையங்களின் சீரமைப்பு, அங்கு தேங்கிக் கிடக்கும் நெல்மூட்டைகளின் போக்குவரத்து ஆகியவற்றுக்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக, வேளாண் பெருமக்கள் தங்கள் கடின உழைப்பின் பயனான நெல்மூட்டைகளுடன் வெட்டவெளியில் காத்திருக்கும் அவலம் இன்னும் நீடிக்கிறது. விவசாய விளைபொருட்களைப் பாதுகாப்பதற்கும், அவற்றைச் சந்தைப்படுத்தும் போக்குவரத்துக்கும் தொடர்புடைய உதவிகள், மானியங்கள் பற்றி பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லாததும், நெல் கொள்முதல் மையங்களில் நிலவும் ஊழல் மற்றும் முறையற்ற நடவடிக்கைகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் வாட்டத்தைப் போக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததும் ஏமாற்றம் அளிக்கிறது.
பொது பட்ஜெட்டில் பெண்களுக்கான உரிமைத் தொகை பற்றிய அறிவிப்பு இல்லாததைப் போலவே வேளாண் மகளிருக்கான உதவித் தொகை பற்றிய அறிவிப்பும் பேச்சளவிலேயே நிற்கிறது. குறைந்தபட்சம் தகுதியுடைய பயனாளிகளின் பட்டியலைத் தயாரிக்கும் அடிப்படைப் பணிகள்கூட தொடங்கவில்லை என்பது இந்த அரசுக்கு பெண்கள் மீது, குறிப்பாக வேளாண் மகளிர் மீது இருந்த கரிசனம் தேர்தல் காலத்தோடு முடிவடைந்துவிட்டதாகவே தெரிவிக்கிறது.
தமிழகத்தின் பசி தீர்க்கும் விவசாயக் கூலிவேலை செய்யும் மக்கள் வாழ்க்கைத் தரம் மேம்படவும், அவர்களின் பிள்ளைகளுக்கான கல்வி மேம்படவும் மக்களுக்கான இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது, அல்லது வருங்காலத்தில் எடுக்கப் போகிறது?
சூரியகாந்தி எண்ணெய்க்கு மாற்றான எண்ணெய் உற்பத்தி தொடர்பான விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய சூழல் உருவாகி வரும் நிலையில் இந்த பட்ஜெட்டில் அதுபற்றிய அறிவிப்புகள் எதுவும் இல்லை.
மராமத்து தேவைப்படும் நீர்நிலைகள் மற்றும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நீர்நிலைகளை நீர்ப்பாசனத்துக்கு உபயோகிக்கத்தக்கவையாக மாற்ற என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்? கிணறுகளை மேலும் மேலும் ஆழப்படுத்தி, அதிக சக்திவாய்ந்த மோட்டார்களைப் பயன்படுத்தி பாசனம் செய்வதைக் காட்டிலும் இருக்கும் நீர்நிலைகளைப் பழுதுபார்ப்பதுதான் அடிப்படையிலேயே சரியான நடவடிக்கையாக இருக்க முடியும். இதை விவசாயிகளின் நலன் காக்க விழைவதாகச் சொல்லிக்கொள்ளும் இந்த அரசு உணர்ந்திருக்கிறதா?
கூட்டுறவு வங்கிகளின் நகைக்கடன் மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடியில் நேர்ந்துள்ள பல்வேறு குழப்படிகள் மற்றும் ஊழலை நாம் அறிவோம். விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க, அதிலும் குறிப்பாக நோய்த்தொற்று காலத்தில் அவர்கள் சந்தித்த இழப்புகளைச் சமாளிக்க மிகச் சிறிய பங்காகத்தான் இந்தக் கடன் தள்ளுபடி நடவடிக்கை அமையும் என்பதும் தெள்ளத் தெளிவாக இருக்கும் நிலையில், இந்தத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்துவதில் இருக்கும் தடைகளை நீக்க இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இதிலும் சரியான நபர்களை இந்தத் திட்டம் சென்றடைவதில் இருக்கும் சிக்கல்களைக் களைவதில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது ஏமாற்றமே.
இத்துடன் இந்த வேளாண் பட்ஜெட்டில் இன்னொரு பயன்தராத திட்டம் கவர்ச்சிகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண்மை பட்டதாரிகளுக்கு தொழில் தொடங்க தலா ஒரு லட்சரூபாய் என்பதே அத்திட்டமாகும் . ஒருலட்சரூபாயில் ஒரு பெட்டிக்கடை வைக்கக்கூட முடியாது என்பது எல்லோரும் அறிந்ததே. இந்த சூழ்நிலையில் ஒரு பட்டதாரியை அந்தத்திட்டம் எந்தவகையில் முன்னேற்றும் என்பதை நம் நிதியமைச்சர்தான் விளக்கவேண்டும்
மேலும், அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களாவது முறைப்படி செயல்பட வலிமையான ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்ற கேள்வியும் எழுகிறது.
விவசாயப் பெருங்குடி மக்கள் தமிழகத்தின் பெருமிதம் என்று பேச்சளவில் சொன்னால் மட்டும் போதுமா? அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் பற்றிய பெரிய அளவிலான அறிவிப்புகள் இல்லாத இந்த வேளாண் பட்ஜெட் பெரும் ஏமாற்றம் அளிக்கிறது என்பதை மக்கள் நீதி மய்யம் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு ஜி.மயில்சாமி கூறியுள்ளார்.