படம்: ஜமா
நடிப்பு: பாரி இளவழகன், அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயால், மணிமேகலை, வசந்த் மாரிமுத்து
தயாரிப்பு: லியர்ன் மற்றும் டீச் புரொடக்சன்
இசை: இளையராஜா
இயக்கம்: பாரி இளவழகன்
பி ஆர் ஓ: சுரேஷ் சந்திரா, நாசர்
ஜமா என்றால் என்ன என்று பலருக்கு கேள்வி எழலாம்.. தெருக்கூத்து கலைஞர்கள் தனியாக வைத்து நடத்தும் தெருக் கூத்து கலைஞர்கள் கொண்ட குழு தான் ஜமா.
தெருக்கூத்தில் பெண் வேடம்
கட்டும் கல்யாணம் (பாரி இளவழகன்) தந்தை வைத்திருந்த ஜமாவை தந்திரமாக தனதாக்கி கொள்கிறார் தாண்டவம் ( சேத்தன்). அந்த ஜமாவை
மீண்டும் தன் கைக்கு கொண்டு வந்து தானே ஜமா வாத்தியாராக மனதுக்குள் வைராக்கியம் கொள்கிறார் கல்யாணம். அதற்காக தாண்டவம் என்ன சொன்னாலும் அதை செய்து கடைசிவரை அந்த குழுவில் பெண் வேடம் மட்டுமே போட்டு காலத்தை கழித்து வருகிறார். அர்ஜுனன் வேடம் கேட்டு தாண்டவத்திடம் கல்யாணம் முரண்டு செய்யும் போது அவரை விரட்டிய்டிக்கிறார். சக கூத்து கலைஞர்களும் கல்யாணத்தை வாத்தியாராக ஏற்க மறுத்து அவர் தொடங்க விருக்கும் ஜமாவில் சேர மறுக்கின் றனர். இந்த நிலையில் கல்யாணம் செய்த சபதம் என்னவாயிற்று? அவரால் மீண்டும் தனது தந்தையின் ஜமாவை கைப்பற்ற முடிந்ததா? என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.
நகர்புறங்களில் அல்லாமல் கிராமப்புறங்களில் நடக்கும் கோவில் திருவிழாக்களில் தெருக்கூத்து என்பது இன்றைக்கும் பிரிக்க முடியாத அங்கமாக இருந்து வருகிறது. அதை மையமாக வைத்து ஜமா படம் உருவாக்கப்பட்டுள்ளது.
தெருக்கூத்தை முழுமையாக அமர்ந்து பார்க்கச் சொல்லி இன்றைய இளைஞர்களிடம் கூறினால் அவர்கள் ஆளை விடுடா சாமி என்று ஓட்டம் பிடிப்பார்கள். அதே இளைஞர்களை ஜமா படத்தில் கொண்டு சென்று அமர வைத்தால் கிளைமாக்ஸ் முடிந்த பிறகு எழுந்து நின்று கைதட்டி பாராட்டு தெரிவிப்பார்கள் அந்தளவிற்கு ஜமா படத்தை உயிரும் உணர்வுமாக இயக்கியிருக்கிறார் பாரி இளவழகன். அத்துடன் பெண் கதாபாத்திரம் ஏற்று கூத்தில் ஆடும் கல்யாணமாகவும் அவர் நடித்திருப்பது அந்த கலை மீது அவர் எவ்வளவு ஆர்வம் கொண்டிருக்கிறார் அதே வேகத்துடன் நடித்திருக்கிறார் என்பதை உணர முடிகிறது.
கிளைமாக்சில் அர்ஜுனன் வேடம் கட்டி பாரி இளவழகன் ஆடும் ஆக்ரோஷமான ஆட்டம் கடைசியில் அந்த மூச்சிரைப்புடன் முடியும்போது பார்க்கும் ரசிகர்களுக்கும் மூச்சிரைக்கிறது.
இதுவரை பல படங்களில் அம்மு அபிராமியை குழந்தைத்தனமான நடிப்பில் பார்த்துக் கொண்டிருந் தவர்கள் இப்படத்தில் ஜகா என்ற கதாபாத்திரத்தில் ஆக்ரோஷமும் கோபமும் கலந்த அம்முவாக பார்க்க வைக்கிறார்.
தனது காதலை.பிரிக்கும் தந்தை சேத்தனை போடா குடிகாரா என்று மிரட்டுவதும் , காதலை ஏற்க தயங்கும் பாரியிடம் செல்ல கோபத்தை காட்டுவதும் இது அம்முவா என்று ஆச்சர்ய பட வைக்கிறார்.. அதற்காக அவருக்கு ஒரு ஸ்பெஷல்.அப்ளாஸ்.

கூத்து வாத்தியார் தாண்டவமாக சேத்தன் நடித்திருக்கிறார். அசல் கூத்து வாத்தியாராகவே மாறி வேஷம் கட்டி கூத்தாடுவதும், கூத்து கலைஞர்களிடம் கோபத்தை வெளிப்படுத்துவதும் படத்தில் வில்லன் இல்லாத குறையை போக்கி விடுகிறது.
பாரி இளவழகனின் தந்தையாக நடித்திருக்கும் அந்த ஆறடி உசர நடிகர் யார் என்று கேட்க வைக்கிறார்.

படத்திற்கு உடல் கதை என்றால் அதற்கு உயிர் கொடுத்திருப்பது இசைஞானி இளையராஜாவின் இசை.
கரகாட்டம், கிராமப்புற கலை என்றாலே இளையராஜாவின் விரல்கள் தன்னால் தாளம் போட ஆரம்பித்து விடும் கரும்பு தின்ன கூலியா என்று கேட்கும் அளவுக்கு தெருக்கூத்து கலைக்கு இசையமைக்க வேண்டும் என்ற வாய்ப்பு வந்தால் சும்மா விடுவாரா பின்னி பெடலெடுத்திருக்கிறார்..
ஆஸ்கர் வரை சென்று கதவை தட்டிய கூழாங்கல் படத்தை தயாரித்த லியர்ன் மற்றும் டீச் புரொடக்சன் இப்படத்தை தயாரித்திருக்கிறது.
.ஜமா- தமிழ் திரை உலகுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம்.

