சிக்ஹயா என்டர்டெய்ன்மெண்ட் (Sikhya Entertainment ) தயாரிக்க கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் “டோரதி”. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இளையராஜா உடன் கார்த்திக் சுப்புராஜ் இணையும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. திரு ஒளிப்பதிவு செய்கிறார்
இதில் மெர்குரி ஹீரோ சனந்த், மொத ராத்திரி பட ஹீரோ ரிஷிகாந்த் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இவர்களுடன் இன்னும் பல்வேறு நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
டோரதி படம் பற்றி கார்த்திக் சுப்புராஜ் கூறியதாவது:
நான் இயககும் பத்தாவது படம் டோரதி. ஆனால் இந்த கதையை பல வருடங்களுக்கு முன்பே நான் எழுதி இருந்தேன். அதாவது கொரோனா காலகட்டத்தில் இந்த படத்தின் ஸ்கிரிப்ட் எழுதினேன். நான் எழுதி முடித்த பிறகு சரவணன் சந்திரன் என்கிற ஒரு எழுத்தாளரிடம் அந்த ஸ்கிரிப்ட் கொடுத்து கூடுதல் திரைக்கதை எழுத சொன்னேன். மீண்டும் அந்த கதையை ஆறேழு முறை மாற்றி அமைத்து முழு ஸ்கிரிப்ட் தயாரித்தேன். ஸ்கிரிப்ட் முடித்தவுடன் இந்த படத்தை எடுத்து விட வேண்டும் என்று முடிவு செய்து அதற்காக மும்முரமாக ஈடுபட்டேன். ஆனால் தலைவர் ரஜினியின் பேட்ட படம் சூர்யாவின் ரெட்ரோ போன்ற படங்கள் இயக்கும் சூழல் வந்ததால் டோரதி படத்தை இயக்குவது தள்ளிப் போனது
மதுரை பின்னணியில் உருவாகி இருக்கும் இது இரண்டு இளைஞர்களை பற்றிய கதை ஆகும். இவர்களுக்கிடையே ஒரு பெண் வருகிறாள் பின்னர் அவர்களின் வாழ்க்கை எப்படி செல்கிறது என்று ஸ்கிரிப்ட் வித்தியாசமாக செல்லும். இதில் புது முகங்களைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். ஹீரோயின் தெரிந்த முகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன்.
என்னுடைய மெர்குரி படத்தில் நடித்த சனந்த் ஒரு நாயகனாக ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்தேன். மற்றொரு பாத்திரத்திற்கு நான் ஆடிஷன் செய்தேன். இதில் ரிஷிகாந்த் வந்து கலந்து கொண்டார். அவரை பார்த்ததுமே மற்றொரு ஹீரோவாக இவர் பொருத்தமாக இருப்பார் என்று நான் மட்டுமல்ல பட யூனிட்டில் உள்ளவர்கள் எண்ணினார்கள். அதன்படி அவர் படத்தில் ஒப்பந்தமானார். மலையாள பெண் கதாபாத்திரத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

நான் இசைஞானி இளையராஜாவின் ரசிகன். அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று என்னுடைய தொடக்க காலத்தில் இருந்தே ஆசை. ஆனால் அவரிடம் சென்று கதை சொல்வதற்கு பயம். அதனாலேயே நான் அவரை அணுகாமல் இருந்தேன். டோரதி ஸ்கிரிப்ட் உருவான பிறகு ஒரு சில காட்சிகளை நான் படமாக்கினேன். அதைப் பார்த்தபோது இந்தப் படத்திற்கு இளையராஜா சார் இசை அமைத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன். அவர் ஒப்புக் கொள்வாரா? மாட்டாரா? என்பது எனக்கு குழப்பமாக இருந்தது ஆனாலும் எடுத்த காட்சிகளை அவரிடம் போட்டுக் காட்டுவோம் அதன் பிறகு இசையமைப்பதா? வேண்டாமா? என்பதை அவர் முடிவு செய்து கொள்ளட்டும் என்று எண்ணி அவரை சந்தித்தேன். அவர் காட்சிகளை பார்க்க ஒப்புக்கொண்டார். பார்த்த பிறகு நான் இசையமைக்கிறேன் நாளைக்கு வந்து விடு வேலைகளை தொடங்கி விடுகிறேன் என்று கூறினார். எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. என்னுடைய நீண்ட நாள் ஸ்கிரிப்ட் மட்டுமல்ல இந்த படத்திற்கு இசை ஞானி இசையமைக்க ஒப்புக்கொண்டது என இரட்டை சந்தோஷம் ஏற்பட்டது. இந்த படத்திற்காக 25 நாட்கள் இளையராஜா இசையமைத்தார். அந்த நாட்கள் அவருடன் நான் இருந்தது என் வாழ்வில் மறக்க முடியாதது. நிறைய விஷயங்களை அவரிடம் நான் கற்றுக் கொண்டேன்.
இந்த படத்தின் பின்னணி இசையை படம் வெளியிடுவதற்கு முன்பே இசை தட்டாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமாக ஆடியோ ரிலீஸ் நடக்கும். ஆனால் இந்த நிகழ்வு அப்படி இல்லாமல் முற்றிலுமாக இசை நிகழ்வாக இருக்கப்போகிறது. படத்தின் முழு இசையும் மேடையில் இசை ஞானி இளையராஜா மற்றும் குழுவினர் நேரில் தோன்றி இசைக்க உள்ளனர். வரும் செப்டம்பர் 5ம் தேதி இதற்கான நிகழ்ச்சி இமேஜ் ஆடிடோரியத்தில் நடக்கவிருக்கிறது இப்படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி இருக்கிறது. இன்னும் ஒரு பாடல் உள்ளது. அதுவும் வெளிவரும். பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
டோரதி படத்திற்கு பொருத்தமான தயாரிப்பாளர் வேண்டும் என்று எண்ணினேன் .தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் படத்தை தயாரித்த பகுனித் மூங்கா படத்தை தயாரிக்க கொண்டார். இதையடுத்து படத்தை தொடங்குவது என்று முடிவு செய்து படப்பிடிப்பை தொடங்கி முடித்து விட்டேன்.
என்னுடைய படங்கள் எதையும் நான் வெளி வருவதற்கு முன்பு வெளிநாட்டு பட விழாக்களுக்கு அனுப்பியது கிடையாது ஆனால் டோரதி படத்தை திரைக்கு வருவதற்கு முன்பே வெளிநாட்டு பட விழாக்களுக்கு அனுப்பினேன். டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் டோரதி படம் திரையிட தேர்வு செய்யப்பட்டது. குறிப்பாக இந்த படத்துக்கு சர்வதேச அளவில் ரசிகர்கள் கிடைப்பார்கள் என்பது எனது நம்பிக்கை.
டோரதி படத்தை பொறுத்தவரை மதுரை பின்னணியில் நமது கலாச்சாரத்தை மையமாக வைத்து தான் உருவாகி இருக்கிறது படம் பார்ப்பவர்களுக்கு இதுவொரு வித்தியாசமான அனுபவத்தை நிச்சயம் தரும்.
இவ்வாறு கார்த்திக் சுப்புராஜ் கூறினார்
நடிகர் சனந்த் கூறும் போது, ” கார்த்திக் சுப்புராஜ் அவர்களிடம் எனக்கு நீண்ட நாள் பழக்கம் உண்டு அவரது மெர்குரி படத்தில் தான் நடித்திருக்கிறேன். டோரத்தி படத்தில் நடித்தபோது புதுப்புது அனுபவங்கள் கிடைத்தன” என்றார்.
நடிகர் ரிஷிகாந்த் கூறும் போது, ” கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் முதன்முறையாக நடிக்கிறேன். நான் நடித்த படங்களில் டோரதி மாறுபட்ட படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை’ என்றார்.
