படம் : 7 ஸ்டார் பாய்ஸ்
நடிப்பு : ஆண்டனி வர்கீஸ், ஐ.எம் விஜயன், ஜுமானா அப்துல் ரஹ்மான், லுக்மான் அவரான், பாலு வர்க்கீஸ், தனிஷ் பி.கே, அமல், பாசித்
தயாரிப்பு: டி அசோக்
இசை: ஜேக்கஸ் பிஜய்
ஒளிப்பதிவு: பாய்ஸ் சித்திக்
இயக்கம்: நிகில் பிரேம் ராஜ்
பிஆர்ஓ : வேலு
கதை : 2018 பிபா உலக கோப்பை நடந்த காலகட்ட கதையாக உருவாக்கியிருக்கிறது இப்படம்.. கிராமத்தில் சிறுவர்கள் இணைந்து கால்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த ஊர் பெருசுகளும் கால்பந்தில் ஆர்வம் காட்டுகின்றனர். ஏழு சிறுவர்கள் சேர்ந்து செவன் ஸ்டார் பாய்ஸ் என்ற டீமை உருவாக்குகிறார்கள். அப்பகுதியில் நடக்கும் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் செவன் ஸ்டார் பாய்ஸ் பங்கேற்க எண்ணுகின்றனர் அதற்காக பிரபல கால்பந்தாட்ட கோச் ஒருவரை அணுகுகிறார்கள். அவர் செவன் ஸ்டார் பாய்ஸ்க்கு பயிற்சி அளிக்க ஒப்புக்கொண்டாரா,? மாவட்ட அளவிலான போட்டியில் செவன் ஸ்டார் பாய்ஸ் பங்கேற்று வெற்றி பெற்றதா என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.
வழக்கமாக திரைப்படம் என்றாலே கிரிக்கெட்டை தான் மையப்படுத்திக்கொண்டிருப்பார்கள். விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் கால்பந்து, கபடி போன்ற விளையாட்டுகளை மையமாக வைத்து படங்கள் வருகின்றன அந்த வகையில் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருப்பது ஆர்வத்தை தூண்டுகிறது.
ஏழு சிறுவர்கள் தங்களுக்குள் கால்பந்தாட்ட அணி உருவாக்குவது கிராமப்புற பகுதிகளில் நடக்கிறது என்பது அபூர்வம் தான். கேரளா பின்னணியில் இப்படம் உருவாக்கப்பட்டிருப்பதால் இதை நம்ப முடிகிறது. நம்ம ஊராக இருந்தால் ஹீரோக்களைத்தான் அணி பிரித்து கொண்டாடிக் கொண்டிருப்பார்கள். அது வேறு கதை…
கால்பந்தாட்ட சிறுவர்கள் அணியில் உள்ள ஒவ்வொரு சிறுவனும் அந்த விளையாட்டிற்காக எவ்வளவு ஆர்வத்தை காட்டி நடித்திருக்கிறார்கள் உடல் உழைப்பை தந்திருக்கிறார்கள் என்பதெல்லாம் கிளைமாக்சில் இரு அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டியில் வெளிப்படுகிறது
குறிப்பாக ஒன்பது வயது சிறுவன் தனிஷ் பி.கே, உமர் என்ற கதாபாத்திரத்தில் கொடி கட்டி பறந்திருக்கிறான். உடன் நடித்திருக்கும் மற்ற சிறுவர்களும் தங்களுக்கான திறமைகளை வெளிப்படுத்தி அப்ளாஸ் பெறுகிறார்கள்.
கால்பந்தாட்டத்தில் இந்தியாவிற்காக ஆடி பல்வேறு சாதனைகள் படைத்த ஐ எம் விஜயன் இந்த படத்தில் சிறுவர்களுக்கான கோச்சாக நடித்திருக்கிறார். அளவுடன் வந்து குழந்தைகளுக்கு அழகாக பயிற்சி அளித்து இளைஞர்களிடையே கால்பந்தாட்ட ஆர்வத்தை தூண்டியிருப்பது பாராட்டத்தக்கது.
இஸ்மாயில் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆண்டனி வர்கீஸ் இயல்பாக நடித்து கிளைமாக்சில் ஒரு காதல் அதிர்ச்சி தருகிறார்.

இப்படத்தை டி அசோக் தயாரித்திருக்கிறார். மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டிருந்தாலும் டப்பிங் முதல் காட்சிகள் வரை எல்லாமே தமிழ் படத்தை பார்க்கும் உணர்வை தருகிறது.
ஜேக்கஸ் பிஜய் இசை, பாய்ஸ் சித்திக் ஒளிப்பதிவு படத்திற்கு துணை புரிகிறது

கிரிக்கெட் வெறியர்கள் இருக்கும் இந்த நாட்டில் கால்பந்தாட்டத்தை அதற்கு இணையாக வேரூன்று செய்வது அசாத்தியமான விஷயம்தான் அதற்கு இதுபோன்ற படங்கள் தான் உதவியாக இருக்கும். அப்படி ஒரு கால்பந்தாட்ட ஆர்வத்தை இளைஞர்களிடம் இப்படம் மூலம் கொண்டு சென்றிருக்கும் இயக்குனர் நிகில் பிரேம் ராஜூக்கு பாராட்டு மாலை சூட்டலாம்.
7 ஸ்டார் பாய்ஸ் – இளைஞர்கள் பார்க்க வேண்டிய படம்.

Review By
K. Jayachandhiran
Trending cinemas now com
