படம்: கட்ஸ்
நடிப்பு: ரங்கராஜ், ஸ்ருதி நாராயணன், நான்சி, டெல்லி கணேஷ், சாய் தீனா, பிர்லா போஸ், ஸ்ரீலேகா, அறந்தாங்கி நிஷா
தயாரிப்பு: ஜெயபாரதி ரங்கராஜ்
இசை: ஜோஸ் ப்ராங்க்ளின்
ஒளிப்பதிவு: மனோஜ்
இயக்கம்: ரங்கராஜ்
பிஆர்ஓ: நிகில் முருகன்
விவசாய நிலத்தை காக்கும் போராட்டம், போலீஸ் கதை என இரட்டை கதையாக வந்திருக்கிறது கட்ஸ்.
எதையும் துணிச்சலாக தட்டி கேட்கும் போலீஸ் அதிகாரி ரங்கராஜ். சிறுவயதிலேயே இவரது பெற்றோர் கொல்லப்படுகின்றனர். ஒரு கட்டத்தில் மனைவியும் கொல்லப்படுகிறார். அதற்கு காரணம் என்ன?
கொலைகாரனை போலீஸ் அதிகாரி ரங்கராஜால் கண்டுபிடிக்க முடிந்ததா? என்பதற்கு ஆக்ஷன் அதிரடியாக பதில் அளிக்கிறது கட்ஸ்.
ஹீரோ, இயக்குனர் என இரட்டை வேலை ஏற்றிருக்கும் ரங்கராஜ் படத்தில் தந்தை, மகன் என்று இரட்டை வேடத்திலும் நடித்திருக்கிறார். முதல் படத்திலேயே திறமையை காட்டிவிட வேண்டும் என்ற முனைப்புடன் நடித்திருக்கும் ரங்கராஜ் அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றிருக்கிறார்.
தந்தை கதாபாத்திரத்தில் முறுக்கு மீசை வைத்துக்கொண்டு கையில் அருவாள் பிடித்தபடி வலம் வந்து சண்டை காட்சியில் மாஸ் காட்டுகிறார்.
ஸ்ருதி நாராயணன், நான்சி என இரட்டை கதாநாயகிகள் நடித்திருக்கின்றனர். தந்தை ரங்கராஜுக்கு ஸ்ருதியும், போலீஸ் அதிகாரி ரங்கராஜுக்கு ஜோடியாக நான்சியும் நடித்துள்ளனர். ஸ்ருதி, நான்சி இருவரும் ஏற்ற வேடத்தை நிறைவு செய்திருக்கின்றனர்.
வயது முதிர்ந்த டெல்லி கணேஷ் தனது நடிப்பை இயல்பாக வழங்க முயன்றாலும் அவரது தள்ளாத வயதின் தளர்வு வெளிப்படுகிறது. சாய் தீனா, பிர்லா போஸ் ஶ்ரீ லேகா, அறந்தாங்கி நிஷா ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஜெயபாரதி ரங்கராஜ் தயாரித்திருக்கிறார். எழுத்து, இயக்கம் ஹீரோ என முக்கிய பொறுப்புகளை ரங்கராஜ் ஏற்றிருக்கிறார். கிரைம் கதை என்றாலும் திரைக்கதையில் இன்னும் விறுவிறுப்பும் வித்தியாசமான காட்சிகளும் அமைத்திருந்தால் படம் சூடு பிடித்திருக்கும்.
ஜோசப் ப்ராங்க்ளின் இசை, மனோஜ் ஒளிப்பதிவு கை கொடுத்திருக்கிறது.
கட்ஸ் – ஆக்சன் விரும்பிகளுக்கு..
