படம்: ஜென்டில்வுமன்
நடிப்பு: லிஜோ மோல் ஜோஸ், ஹரி கிருஷ்ணன், லாஸ்லியா, ராஜீவ்
காந்தி, தாரணி, வைரபாலன், சுதீஷ்,
தயாரிப்பு: கோமளா ஹரி, ஹரி பாஸ்கரன், பி என் நரேந்திர குமார், மற்றும் லியோ லோகனே நேதாஜி
இசை: கோவிந்த் வசந்தா
ஒளிப்பதிவு: சா. காத்தவராயன்
இயக்கம்: ஜோஸ்வா சேதுராமன்
பிஆர்ஓ: சதீஷ் (AIM)
அரவிந்த் ( ஹாரி கிருஷ்ணன்) பொம்மி (லிஜோ மோல் ) இருவருக்கும் திருமணமாகி ஆறு மாதங்களே ஆன புதுமணத் தம்பதிகள். எல்ஐசி நிறுவனத்தில் பணிபுரியும் அரவிந்த் காலையில் அலுவலகத்துக்கு செல்லும்போது மனைவியிடம் லவ் யூ சொல்லிவிட்டு செல்வார். இப்படி இவர்கள் வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் திடீரென்று அரவிந்த் போக்கு மாறுகிறது. அரவிந்த் மாயமாகிறார்
அவரைத் தேடி , அன்னா ( லாஸ்லியா) என்ற பெண் வருகிறார். இவர் அரவிந்தின் பழைய காதலி. எவ்வளவு தேடியும் அரவிந்த் கிடைக்காததால் போலீசில் புகார் செய்கிறார். போலீஸ் அரவிந்த் வீட்டுக்கு வந்து மனைவி பொம்மியிடம் விசாரிக்கிறது. வெளியூருக்கு சென்ற கணவர் வரவில்லை என்று அவர் சொல்கிரர். ஆனால் அரவிந்த் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். அந்த கொலையை செய்தது யார்? பொம்மி, அன்னா எடுத்த முடிவு என்ன என்பதற்கு பரபரப்பான பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்.
கள்ள காதலனை கொன்ற காதலி, கணவனை கொன்ற மனைவி என்று பத்திரிகைகளில் சில சமயம் அதிர்ச்சிகரமான செய்திகள் வருவதுண்டு. அப்படி ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தை மையமாக வைத்துத்தான் ஜென்டில்மேன் கதையை இயக்கி இருக்கிறார் ஜோஷ்வா.
அரவிந்த் கதாபாத்திரத்தில் ஹரிகிருஷ்ணன் நடித்திருக்கிறார் அப்பாவித்தனமான முகம் என்றாலும் அதில் ஒரு சூட்சமம் மறைந்திருப்பதை உணர முடிகிறது.
ஹரியின் மனைவியாக லிஜோமோல் நடித்திருக்கிறார். கணவனுக்கு டிபன் கட்டிக் கொடுத்து அவரை வழி அனுப்பி விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்தவுடன் அவருக்கு தேவையான பணிவிடைகளை செய்துவிட்டு ஒரு சராசரி மனைவியாக தினமும் இயங்கிக் கொண்டிருக்கும்போது ஒரு கட்டத்தில் பத்ரகாளியாக அவர் மாறுவார் என்பதை கொஞ்சம் எதிர்பார்க்க முடியவில்லை.ஒரே சீனில் தனது கதாபாத்திரத்தின் இமேஜ் மாற்றி விடுகிறார் லிஜோ மோல்.
போலீசார் நேரில் வந்து லிஜோ மோலிடமும், லாஸ்லியாவிடவும் விசாரிக்கும் காட்சிகளும் அதற்கு அவர்கள் தரும் ரியாக்ஷன்களும் அடுத்து கதை எப்படி செல்ல போகிறது என்பதை யூகிக்க முடியாத அளவுக்கு மர்ம முடிச்சாகவே செல்கிறது.
கோவிந்த் வசந்தா இசை அதிர்ச்சி காட்சிகளிலும் இதமாகவே ஒலிக்கிறது. பாடல் காட்சிகளில் வித்தியாசம் காட்டுகிறது.
சா. காத்தவராயன் ஒளிப்பதிவு. அடக்கி வாசித்திருக்கிறது.
ஜோஸ்வா சேதுராமன் பதட்டமான கதையை பதட்டமே இல்லாமல் சொல்லியிருக்கிறார்.
ஜென்டில்வுமன் – கொலையும் செய்வாள் பத்தினி