படம்: படவா
நடிப்பு: விமல், சூரி, ஷிரிட்டா ராவ், கே ஜி எஃப் ராம், தேவதர்ஷினி, நமோ நாராயணன், செந்தில், வினோதினி
தயாரிப்பு: எம்.ஜான் பீட்டர்
இசை: ஜான் பீட்டர்
இயக்கம்: க. வி.நந்தா
:
பிஆர்ஓ: நிகில் முருகன்
விவசாயத்தை கைவிட்டு அந்த குக்கிராம மக்கள் செங்கல் சூளையில் கூலிக்கு வேலை செய்கிறார்கள். ஊரில் வம்பிழுத்து திரிந்து கொண்டிருந்த விமலை ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து மலேசியா நாட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள். அங்கு வேலை பறிபோன நிலையில் மீண்டும் ஊர் திரும்புகிறார். தன்னை எல்லாரும் திட்டித் தீர்ப்பார்கள் என்று பார்த்தால் ஊரே ஒன்று கூடி அவரை வரவேற்கிறது. ஒரு கட்டத்தில் அவரை ஊர் தலைவராக தேர்வு செய்கிறார்கள். அதன் பிறகு நடப்பது என்ன? ஊரே சேர்ந்து விரட்டி அடித்த விமலை மீண்டும் ஊரே சேர்ந்து வரவேற்க என்ன காரணம் என்பதற்கெல்லாம் கலகலப்பாக பதில் சொல்கிறது படவா.
மலேசியாவில் மது பாரில் வேலை செய்யும் விமல் திடீரென்று வேலையில் இருந்து நீக்கப்படும் நிலையில் மீண்டும் அவர் ஊர் திரும்புவதற்கு பயந்த நிலையில் ‘நீ ஏன் பயப்படுகிறாய்’ என்று நண்பர் கேட்க அதற்கு விமல் சொல்லும் பிளாஷ்பேக் கதையாக விரிகிறது.
விமலும் சூரியும் வேலை வெட்டி இல்லாமல் ஊர் சுற்றி திரிவதுடன் ஊர் மக்களுக்கு எந்நேரமும் தொந்தரவு செய்வதையே வேலையாக வைத்திருக்கிறார்கள்.
தீபாவளிக்கு ஊரில் வெடி வெடித்தார்கள் என்பதற்காக ஏதோ ஒரு நாளில் ஊர் மக்கள் தூங்கிக் கொண்டிருக்க திடீரென்று பட்டாசு கொண்டு வந்து ஊர் நடுவே வெடித்து தூங்கிக் கொண்டிருப்பவர்களை அலறியடித்து எழச்செய்யும் விமலும் சூரியும் இன்னொரு நாள் ஊரில் திருடன் புகுந்து விட்டான் என்று கூறி ஊர் மக்களை இரவு நேரத்தில் அலைய விடுவது என ரகளை செய்வது காமெடி கதறல்.
மாடு கன்று போடவில்லை என்று சொல்லி காளை மாட்டை கொண்டு வந்து கதாநாயகி ஷிரிட்டா ராவிடம் காட்டி அவரிடம் விமல் மொக்கை வாங்கி செல்வது தமாஷ்.
ஊர் தலைவரான பிறகு விமலின் நடிப்பில் வித்தியாசம் தெரிகிறது. ஊரில் செங்கல் சூளை நடத்தி ஊர் மக்களை சுரண்டும் கே ஜி எப் ராமுடன் விமல் மோதும் கிளைமாக்ஸ் சண்டை காட்சி அதிரடி காட்டுகிறது.
நாயகி ஷிரிட்டா ராவ் விமலுடன் நடன காட்சிகளில் குத்தாட்டம் போட்டிருக்கிறார் .
எம்.ஜான் பீட்டர் தயாரித்திருக்கிறார்
ஜான் பீட்டர் இசையில் பாடல்கள் தாளம் கூட வைக்கிறது. 90ஸ் கால பாடல்களை மீண்டும் திரையில் பார்ப்பது போல் ஒரு குதூகலம்..
இயக்குனர் கே வி.நந்தா காதல் கலாட்டா கதையாக மட்டுமல்லாமல் கருங்காலி செடிகளால் நம் விவசாயத்துக்கு ஏற்படும் ஆபத்தை பட்டவர்தனமாக கூறி இருப்பது இளைஞர்களின் நெஞ்சில் ஆணி அடித்தார் போல் பதியும் கருத்து. இயக்குனர் சொல்லியிருக்கும் இந்த மெசேஜை இளைஞர்கள் முன்னெடுத்தால் வறண்ட பூமி கூட பசுமை புரட்சியில் பளபளக்கும்..
படவா – காமெடியுடன் ஒரு கருத்து .
: