சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. முதல்வராக விஜய் பதவியேற்க உள்ளார். கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து மூன்று முறையாக வெற்றி பெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்தேர்தலில் தோல்வியடைந்தது திமுகவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தனது எடப்பாடி தொகுதியில் வெற்றியை தக்கவைத்துக் கொண்டுள்ளார். காரைக்குடியில் போட்டியிட்ட நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட அக்கட்சி வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக கடந்த ஏப்.23-ம் தேதி நடந்தது. இதில் திமுக, அதிமுக, தவெக, நாதக ஆகிய கட்சிகள் இடையே நான்கு முனைப் போட்டி நிலவியது. இதை எடுத்து மே 4ஆம் தேதி தமிழக முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அடுத்த சில நிமிடங்களில் தேர்தல் முடிவுகள் அறிவிப்பு வெளியாக தொடங்கியது.. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னிலையில் இருந்து வந்த தவெக, 107 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
திமுக கூட்டணி 74 தொகுதிகள்
அதிமுக கூட்டணி 53 தொகுதிகள் வெற்றி பெற்றுள்ளன.
நாம் தமிழர் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக வெற்றிக் கழகம் 107 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து இருந்தாலும் தனியாக ஆட்சி அமைக்க முடியாத நிலையில் உள்ளது. ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை பலமான 118 இடங்களைப் பெறாததால், தமிழகத்தில் தற்போது ‘தொங்கு சட்டப்பேரவை’ அமையும் சூழல் உருவாகியுள்ளது. ஆட்சி அமைக்க இன்னும் 10 இடங்கள் தேவைப்படுவதால், கட்சிகளிடம் ஆதரவு கோருவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தவெக முன்பு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று அதிமுகவின் ஆதரவைக் கோருவது. மற்றொன்று, திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை கோருவது. அதிமுக தலைமையிலான கூட்டணி 53 இடங்களை கைப்பற்றியுள்ளது.

ஒருவேளை அதிமுக ஆதரவு அளித்தால் தவெக மிக எளிதாக ஆட்சி அமைக்க முடியும். அப்படியே ஆதரவு அளித்தாலும் அவர் தனக்கு முதலமைச்சர் பதவி தர வேண்டும் என்று கோரிக்கை வைப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதை விஜய் ஏற்பதாக இல்லை. நான் கிங் மேக்கர் இல்லை நான் தான் கிங் என்று விஜய் ஏற்கனவே பிரச்சாரத்தின் போது கூறியிருக்கிறார் அதனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு முதலமைச்சர் பதவியை அவ்வளவு எளிதாக விஜய் விட்டுக் கொடுப்பார் என்று கூற முடியாது. மேலும்
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை விஜய் கடுமையாக விமர்சித்துப் பேசினார். இந்த சூழலில், தற்போது பழனிசாமி ஆதரவு அளிப்பாரா என்பது தெரியவில்லை.
மற்றொருபுறம், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவைப் பெறவும் விஜய் திட்டமிட்டு வருகிறார்.
இதற்கிடையே, தவெகவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தொலைபேசி வாயிலாக விஜய்யைத் தொடர்பு கொண்டு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகள் கட்சிகளிடையே தொடர்ந்தாலும் விஜய் சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சர் பதவி ஏற்பது உறுதி என்பது மட்டும் தெரிகிறது. ஆனால் கவர்னர் முன்னிலையில் அவர் ஆட்சி அமைப்பதற்கு போதிய எண்ணிக்கையிலான 118 என்ற எண்ணிக்கையை நிரூபித்தால் மட்டுமே அவர் தொடர்ந்து முதலமைச்சராக நீடிக்க முடியும் அல்லது தமிழகத்தில் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு ஆறு மாதத்திற்கு பிறகு மீண்டும் தேர்தல் வர வாய்ப்பு இருக்கிறது.
இதற்கிடையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் மக்கள் தீர்ப்பை ஏற்கனவே நாங்கள் சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்று கூறி இருக்கிறார்.
நடிப்பில் இருந்து அரசியலுக்கு மாறி, தவெக கட்சியைத் தொடங்கிய விஜய், களம்கண்ட முதல் தேர்தலிலேயே எந்த கட்சியுடனும் கூட்டணி சேராமல் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதால், அக்கட்சியினர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் ஆட்சி அமைக்க உள்ள விஜய்க்கு அனைத்து கட்சி தலைவர்களும் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்களும் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
