படம்: இட்லி கடை
நடிப்பு: தனுஷ், அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன், சமுத்திரகனி, இளவரசன், நித்யா மேனன், ஷாலினி பாண்டே
தயாரிப்பு: ஆகாஷ் பாஸ்கரன் , தனுஷ்
நிறுவனம்: டவ்ன் பிச்சர்ஸ், ஒன்டர் பார் பிலிம்ஸ் (Dawn Pictures & Wunderbar Films Pvt Ltd)
இசை: ஜிவி பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு: கிரண் கௌஷிக்
இயக்கம்: தனுஷ்
ரிலீஸ்: ரெட் ஜெயன்ட் நிறுவனம்
பிஆர்ஓ: ரியாஸ் கே அகமத், சதீஷ் (AIM)
கிராமத்தில் சிவனேசன் (ராஜ்கிரண்) சிறிதாக ஒரு இட்லி கடை வைத்து நடத்துகிறார். அவரது மகன் முருகன் (தனுஷ்), கிராமத்திலேயே இருந்தால் வாழ்வில் வளர்ச்சி பெற முடியாது சென்னை சென்று வேலை செய்கிறேன் என்று கூறிவிட்டு புறப்படுகிறார். பின்னர் பாங்காங்கில் பெரிய நிறுவனத்தில் வேலை செய்கிறார். அந்நிறுவன அதிபர் (சத்யராஜ்) தனது மகளை அவருக்கு கட்டித்தர முடிவு செய்கிறார். முருகனும் அதற்கு சம்மதிக்கிறார். இந்நிலையில் ஊரிலிருந்து தந்தை இறந்த தகவல் வர, அதிர்ச்சியடைந்து கிராமத்துக்கு திரும்புகிறார். சில நாட்களில் முருகனின் தாயாரும் இறக்கிறார். தனக்கு பின்னும் கிராமத்தில் இட்லி கடை தொடர்ந்து நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட தனது தந்தையின் கனவை நிறைவேற்ற கிராமத்திலேயே தங்கி விடுகிறார் முருகன். ஆனால் பாங்காக்கில் திருமண ஏற்பாடு செய்துவிட்டு தொழில் அதிபரும் அவரது மகளும் தவிக்கின்றனர். எத்தனை முறை அழைத்தும் முருகன் செல்ல மறுத்துவிடுகிறார். இதில் கோபம் அடைந்த தொழிலதிபரின் மகன் அஸ்வின் (அருண் விஜய்) முருகனை தேடி கிராமத்துக்கு வருகிறார். ஆனால் அவர் வந்ததோ முருகனை பழிவாங்க.. இந்த சிக்கலான நிலையில் முருகன் எடுக்க முடிவு என்ன? அஸ்வின் திட்டம் எப்படி நிறைவேறுகிறது என்பதை சென்டிமென்ட் ஆக்சன் உடன் கிளைமாக்ஸ் விளக்குகிறது.
நடிகர் தனுஷ் கோலிவுட் தொடங்கி பாலிவுட் சென்று அங்கிருந்து ஹாலிவுட் சென்று நடித்து திரும்பி விட்டார். திறமையை நிரூபிக்கும் பல படங்களில் நடித்திருக்கும் தனுஷுக்கு இயக்குனர் ஆசையும் இருந்த நிலையில் ஏற்கனவே பா பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய படங்களை ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஜர்னரியில் இயக்கியிருந்தார். நடிகராக வெற்றி பெற்ற அவர் இயக்குனராகவும் தனது முத்திரையை பதித்திருந்த நிலையில் தற்போது தனது அண்ணன் செல்வ ராகவன் படங்கள் இயக்காமல் இருக்கும் நிலையில் அந்த இடத்தை நிரப்பும் வகையில் இட்லி கடை என்ற படத்தையும் தனுஷ் இயக்கியிருக்கிறார். இதன் மூலம் மற்றொரு வெற்றியை தனது மகுடத்தில் சூடி இருக்கிறார்.
படத்தின் தொடக்கத்தில் சில காட்சிகள் தந்தை ராஜ்கிரனுடன் கிராமத்தில் பயணிக்கும் தனுஷ் ஒரே ஜம்ப்பாக பாங்காங் சென்று பெரிய நிறுவனத்தில் வேலை செய்வதை பார்க்கும்போது இது கிராமத்து கதையாக செல்ல போகிறதா, அல்லது சிட்டி சப்ஜெக்ட்டாக மாறப் போகிறதா என்ற ஒரு சந்தேகம் எழும் நிலையில் மீண்டும் தனுஷ் கிராமத்துக்கே புறப்பட்டு வந்து மண் மணக்கும் காட்சிகளை அமைத்திருப்பது நெஞ்சில் பசுமை தூறல்களை தூவுகிறது.
“இந்த இட்லி கடையை சுற்றி தான் என் ஆன்மா சுற்றிக் கொண்டிருக்கும்” என்று தந்தை ராஜ்கிரண் சொன்ன வார்த்தையை கேட்டு மனம் நெகிழும் தனுஷ் தானே இட்லி கடையை நடத்த முடிவு செய்வதும் காலை 3 மணிக்கு அலாரம் வைத்துவிட்டு இட்லி கடைக்கு சென்று உரலில அரிசி போட்டுவிட்டு மாவு அரைக்க தொடங்கி ஐந்து நிமிடத்திலேயே உடல் பெண்டு கழண்டு மாவு அரைக்க முடியவில்லை என்று அங்கலாய்ப்பதும் உடனே நித்யா மேனன் “நான் அரைக்கிறேன் பார் ” என்று அவரும் உரலை நான்கு சுற்று சுற்றி விட்டு பெண்டு கழண்டு திணறுவதும் அரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்துகிறது.
இப்படி இட்லி கடையில் அரைச்ச மாவையே அரைத்துக் கொண்டு இருப்பாரோ என்று எண்ணும்போது திடீரென்று அருண் விஜய் , இட்லி கடைக்கு வந்து நிற்பதும் தனுசுடன் கடுமையாக மோதுவதும் காட்சியை பரபரப்பாகிறது.
தனுஷ், அருண் விஜய்க்கு இடையேயான மோதலில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்ற ஒரு போட்டி காட்சிகளை கிளைமாக்ஸ் வரை விறுவிறுவென்று நகர்த்துகிறது .
இளவரசன் தனது தாயிடம் சென்று “நான் ராமராஜன் வந்திருக்கிறேன்” என்று கூறும்போது அவரது தாய் நினைவு மறந்திருக்கும் நிலையில், ” நீ யாரு, எனக்கும் ராமராஜன் என்ற மகன் இருக்கிறான்” என இளவரசனை அடையாளம் தெரியாமல் கூறும்போது பலரது வாழ்வில் நிஜமாக நடந்த சம்பவங்கள் கண்களில் நிறுத்தி கண்ணீர் வழிந்தோட வைக்கிறது. இது இயக்குனர் தனுஷின் நெகிழ வைக்கும் டைரக்டோரியல் டச்..
நித்யா மேனன் , திருச்செல்வம் படத்தில் தனுஷுக்கு எப்படி ஒரு பொருத்தமான ஜோடியாக அமைந்தாரோ அதேபோல் இந்த படத்திலும் செம ஜோடியாக அமைந்து விட்டார். தனுஷ் மீது காதல் கொண்டு அதை வெளிப்படுத்தாமல் கோபம் காட்டுவது போல் அன்பு காட்டி காதலை வெளிப்படுத்தும் விதம் நாசுக்கிலும் நாசுக்கு..
அருண் விஜய் பொறுத்தவரை இந்த படத்தில் தனுஷுக்கு வில்லனாக மாறி இருக்கிறார். ஆனால் சண்டைக் காட்சிகளில் தனுஷ் , அருண் விஜய்க்கு சம வாய்ப்பு தந்து அவரது இமேஜையும் கெடுத்து விடாமல் கையாண்டிருப்பது இயக்குனராக தனுஷின் பெருந்தன்மையை காட்டுகிறது.
அருண் விஜய் தந்தையாக சத்யராஜ் நடித்திருக்கிறார். தனது என்னமா கண்ணு பாணியை மூட்டை கட்டிவைத்து விட்டு ஒரு பொறுப்புள்ள தந்தையாக நடித்து மனதில் பதிகிறார்.
பார்த்திபன், ஆடுகளம்.நரேன்,ஷாலினி பாண்டே, சமுத்திரக்கனி ஆகியோரும் நடித்துள்ளனர்.
டாவ்ன் பிச்சர்ஸ், ஒன்டர் பார் பிலிம்ஸ் (Dawn Pictures & Wunderbar Films Pvt Ltd) சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் , தனுஷ் இணைந்து தயாரித்து இருக்கின்றனர்.
தனுஷ், ஜிவி பிரகாஷ் குமார் காம்பினேஷன் இசை என்றாலே அது இதயத்தை தழுவும். அந்த நிகழ்வு இதிலும் நடந்திருக்கிறது. “எஞ்சாமி தந்தானே..” பாடல் நாவில் தாள ராகத்தோடு ஒட்டிக்கொள்கிறது..
கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு கிராமத்து மணத்தை துளியும் மாறாமல் மணமணக்க வைக்கிறது.
இட்லி கடை – குடும்ப சென்டிமென்ட் டச்சுடன் கிராமத்து இட்லி கடை வாசம் கமகமக்கிறது.
Review By K.Jatachandhiran Trendingcinemasnow.com. (Website)