கைநிறைய விதவிதமான வண்ணக்கயிறுகள், நெற்றி நிறைய திருநீறு, குங்குமப்பொட்டு என்று பக்திப்பழமாக மாறி இருக்கும் ஹரீஷ் கல்யாணுக்கு எல்லாமே ஜோதிடம்தான். எந்த விஷயமாக இருந்தாலும் அதை ராசி, நாள், நட்சத்திரம் பார்த்துதான் செய்வார். கன்னி ராசி பெண்ணை ஆறு மாதத்திற்குள் திருமணம் செய்தால், வாழ்க்கை ஓஹோவென்று இருக்கும் என்று ஜோதிடர்கள் சொல்கின்றனர். எனவே, கன்னி ராசி உள்ள பெண்ணை தேடி அலைகிறார். இதற்கு முன்னால், ஹரீஷ் கல்யாண் காதலித்த ரெபா மோனிகா ஜானும், ஹரீஷ் கல்யாணை காதலித்த ஒரு பெண்ணும் கன்னி ராசி இல்லை. இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக ரெபா மோனிகா ஜான் பிரிந்து செல்கிறார்.
இறுதியில் கன்னி ராசி உள்ள பெண்ணாக வந்து சேருகிறார், டிகங்கனா சூர்யவன்சி. ஆனால், செவ்வாய் கிரகத்தில் குடியேற வேண்டும் என்பதுதான் அவரது வாழ்க்கை லட்சியம். இப்படி முரண்பட்ட நோக்கம் கொண்ட இருவருடைய வாழ்க்கையிலும் என்ன நடக்கிறது என்பது கிளைமாக்ஸ். முதல் படத்தையே முழுநீள காமெடி படமாக கொடுக்க முயற்சி செய்துள்ளார், சஞ்சய் பாரதி. அதில் பாதி கிணறுதான் தாண்டியிருக்கிறார். லவ்வர்பாய் கேரக்டர் ஹரீஷ் கல்யாணுக்கு புதிதில்லை என்பதால், அதை வெகு இயல்பாக செய்துவிடுகிறார்.
காமெடி காட்சிகளிலும் கலக்கலாக தனது பங்கை செய்கிறார். புதுமுகம் டிகங்கனா சூர்யவன்சி அழகில் முன்னே பின்னே இருந்தாலும், நடிப்பில் மிரட்டுகிறார். செவ்வாய் கிரக லட்சியத்துக்கும், ஹரீஷ் கல்யாண் உடனான காதலுக்கும் இடையே மாட்டிக்கொண்டு தவிக்கும் சீன்களில் தன்னை கவனிக்க வைக்கிறார். எல்லா நேரமும் ஹரீஷ் கல்யாணுடன் இருக்கும் தாய்மாமா முனீஸ்காந்த், காமெடியில் கவர்கிறார். ரெபா மோனிகா ஜானுக்கு அதிக வாய்ப்பு இல்லை என்றாலும், கிடைத்த கேரக்டரில் நன்கு நடித்து இருக்கிறார். படத்தின் கதையை விவரித்து சொல்கின்ற கேரக்டராக, சினிமா நடிகராகவே வருகிறார் யோகி பாபு.
அவரது சில பன்ச்சுகள் சிரிக்க வைக்கிறது என்றாலும் கூட, எல்லா படத்திலும் அவர் பன்ச் வசனங்கள் பேசுவதாலேயோ என்னவோ, சற்று சலிப்பு ஏற்படுகிறது. வழக்கம்போல் தனது அனுபவ நடிப்பை வழங்கி இருக்கிறார், சார்லி. பாசக்கார அம்மாவாக வருகிறார், ரேணுகா. கெஸ்ட் ரோலில் தோன்றுகிறார், ரைசா வில்சன். பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவு, பளிச் ரகம். ஜிப்ரானின் இசை, கதை நகர்வதற்கு உதவுகிறது. செவ்வாய் கிரகத்துக்கு ஒருவழிப் பயணமாக தேர்வாகும் டிகங்கனா சூர்யவன்சியின் கேரக்டர் உருவாக்கம் அருமை.
ஆனால், அவர் மது அருந்துவது போன்றும், செக்ஸ் விவகாரத்தை காபி குடிப்பது போன்றும் சாதாரணமாக எடுத்துக்கொள்வது, அந்த கேரக்டர் மீதான மரியாதையை குறைத்துவிடுகிறது. ஹரீஷ் கல்யாணுக்கு ராசி பைத்தியம் எப்படி ஏற்படுகிறது என்பதற்கான பிளாஷ்பேக், யதார்த்தம். ஆனால், அவர் பொறியியல் பட்டதாரியான பிறகும் அது தொடர்வதில் லாஜிக் இடிக்கிறது. அதுபோல், எல்லா பெண்களும் அவரை பார்த்தவுடனே காதல் செய்வதற்கான லாஜிக்கும் புரியவில்லை. ஜோதிடம் உண்மையா, பொய்யா? நம்பலாமா, வேண்டாமா என்பதை பற்றி உறுதியாக சொல்லாமல், ஏதோ பூசி மெழுகி இருக்கிறார் சஞ்சய் பாரதி. தனுசு ராசி நேயர்களுக்கு இது சுமாரான காலம்தான்.