படம்: வேட்டையன்
நடிப்பு: ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், ராணா, பஹத் பாசில், கிஷோர், ரித்திகா சிங், துஷ்ரா விஜயன், ஜி எம் சுந்தர், அபிராமி, ரோகினி
தயாரிப்பு: லைகா சுபாஸ்கரன்
தயாரிப்பு மேலாண்மை: தலைமை: ஜி கே எம்.தமிழ் குமரன்
இசை: அனிருத்
ஒளிப்பதிவு: எஸ் ஆர் கதிர்
இயக்கம்: டி.ஜே .ஞானவேல்
பிஆர்ஓ: ரியாஸ், சதீஷ் ( AIM)
போலீஸ் டிஎஸ்பி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட். கற்பழித்து கொலை செய்யப்படும் டீச்சருக்காக ஒரு நபரை என்கவுண்ட்டர் செய்கிறார். அது போலி என்கவுண்டர். இதனால் அவர் மனம் நொந்து உண்மை யான குற்றவாளியை கண்டுபிடிப்பதுடன் என்கவுண்டர் செய்யப்பட்ட நபர் நல்லவர் என்பதை சமூகத்துக்கு எப்படி எடுத்துக்காட்டுகிறார் என்பதே கிளைமாக்ஸ்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாட்ஷாவாக , அண்ணாமலையாக , முத்துவாக அதிரி புதிரியாக நடித்த காலமெல்லாம் மலையேறிவிட்டதோ என்று தோன்றுகிறது அவரை வைத்து இப்போது எடுக்கப்படும் படங்கள் ஏனோ பெரிதாக சோபிப்ப தில்லை.
ஜெய்லர் படத்திற்கு கொடுக்கப்பட்ட பூஸ்ட் அந்தப் படத்தை தூக்கி நிறுத்தியது. அதில் ரஜினியின் ஆக்சன் காட்சிகளும் நறுக்குத் தெறிக்கும் வகையில் அமைந்திருந்தது.
ரஜினியின் வேட்டையன் எதிர்பார்ப்புமிக்க படமாக இருந்தது. ஆனால் ரஜினியின் கதாபாத்திரம் குற்றவாளியாக அவரை கண் முன் நிறுத்துகிறது.. . என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று தடாலடி என்ட்ரி கொடுக்கும் ரஜினி திடீரென்று போலி என்கவுண்டர் செய்துவிட்டார் என்று சொல்லி அவரது கதாபாத்திரத்தை மனம் குறுகுறுக்கும் வகையில் அமைத்திருப்பது முதல் கோணலாகி விடுகிறது.
தான் என்கவுண்டர் செய்த நபர் குற்றவாளி அல்ல என்பது தெரிந்த பிறகு அவரது தாய் கேட்டுக் கொண்டபடி அவர் குற்றம் அற்றவர் என்பதை சமூகத்துக்கு சொல்வதற்காக ரஜினிகாந்த் அடுத்தடுத்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் படத்தை நகர்த்தி செல்கிறது.
ஆக்சன் காட்சிகளில் கூட.ரஜினியை பெரிதாக சோபிக்க விடாதபடி அவரை ஒரு இடத்தில் நிற்க வைத்துவிட்டு ஸ்டன்ட் வீரர்கள் அவரை தாக்குவதுபோல் பாவ்லா காட்டி வர நின்ற இடத்திலேயே ரஜினிகாந்த் அவர்களை அடித்து துவம்சம் செய்வதெல்லாம் ரஜினிக்கான ஆக்ஷன் காட்சிகளே இல்லை.
அதிரடி என்ட்ரி கொடுத்து வில்லன் ராணாவை சட்டை காலரை பிடித்து இழுத்து வரும் ரஜினியின் கெத்து கொஞ்சம் நெஞ்சை நிமிர் வைக்கிறது. அடுத்த காட்சியிலேயே மேலதிகாரியிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்பின் மூலம் ராணாவை விட்டுவிட்டு கூனி குறுகி ரஜினி நடந்து செல்லும் காட்சி பெரும் ஏமாற்றம்.
கொலை செய்வது மக்கள் பணத்தை கல்வி, கோச்சிங் சென்டர் என்ற பெயரில் கொள்ளையடிக்கும் ராணாவுக்கு ஜெயில் தண்டனை, ஆனால் எந்த தப்புமே செய்யாத அப்பாவிக்கு என்கவுண்டர் என்று காட்சி அமைத்திருப்பது ரஜினிக்கு ஏற்புடைய காட்சி இல்லை.
கூலிங் கிளாஸ் கண்ணாடியை ஸ்டைலாக தூக்கி வீசி கண்ணாடி பிரேமில் பொருத்துவது, கையடக்க கேமராவை பகத் பாசிலிடம் ஸ்டைலாக தூக்கி வீசி அவரை கேட்ச் பண்ண செய்வது, , சொடக்கு போடுவது, என்று சில ஸ்டைல்களை செய்ய வைத்து ரஜினியை சமாதானம் செய்திருக்கிறார் இயக்குனர் ஞானவேல். ஆனால் இதெல்லாம் ரஜினி ரசிகர்களுக்கு போதுமா? நிச்சயம் போதாது.
அமிதாப் பச்சன் மனித உரிமை ஆணைய நீதிபதியாக வருகிறார் என்கவுண்டர் செய்வது தவறு, சட்டப்படிதான் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர வேண்டும் என்று அடிக்கடி உபதேசம் செய்கிறார்.
ரஜினிக்கு ஜோடியாக வரும் மஞ்சுவாரியர்.மனசிலாயோ பாடலில் ஸ்டைல் காட்டி ஆடுகிறார்.ஆனால் இந்தப் பாடலில் ரஜினிக்கு இன்னும் கூட வேகமான நடன அசைவுகள் வைத்திருந்தால் எடுபட்டிருக்கும்.
ரித்திகா சிங் ஒரு போலீஸ் அதிகாரியாக வருகிறார். சொன்ன வேலையை செய்துவிட்டு சென்றிருக்கிறார்.
பஹத் பாசில் ரஜினிக்கு உதவியாளர் போல் வருகிறார் அவரது சேட்டைகள் காமெடியன் இல்லாத குறையை தீர்க்கிறது.
பாகுபலி ராணா என்றதும் அவரது கட்டுக்கோப்பான உடற்கட்டு ஞாபகம் வருகிறது ஆனால் அதற்கெல்லாம் எந்த வேலையும் படத்தில் கிடையாது.
அபிராமிக்கு சொல்லும்படி வேடம் அமையவில்லை.
லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் பணத்தை அள்ளி இறைத்திருக்கிறார். ஆனால் அதெல்லாம் படத்தில் தெரிகிறதா என்றால் சந்தேகம் தான். படத்தில் நடித்தவர்களுக்கே பெருந்தொகை செலவழிந்திருக்கும் என்று தோன்றுகிறது இந்த கதைக்கு இவ்வளவு பெரிய ஸ்டார் காஸ்ட் தேவையா என்றுதான் ரசிகர்கள் கேட்கிறார்கள்.
அமிதாப்பை சமீபத்தில் சரியாக பயன்படுத்தியது பிரபாஸ் நடித்த கல்கி படத்தில்தான். அந்த படத்தை பார்த்த பிறகும் இப்படியொரு பாத்திரத்தில் அமிதாப்பை யோசித்திருப்பது ஏனோ?
ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் அதே பாணியில் இன்னொரு படத்தை தந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் அப்பாவி தண்டிக்கப்படுகிறான், இதிலும் அப்பாவி தண்டிக்கப்படு கிறான்.
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் டாக்டராக முடியாது, இன்ஜினியராக முடியாது என்று மாறி மாறி வரும் வசனங்கள் திக்ட்டுகிறது. அதே அரசு பள்ளி மாணவர்களுக்கு எப்படியெல்லாம் சிறந்த கல்வியை தரலாம் என்று ஒரு சில காட்சிகளையாவது அமைத்திருக்க வேண்டும்.
ரஜினியின் இமேஜை பா ரஞ்சித், ஞானவேல் போன்றவர்கள் தங்களது சொந்த கருத்தை பதிவு செய்யவே பயன்படுத்தி கொள்கிறார்களோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை.
எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவு வறட்சியான ஒரு கலர் டோனைபதிவு செய்திருக்கிறது.
அனிருத் இசையில் மனசிலாயோ பாடல் ஒன்றுதான் மனதில் நிற்கிறது.
வேட்டையன் – வேட்டையில்லை