இயக்குனர், வசனகர்த்தா, கதை ஆசிரியர் என பன்முகம் கொண்ட வி.சி.,குகநாதன் மறைந்த நடிகர் விவேக் பற்றி கூறியதாவது:
வெறும் கூட்டத்திற்கும், விவரமான ஊர்வலத்திற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.
சின்னக் கலைவாணர் என விவேக் அழைக்கப்பட்டதற்கு காரணம்
அவர் கலையுலகின் மூலமாகவும், சொந்த வாழ்விலும் ஆற்றி வந்த பகுத்தறிவு பிரச்சாரம், தமிழருக்கான சமுதாய வளர்ச்சிப் பணிகள்.
குத்தாட்ட நடிகைக்கு கூடுகின்ற கூட்டம் வேறு…
விவேக்கின் இறுதி ஊர்வலத்தில்
கண் நிறைந்த கண்ணீரோடு, மிகுந்த கட்டுப்பாட்டுடன் ஜாதி, மத, கட்சி பேதங்கள் இன்றி
இளைஞர் கூட்டம், கலைஞர்கள் கூட்டம், பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்…
பிரதமரின், முதல்வரின், எதிர்க்கட்சி தலைவர்களின் அர்த்தமுள்ள இரங்கல் செய்திகள் அனைத்துமே உண்மையானவை. உணர்வுப்பூர்வமானவை.
சென்ற தலைமுறையின் ஒரு மாபெரும் திரைப்பட கலைஞன் ரயில் நிலையங்களில் அனாதையாக அலைந்ததும், இறுதியில் மருத்துவமனையில் அனாதைப் பிணமாக காணப்பட்டதும்
நடந்த உண்மை.
கலைவாணரின் இறுதி நாட்களே துயரக் கடலிலே தான் முடிந்தது.
கலைஞர்கள் வெறும் கூத்தாடிகளாக, காட்சிப்பொருளாக மட்டுமே பார்க்கப்பட்டனர்.
திராவிடத் தலைமையும், கட்சியும்தான் கூத்தாடிகளை கலைஞர்கள் என கௌரவித்து பொதுவாழ்விலே ஈடுபட வைத்தது.
கட்சிப்பணி, கொள்கைப் பிரச்சாரம் ஆகியவற்றில் பயன்படுத்தி, அரசியலிலும் பதவிகள் தந்து அவர்களையும் புகழ் அடையச்செய்தது திராவிட இயக்கமே.
இதுதான் வரலாறு.
இந்த பரிணாம வளர்ச்சியின் எதிரொலிதான் விவேக்கின் உணர்வுப்பூர்வமான இறுதி ஊர்வலம்.
பகுத்தறிவு, சமூகநீதி, மொழிப்பற்று, இனப்பற்று இவற்றை நூறு வருடங்களாக விதைத்துவந்த திராவிட இயக்கத்தின் மீட்சியே
சின்னக் கலைவாணர் விவேக்கின் வாழ்வும், இறுதி ஊர்வலமும்.
அவரது இறுதி ஊர்வலத்தில் தமிழக மக்களின் விழிப்புணர்வையும் காணமுடிந்தது.
இதேபோல் தான் கலைவாணரும், எம்.ஜி.ஆரும், இன்னும் சில கலையுலகினரும் கொண்டாடப்பட்டனர்.
இந்தக் கலைஞர்களை தங்கள் கட்சியின் வளர்ச்சிக்கு பயன்படுத்த நினைக்கும் மற்றவர்கள்
இவர்களை உருவாக்கிய முக்கியத் தலைவர்களையும் கௌரவிக்க கற்றுக்கொண்டு விட்டால் எந்த பிரச்சினையும் ஏற்படாது.
அதை விட்டு
ஆடு பகை, குட்டி உறவு என்றால்
திராவிடத் தமிழர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இவ்வாறு வி.செ.குகநாதன் கூறி உள்ளார்.