படம்: தேள்
நடிப்பு: பிரபுதேவா, சம்யுக்தா ஹேக்டே, ஈஸ்வரிராவ், யோகிபாபு
தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன் கே. ஈ. ஞானவேல்ராஜா
இசை: சத்யா
ஒளிப்பதிவு: விக்னேஷ் வாசு
இயக்கம்: ஹரிகுமார்
பி ஆர் ஒ : சுரேஷ் சந்திரா
அம்மா சென்டிமென்ட்டில் ஒரு வட்டி வசூல் கதையாக உருவாகி இருக்கிறது தேள்.
கோயம்பேடு மார்க்கெட்டில் ரவுடியிடம் வட்டிக்கு பணம் வாங்கும் வியாபாரிகளிடம் வட்டியுடன் கடனை வசூல் செய்யும் அடியாளாக வலம் வருகிறார் பிரபுதேவா. ஈவு இரக்கம் எதுவும் இல்லாமல் வீட்டுக்குள் புகுந்தும், நடுரோட்டிலும் வட்டிக்கு வாங்கியவர் களை கை கால் உடைத்து பணத்தை வசூல் செய்கிறார். அனாதையாக சுற்றிக் கொண்டிருந்த பிரபுதேவாவை தேடி வரும் ஈஸ்வரிராவ், ”நான் தான் உனது அம்மா ”என்கிறார். அதை கேட்டு கோபம் அடையும் பிரபுதேவா கன்னத்தில் அறைந்து விரட்டியடிக்கிறார். ஆனாலும் விடாமல் பின்தொடர்ந்து தாய் பாசத்தை பொழிந்து அவர் மனதில் அம்மாவாக இடம் பிடிக்கிறார். திடீரென்று ஈஸ்வரி ராவ் காணாமல்போகிறார். அவரை யாரோ கடத்தி விட்டார்கள் என்று எண்ணி ஊர்முழுவதும் தேடுகிறார் பிரபுதேவா. ஆனால் எதிர்பாராத சம்பவங்கள் பிரபுதேவாவை நிலைகுலைய வைக்கி றது. அது என்ன என்பதை அதிர்ச்சியுடன் விளக்குகிறது கிளைமாக்ஸ்.
பிரபுதேவா படம் என்றதும் அட்டகாசமான நடனம் இருக்கும் என்று எண்ணிக்கொண்டு தியேட்டருக்குள் சென்றால் அவர் ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்து சண்டை காட்சிகளில் வெளுத்து கட்டுகிறார். நடுரோட்டிலும், வீட்டுக்குள்ளும் புகுந்து கடன்காரர்களை அடித்து துவைத்து பணம் வசூல் செய்யும் போது அசல் அடியாளாகவே மாறி இருக்கிறார்.
கோபக்கார பிரபுதேவாவிடம் நெருங்கி வரும் ஈஸ்வரிராவ், ”நான் தான் உன்னை பெற்ற அம்மா” என்று சொல்லி கண்கலங்க அதை கேட்டு ஷாக் ஆகும் பிரபுதேவா அவரை பளார் பளார் என்று கன்னத்தில் அறைந்து, முகத்தில் கையை வைத்து போ என்று தள்ளிவிட்டு விரட்டுவது அதிர்ச்சி. தொடர்ந்து தன் வீட்டுக்கு வந்து தாய்ப்பாசம் காட்டி தனக்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் ஈஸ்வரிராவின் பாசத்துக்கு பிரபுதேவா பெட்டிப் பாம்பாக அடங்கி அவரை அன்பாக தழுவி கண்ணீர் சிந்துவது உருக்கம்.
ஹீரோயினாக சம்யுக்த ஹெக்டே நடித்திருக்கிறார். ஒல்லி தேகம் என்றாலும் ஆட்டத்தில் பிரபுதேவாவை திணறடிக்கும் வேகம் காட்டி அசத்தி இருக்கிறார். அம்மா பாசம் கதை என்பதால் காதலுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போகிறது.
யோகிபாபு சம்யுக்த ஹெக்டேவின் நண்பராக வந்து அவருடன் பைக்கில் சுற்றுவதும் தேவையான இடங்களில் தனது டிரேட் மார்க் பஞ்ச் வசனங்கள் பேசுவதுமாக கலகலக்க வைக்கிறார்.
நடிகர் ஹரிகுமார் இப்படத்தின் இயக்குனர் பொறுப்பை ஏற்றிருக்கிறார். பிரபுதேவாவை இப்படித்தான் இயக்க வேண்டும் என்று இயக்குனர்கள் சிலர் வழக்கமாக கையாளும் பார்முளாவை உடைத்து அவரை ஆக்ஷன் ஹீரோவாகவும் அம்மா பாசத்துக்கு ஏங்குபவருமாக காட்டி மாறுபட்ட இமேஜை உருவாக்கி தந்திருக்கிறார்.
சத்யாவின் இசை, விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு படத்தை நேர்த்தியாக கொண்டு சென்றிருக்கிறது.
தேள் – பிரபுதேவாவின் இமேஜை மாற்றும் படம்.