Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

தலைவன் தலைவி (பட விமர்சனம்)

படம்:  தலைவன் தலைவி

நடிப்பு: விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு, செம்பன், பருத்திவீரன், சரவணன், தீபா, ஆர்.கே. சுரேஷ், காளி  வெங்கட், ஜானகி சுரேஷ்,  பேபி மகிழினி, அருள்தாஸ், வினோத் சாகர், சென்றாயன், கிச்சா ரவி,  ரோகன், ஆதித்ய கதிர்

தயாரிப்பு: டி. ஜி. தியாகராஜன், செந்தில், அர்ஜூன்

இசை: சந்தோஷ் நாராயணன்

ஒளிப்பதிவு: எம் சுகுமார்

இயக்கம்: பாண்டிராஜ்

பி ஆர் ஓ: நிகில் முருகன்

பரோட்டா மாஸ்டர் ஆகாச வீரன் (விஜய் சேதுபதி), தனது குடும்பத்துடன் பேரரசியை (நித்யா மேனன்) பெண் பார்க்க வருகிறார். பெண் வீட்டார் குடும்பத்தினருக்கு ஆகாச வீரனின்  பரோட்டா மாஸ்டர் வேலை பிடிக்காவிட்டாலும் பேரரசிக்கு ஆகாச வீரனை பிடித்து விடுகிறது. ஒருவழியாக இவர்களுக்கு திருமணம் நடக்கிறது. எவ்வளவு ஆசையாக திருமணம் செய்து கொண்டார்களோ அந்த அளவுக்கு இவர்கள் இருவருக்குள்ளும் தினம் தினம் சண்டை ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் இது  இரண்டு குடும்ப மோதலாக மாறி அடி தடி, கொலை முயற்சி, விவாகரத்து என்று நீள்கிறது. இவர்களது வாழ்க்கை என்னவாகிறது என்பதுதான் கிளைமாக்ஸ்.

கதை என்று எடுத்துக் கொண்டால் தினம் தினம் கணவன் மனைவிக்குள் மற்றும் கூட்டு குடும்பத்துக்குள் நடக்கும் சண்டை சச்சரவுதான்.

வகை வகையான பரோட்டா பெயர்களை சொல்லியே நித்யா மேனனை விஜய் சேதுபதி வளைத்து போடும் அந்த பெண்பார்க்கும் படல காட்சி ரொம்பவே ரசனையாக படமாக்கப்பட்டுள்ளது.  இந்த ஜோடி இணைந்த பிறகு  வாழ்வில் இணை பிரியாத ஜோடிகளாக இருப்பார்கள் என்று நினைத்தால் என்றைக்குமே தீராத  இஸ்ரேல் – ஈரான் போர்போல் இவர்களுக்குள் சண்டை தொடர்ந்து நடக்கிறது.

குலதெய்வ கோயில் வாசலில் விஜய் சேதுபதி குடும்பமும், நித்யா மேனன் குடும்பமும் அடித்துக் கொண்டு நாறும்போது இதற்கு ஒரு தீர்வு ஏற்படாதா கடவுளே என்று படம் பார்ப்பவர்களே ஆண்டவனை வேண்டிக் கொள்ள தோன்றுகிறது.

விஜய் சேதுபதியின் கோப கூச்சல் காது ஜவ்வை கிழித்து விடுகிறது. அவருக்கு அடிக்கடி பதிலடி கொடுத்து பேசும் நித்யா மேனன் எவ்வளவுதான் கத்தி பேசினாலும் பெண்மையின் கீச்சு குரல் காற்றில் ஊர்ந்து வருகிறது.

விஜய் சேதுபதிக்கும், மச்சான் ஆர் கே சுரேஷுக்கும் நேருக்கு நேர் பார்க்கும்போதெல்லாம் அக்னி நட்சத்திரம் பிரபு கார்த்திக் போல் முறைத்துக் கொள்வதும் மோதிக்கொள்வதும் ஏதோ ஒரு காரணத்துக்காக நடக்கிறது என்பதை  இயக்குனர் சுட்டிக்காட்டுகிறார் ஆனால் கடைசி வரை அந்த மோதலுக்கு என்ன காரணம் என்று விடையே சொல்லாமல் விடுவதெல்லாம் ரொம்பவே ஓவர்.

விஜய் சேதுபதி ஒரு நல்ல கணவனாக, தாய் தந்தைக்கு ஒரு நல்ல மகனாக நடந்து கொள்ள வேண்டும் என்று நடக்கப் பார்த்து இருதலை  கொள்ளி எறும்பாக மனைவி நித்யா மேனனிடமும், தாய் தீபாவிடமும் சிக்கிக் கொண்டு திண்டாடுவது நிஜ வாழ்வில்  பல மகன்களின் போராட்டத்தை கண்முன் நிகழ்த்தி காட்டுகிறார்.

மாமியார், மருமகள் சண்டை  எல்லா குடும்பத்திலும் எப்படியெல்லாம் நடக்கிறது என்று இயக்குனர் பாண்டிராஜ் இந்த படத்தில் புட்டு புட்டு வைத்திருக்கிறார். இவர்களுக்குள் நடக்கும் மோதலுக்கு ஈகோ தான் காரணம் என்று ஒரே போடாக போடுவது மறுக்க முடியாத உண்மை

படத்தில் யோகி பாபு ஒரு செயின் திருடனாக வருகிறார். அவ்வப்போது பஞ்ச் டயலாக் பேசி காமெடி அலைகளை படர விடுகிறார்.

சத்யஜோதி பிலிம்ஸ் டிஜி தியாகராஜன் வழங்க படத்தை  செந்தில்,  அர்ஜுன் தயாரித்திருக்கிறார்கள்.

சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் இனிமையாக ஒலித்தாலும் விஜய் சேதுபதி,  நித்யா மேனன் போடும் காட்டுத்தனமான சண்டையை மீறி இசை காதை துளைத்தெடுக்கிறது.

சுகுமார் கேமரா பளிச்சென பதிவு செய்திருக்கிறது.

குடும்ப பட ஸ்பெஷலிஸ்ட் இயக்குனர் பாண்டிராஜ் கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை படங்களுக்குப் பிறகு தலைவன் தலைவி படத்தை குடும்ப படமாக வழங்க முயற்சித்திருக்கிறார். ஆனால் இதில் குடும்ப சண்டை ஒரே கலவரமாகி அரங்கை அல்லோகலப் படுத்துகிறது. படத்தில் கொஞ்சம் சண்டையை குறைத்தால் தியேட்டரில் கொஞ்சம் பதற்றம் தணியும்.

சண்டை போடும் சில ஜோடிகள் படத்தைப் பார்த்து  திருந்த வாய்ப்புள்ளது அதேசமயம் மாமியார் மருமகளோடு வந்தால் மீண்டும் போர் வெடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. எச்சரிக்கை அவசியம்.

தலைவன் தலைவி – தீராத குடும்ப போராட்டம்.

By : ஜெயச்சந்திரன் கே.

www.trendingcinemasnow.com

 

 

 

Related posts

ராகினி திவேதி மிரட்டும் ‘ஈமெயில்’*

Jai Chandran

நடிகர் மன்சூர் அலிகான் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்

Jai Chandran

Dunki: Drop 3 – Nikle The Kabhi Hum Ghar Se

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend