Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

தாய் கிழவி (பட விமர்சனம்)

படம்: தாய் கிழவி

நடிப்பு: ராதிகா சரத்குமார், முனிஷ்காந்த், சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன், இளவரசு, முத்துக்குமார் ஜார்ஜ் மரியன், ரேச்சல் ரெபகா

தயாரிப்பு: சுதன் சுந்தரம், சிவகார்த்திகேயன் (பேஷன் ஸ்டுடியோஸ் அண்ட் சிவகார்த்திகேயன் ப்ரொடக்க்ஷன் )

இசை: நிவாஸ் கே பிரசன்னா

ஒளிப்பதிவு : விவேக் விஜயகுமார்

இயக்கம்: சிவகுமார் முருகேசன்

பிஆர்ஓ : சுரேஷ் சந்திரா (D’One), அப்துல் ஏ நாசர்

கதை: படிப்பறிவு அதிகம் பெறாத மக்கள் வாழும் அந்த ஊரில் தாய் கிழவி பவுனுத்தாயி ஒரு முரட்டு கிழவியாக வலம் வருகிறார். அவரைக் கண்டாலே ஊரே அலறுகிறது. எதையும் தன் கையில் இருக்கும் தடியால் அடித்து கேட்கும் தடாலடி தாய் கிழவியான பவுனுத்தாய் திடீரென்று உடல்நிலை பாதித்து படுக்கையில் சாய்கிறார். அதைக் கேட்டு ஊரே குஷியில் ஆழ்கிறது. எப்போது சாவார் என்று எல்லோரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில் தாய்க்கிழவியிடம் 160 பவுன் தங்க நகை இருப்பதாக தகவல் கேட்டு அவரது மூன்று மகன்கள் எப்படியும் கிழவி இறந்தால் அந்த நகைகளை ஆட்டையை போடலாம் என்று எண்ணுகின்றனர். தாய் கிழவியால் பேச முடியாததால் அவரிடம் நகை ரகசியத்தை அறிந்து கொள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்து சிகிச்சை அளித்து ரகசியத்தை அவர் வாயாலயே அறிய முயல்கின்றனர் இந்த கலவரத்தில் தாய் கிழவி உயிர் பிழைத்தாரா? நகை இருப்பது உண்மையா? என்ற கேள்விகளுக்கு நகைச்சுவையோடு பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்.

தமிழ் திரை உலகில் கடந்த சில வருடங்களாகவே சாதிய படங்கள் வரத் தொடங்கி அது விமர்சனங்களுக்கு உள்ளாகி கொண்டு இருக்கிறது , அதேபோல் சனாதன கதைகளை மையமாக வைத்து புராண படங்கள் நவீன யுக்திகளோடு படமாக்கப்பட்டு தங்களது சனாதன கருத்துக்களை பரப்பிக் கொண்டிருக்கிறது இன்னொரு கூட்டம். ஆனால் இதற்கெல்லாம் மேலாக சமுதாய மேம்பாடு, பெண் விடுதலை போன்றவற்றை நூறு வருடங்களுக்கு முன்பே தலைமையில் சுமந்து ஊரெல்லாம் பரப்பிய ஒரு பெரியவர் சனாதனத்தையும் சாதிய பாகுபாடுகளையும் சம்மட்டிக்கொண்டு கொண்டு அடித்து தகர்த்தார். அதன் தொடக்கமாக கலைஞர் வசனத்தில் நடிகர் திலகம் நடிப்பில் பராசக்தி படம் திரைக்கு வந்தது. அதன் பிறகு சினிமா மீதான பார்வையும் சமுதாயத்தின் மீதான பார்வையும் வேறு கோணத்தில் பயணிக்க தொடங்கியது.
கடந்த சில காலங்களாக தான் சனாதனமும் சாதியமும் மீண்டும் தமிழ் சினிமாவில் தலைகாட்ட தொடங்கி இருக்கிறது முளையிலேயே கிள்ளி எறியும் முனைப்பாகத்தான் தற்போது பெரியாரிய சிந்தனை கொண்ட படங்கள் திரைக்கு வந்து சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் அது வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போன்று இளம் தலைமுறைக்கும் புரியும் வகையில் தற்போது படமாக்கப்பட்டு வருவதுதான் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் அதேபோல் பிரதீப் ரங்கநாதன் நடித்த டியூடு (DUDE) படமும் பெண்ணிய சுதந்திரத்தை பேசியது, அதன் தொடர்ச்சியாக தாய்க்கிழவி படமும் பெரியாரின் பெண்ணிய சுதந்திர கருத்தை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது.

தாய் கிழவி பவுனு தாயாக நடித்திருப்பது ராதிகாதானா என்று கேட்கும் அளவுக்கு அவரது தோற்றமும் நடிப்பும் இமயத்தை தொடும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறது கையில் தடி வைத்துக்கொண்டு தோரணையாக சிரித்தபடி நடந்து வரும் ராதிகா ரோட்டில் வம்பு செய்பவர்களை அடித்து விரட்டி ஓட விடுவது சனாதன சங்கிகளை பெரியார் தனது தடியால் அடித்து ஓடவிட்டது போல தெறிக்க விடுகிறார்.

ராதிகாவின் ஆட்டம் தொடக்கத்தில் சில காட்சிகளில் தொடர இவரது ஆர்ப்பாட்டம் கடைசி வரை இப்படித்தான் இருக்குமோ என்று எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென்று அவரை படுக்கையில் கிடத்தி இப்ப நடி பார்க்கலாம் என்று டைரக்டர் சவால் விட, அதை தனது அசால்ட்டு நடிப்பால் ஊதி தள்ளி விடுகிறார். படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்பது போல் படுத்துக் கொண்டே நடிப்பில் ஜெயித்திருக்கிறார். இந்த வருடம் ராதிகாவுக்கு விருதுகள் ஆண்டாக இருக்கும் என்பது உறுதி.

கிளைமாக்சில் தனது மருமகள்கள், மகள் ஆகியோரை அழைத்து எப்படி பெண் பிள்ளைகள் இந்த சமுதாயத்தில் யாரையும் சார்ந்திருக்காமல் உழைத்து முன்னேற வேண்டும் என்பதற்காக சொல்லும் வார்த்தைகளில் அரங்கமே கைதட்டலில் நிறைகிறது குறிப்பாக வாழவெட்டியாக தன் வீட்டில் இருக்கும் மகளின் தாலியை கழற்றி அவளை கைவிட்ட கணவனின் முகத்தில் தூக்கி எறிந்து விட்டு தன் மகளை முனீஸ்காந்த்துக்கு திருமணம் செய்து வைத்து ராதிகா ஆசீர்வதிக்கும்போது பெண்களின் வாக்குகளை ஒரேயடியாக அள்ளிக் கொள்கிறார்.

முனிஷ்காந்த், அருள்தாஸ், சிங்கம் புலி, பால சரவணன், இளவரசு , முத்துக்குமார் தவிர அந்த மதுரவீர சாமி பூசாரி தொடங்கி கடைசியாக ஆர்த்தி எடுக்கும் பாட்டிகள் வரை உன்னதமான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.

தாய் கிழவி படம், ராதிகா தான் பிரதான கதாபாத்திரம் வேறு பெரிய ஸ்டார்கள் கிடையாது, பெண்ணியம் தான் கதையின் முக்கிய கரு என்று ஒரு இயக்குனர் சொல்லும்போது எந்த தயாரிப்பாளராக இருந்தாலும் ஒரு நிமிடம் யோசித்து விட்டு ஒதுங்கத்தான் செய்வார்கள் ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன் கதையின் கருவை புரிந்து கொண்டு இதுதான் சமுதாயத்துக்கு சொல்ல வேண்டிய கதை என்பதை முடிவு செய்து தயாரிப்பாளராக களம் இறங்கி எந்த ஒரு கமர்சியல் அம்சத்தையும் சேர்த்து சினிமாத்தனம் ஆக்காமல் சொல்ல வந்த கருத்தை இயக்குனர் சிவகுமார் முருகேசன் எப்படி சொல்ல எண்ணினாரோ அப்படியே சொல்லுங்கள் என்று சுதந்திரத்தை கொடுத்தது தான் இந்த படத்திற்கு வெற்றியை உறுதி செய்திருக்கிறது.
நடிகராக ஒரு பக்கம் தன்னை ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்திக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் தாய் கிழவி, கொட்டுக்காளி போன்ற படங்களை தயாரிப்பதன் மூலம் தன்னை ஒரு அர்த்தமுள்ள தயாரிப்பாளராகவும் நிரூபித்து வருவது அவரது தனி சிறப்பு.

நிவாஸ் கே பிரசன்னா இசை விவேக் விஜயகுமார் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

தாய் கிழவி – சனாதன சங்கிகளை தலை தெறிக்க ஓட விடும் பெரியாரின் தடாலடி கைத்தடி.

Review By
K. Jayachandhiran
trending cinemas now com

Related posts

எஸ்.ஜே.சூர்யா பிறந்த நாள் கொண்டாடிய ஜப்பான் ரசிகைகள்

Jai Chandran

நிவின்பாலி-அஞ்சலியின் படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் துவங்கியது

Jai Chandran

சத்தியத்தால் எழுதப்படும் தீர்ப்பு வேண்டும் .. வைரமுத்து விளாசல்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend