படம்: தடயம் (வெப் சீரிஸ்
நடிப்பு: சமுத்திரக்கனி, ஷிவதா, ராஜ் த்ரண்டாஸ் , மூணாறு ரமேஷ், பிரேம், ரவிச்சந்திரன் கார்த்திக், அபிஷேக், ஜோசப் ஜார்ஜ், ஸ்வப்னா, தயாளன், விசாகன், சுந்தர பாண்டியன், கொற்றவை, புலிப்பாண்டி
தயாரிப்பு: அஜய் கிருஷ்ணா
ஒளிப்பதிவு: கேகே
இசை: விபின் பாஸ்கர்
எடிட்டிங்: தினேஷ்குமார்
இயக்கம்: நவீன் குமார் பழனிவேல்
வெளியீடு: zee5 OTT தளம்
பிஆர்ஓ : சதீஷ் (AIM)
90 காலகட்டங்களில் ஆந்திரா தமிழ்நாடு எல்லைப் பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தடயம் வெப் சீரிஸ் உருவாக்கப்பட்டிருக்கிறது.
கதை: கணவன் மனைவி அடித்து கொல்லப்படுவதுடன் அந்தப் பெண்ணின் தாலி, ஆணின் அரைஞான் கயிறு இரண்டையும் கொலைகாரர்கள் அறுத்து செல்கிறார்கள் இது போன்ற கொலை அடுத்தடுத்து நடப்பதால் போலீஸ் தீவிர விசாரணையில் இறங்குகிறது. இந்த வழக்கில் உள்ள முக்கியமான தடையங்களை திறமையற்றவர் என்று மட்டம் தட்டி வைக்கப்பட்ட அதியமான் (சமுத்திரக்கனி ) கண்டுபிடித்து அதை தன் மனதிற்குள்ளேயே வைத்துக் கொள்கிறார். உயர் அதிகாரிகள் அதியமானை அவமானப்படுத்துவதில் குறியாக இருப்பதால் அவர் வேலையை தன்னிச்சையாக ராஜினாமா செய்து விட்டு செல்ல கடிதம் தருகிறார். இந்நிலையில் அந்த போலீஸ் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டராக வரும் பெண் அதிகாரி ( ஷிவதா ) அதியமான் பற்றி கேள்விப்பட்டு அவரிடம் இந்த கொலைகளை துப்பறியும் டீம் அதிகாரியாக பொறுப்பு ஒப்படைக்கிறார். அதை ஏற்று அதியமான் செயல்படுகிறார். இதில், இந்த கொலை செய்பவர்கள் ஆந்திராவிலிருந்து வருபவர்கள் என்ற உண்மையை கண்டுபிடிக்கும் அதியமான் அதை இன்ஸ்பெக்டரிடம் சொல்லி விசாரணையை தீவிரப் படுத்துகிறார். இந்த தேடுதல் வேட்டையில் கொலைகாரர்களை அவர்களால் கைது செய்ய முடிந்ததா என்பதற்கு வெப் சீரிஸ் விறுவிறுப்பாக பதில் அளிக்கிறது.
கிரைம் த்ரில்லர் வெப் சீரிஸ் என்றாலே அதற்கு. ரசிகர்களிடம் தனி வரவேற்பு உண்டு. குறிப்பாக ott ரசிகர்களுக்கு இது போன்ற ஒரு சில வெப் சீரிஸ்கள் தூக்கத்தை கெடுத்து தொடரச்சியாக பார்க்க வைக்கும் ஆர்வத்தை தூண்டும் வெப் சீரிஸ்களாக அமைந்து விடுகிறது. அந்த பட்டியலில் தடயம் வெப் சீரிஸும் இடம் பிடிக்கும்.

சமுத்திரக்கனி தடாலடியாக இறங்கி அதிரடி செயல்களில் ஈடுபட்டு கொலைகாரர்களை கண்டுபிடிப்பார் என்று எண்ணினால் அது தவறு அவர் நிதானமாக யோசித்து தீர ஆராய்ந்து ஒவ்வொரு தடயத்தையும் சேகரித்து புத்திசாலித்தனமாக கொலைகாரர்களை கண்டுபிடிக்கும் செயல்கள் வெப்சீரிசை இன்ட்ரஸ்டிங்காக கொண்டு செல்கிறது.
கொலைகாரர்கள் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்பதை கண்டுபிடிக்கும் சமுத்திரகனி இன்ஸ்பெக்டர் சிவாதாவை அழைத்துக் கொண்டு ஆந்திரா போலீஸை சந்திப்பதும் அவர்கள் சரியான ஒத்துழைப்பு கொடுக்காவிட்டாலும் அதையும் மீறி தனது புத்திசாலித்தன செயல்களால் கொலைகாரர்களை கண்டுபிடிக்கும் பாங்கு இன்ப அதிர்ச்சிகளை அளிக்கிறது.
ஒரு கட்டத்தில் கொலைகாரர்கள் வீட்டிற்கு சென்று அவர்கள்தான் கொலைகாரர்கள் என்று தெரியாமல் சமுத்திரகனையும் உடன் வரும் போலீஸ்காரர் புலிப்பாண்டியும் உணவருந்தும்போது தங்களைத்தான் இவர்கள் தேடி வந்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு கொலைகாரர்கள் சமுத்திரகனியையும், புலி பாண்டியையும் கொல்வதற்கு ஆயுதங்களை தூக்கிச் சென்று தாக்க முற்படுவது அடுத்து என்ன நடக்குமோ என்ற பரபரப்பை ஏற்படுத்துகிறது.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஷிவதா மென்மையான இன்ஸ்பெக்டராக நடித்திருக்கிறார். இன்ஸ்பெக்டர் பொறுப்பில் இருக்கும் நிலையில் இன்னும் கூட தனது நடிப்பில் வேகத்தையும், பரபரப்பையும் கூட்டியிருக்கலாம். புன்னகையை குறைத்துக் கொண்டு கொஞ்சம் முறைப்பான பார்வையும் வைத்ந்திருதால் கதாபாத்திரம் கூடுதல் பலம் பெற்றிருக்கும்.
கொலைகாரர்களாக நடித்திருக்கும் ராஜ் த்ரண்டாஸ், பிரேம் இருவரும் பார்வையிலேயே பயமுறுத்துகிறார்கள். குறிப்பாக ராஜ் த்ரண்டாஸ் பார்வையில் கொலை வெறி தாண்டவமாடுகிறது.
அஜய் கிருஷ்ணா தடயம் வெப்சீரிசை தயாரித்திருக்கிறார். விறுவிறுப்பான இந்த வெப் சீரிஸை ஜி5 ஓடிடி தளம் வெளியிடுகிறது.
கவனத்தை ஈர்க்கும் ஒளிப்பதிவை கேமரா மேன் கேகே செய்திருக்கிறார்.
காட்சிகளுக்கு உயிரூட்டி இருக்கிறது விபின் பாஸ்கர் இசை. தினேஷ்குமார் கத்தரி கச்சிதமான எடிட்டிங் பணியை செய்திருக்கிறது.
90 காலகட்டங்களில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இயக்குனர் நவீன் குமார் பழனிவேல் வெப் சீரிசை வெகு நேர்த்தியாக இயக்கியிருக்கிறார். கொலைகாரர்கள் என்ட்ரியை காட்டும்போதே திகில் பரவ விடுகிறார். அந்த திகிலையும் பரபரப்பையும் கடைசி காட்சி வரை கொண்டு சென்றிருப்பது பிளஸ்.
தடயம் – ரிமோட்டை ஆப் செய்யாமல் பார்க்க வைக்கும் க்ரைம் திரில்லர்.

Review by
K. Jayachandhiran
trending cinemas now. com
