படம்:ஆர் ஆர் ஆர்
நடிப்பு: ராம் சரண், ஜூனியர் என் டி ஆர், அலியாபட், அஜெய் தேவ்கன், அலியாபட், சமுத்திரக்கனி, அலிசன் டூடி, ஸ்ரேயா, ஒலிவியா மோரிஸ்,
தயாரிப்பு: டி. வி. வி. தானய்யா
இசை: மரகதமணி
ஒளிப்பதிவு: செந்தில்குமார்
கதை: கே.வி. விஜயயேந்திர பிரசாத்
வசனம்: மதன் கார்க்கி
இயக்கம்: எஸ்.எஸ்.ராஜமவுலி
ரிலீஸ் : சுபாஷ்கரனின் லைகா நிறுவனம்
பி ஆர் ஓ: நிகில் முருகன்
பிரிட்டிஷ் ஆட்சி அதிகாரத்துக்கு கட்டுப்பட்ட போலீஸ் அதிகாரி அல்லூரி சீதாராம ராஜு (ராம் சரண்) வெள்ளைக்கார அதிகாரிகளின் ஆணைக்கு விசுவாசமாக இருந்து வெள்ளையர்களை எதிர்ப்பவர்களை அடித்து துவம்சம் செய்கிறார். ஆனால் சீதாராம ராஜுவின் மனதில் வெள்ளையர்களுக்கு எதிரான ஒரு சுதந்திர வெறி கொழுந்து விட்டு எரிந்துக்கொண்டிருக்கிறது. அதற்கான தருணம் பார்த்து காத்திருக்கிறார். காட்டுப்பகுதியில் பழங்குடியினத் தை சேர்ந்த சிறுமி, அழகிய டாட்டூ ஓவியத்தை வெள்ளைகார அதிகாரியின் மனைவிக்கு வரைந்து விடுகிறார். டாட்டூ அழகில் மயங்கிய அதிகாரியின் மனைவி அந்த சிறுமியை தன் அரண்மனைக்கு கடத்தி செல்கிறார். அந்த சிறுமியை மீட்டுச் செல்லும் எண்ணத்துடன் டெல்லி பட்டணத்துக்கு வருகிறார் பழங்குடியினத்தை சேர்ந்த கொமரம் பீம் (ஜூனியர் என் டி ஆர்). டெல்லிக்குள் பீம் நுழைந்து சிறுமியை தேடுகிறார் என்ற தகவல் வந்ததும் பீம்மை பிடித்து தருபவர் களுக்கு உயர்பதவி அளிப்பதாக அறிவிக்கப்படுகிறது. சீதாராம் ராஜூ அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டு பீம்மை தேடி அலைகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் நண்பர்களாக அறிமுகமாகி நட்புடன் பழகுகின்றனர். தான் தேடும் நபர் இவர்தான் என்று தெரிந்ததும் பீம்மை வெள்ளையர் அதிகாரியிடம் பிடித்துக் கொடுக்கிறார் சீதாராம். பீமுக்கு தூக்கு தண்டனை அறிவிக்கப்படுகிறது. உயர் அதிகாரியிடம் பீமை ஒப்படைத்தாலும் நட்புக்கு துரோகம் செய்யாமல் பீமை தூக்கிலிருந்து காப்பாற்ற உதவுகிறார் சீதாராம் ராஜூ. இதனால் வெள்ளையர்களின் கோபத்துக்கு ஆளாகி சிறையில் அடைக்கப்படுகிறார் சீதாராம ராஜூ. அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை அறிந்த பீம் நண்பனை காப்பாற்ற தனி ஆளாக வெள்ளைய அதிகார வர்க்கத்தை எதிர்க்க துணிகிறார். பிறகு சீதாராம ராஜூ, பீம் இணைந்து எப்படி வெள்ளையர் அதிகாரத்தை தரைமட்டமாக்குகின்றனர் என்பது கிளைமாக்ஸ்.
பாகுபலிக்கு பிறகு ராஜமவுலியின் இயக்கத்தில் மீண்டும் ஒரு பிரமாண்ட படத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்த ரசிகர் களுக்கு விருந்தாக ஆர் ஆர் ஆர் வந்திருக்கிறது.
ராம் சரண், ஜூனியர் என் டி ஆர் இணைந்து நடிப்பது ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் அந்த எதிர்பார்ப்பையும் மீறிய படமாக இருவரும் தங்களது அட்டகாசமான நடிப்பின் மூலம் ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தியிருக்கின்றனர்.
பல்லாயிரக் கணக்கில் திரண்டு போரட்டம் நடத்தும் மக்கள் கூட்டத்திலிருந்து ஒருவன் வெள்ளைக்கார துரையின் படத்தை கல்லெறிந்து உடைத்ததற்காக தனி ஆளாக அந்த கூட்டத்துக்குள் குதித்து தன்னை தடுக்கவும், தாக்கவும் வருவர்களை அடித்து நொறுக்கி குறிப்பிட்ட ஆளை பிடித்து அடித்து இழுத்து வரும் முதல் காட்சியிலேயே ரசிகர்களின் நரம்பை முறுக்கேற்றிவிடுகிறார் ராம் சரண்.
அதேபோல் ஜூனியர் என் டி ஆர் என்ட்ரி காட்சியில் காட்டுப் பகுதியில் தன்னை தாக்க துரத்தி வரும் ஓனாய் மற்றும் புலியிடமிருந்து தப்பி ஓடுவதும் பிறகு புலியை வலை விரித்து பிடித்து அடக்கும் காட்சியில் மிரள வைத்துவிடு கிறார்.
ஒவ்வொரு ஆக்ஷன் காட்சியும் ஒவ்வொரு கிளைமாக்ஸ் போல் இயக்கியிருக்கிறார் ராஜமவுலி. கற்பனை செய்ய முடியாதளவுக்கு ஆக்ஷன் காட்சிகளை அமைத்த ஸ்டண்ட் மாஸ்டரை பாராட்டியே ஆக வேண்டும். அவரது அபாயகர மான ஆக்ஷன் சீன்களுக்கு முழுமையாக தங்களை அர்பணித்திருக்கின்றனர் ஹீரோக்கள் ராம் சரண், ஜூனியர் என் டி ஆர்.
குறிப்பாக சிறுமியை காப்பாற்ற ஜூனியர் என் டி ஆர் கோட்டைக்குள் தனி ஆளாக நுழைந்து அதிரடி காட்டுவதாகட்டும், பாதாள சிறைக்குள் அடைப்பட்டு கிடக்கும் ராம் சரணை தோளில் சுமந்தபடி சாகசம் செய்வதாகட்டும், கிளைமாக்ஸில் ராம் சரண், ஜூனியர் என் டி ஆர் இணைந்து காட்டுப்பகுதியே குலுங்கும் அளவுக்கு பிரிட்டிஷ் படையினரை துவம்சம் செய்வதாகட்டும் மிரட்டி இருக்கிறார்கள்.
ராம் சரண், ஜூனியர் என் டி ஆரின் ”நாட்ட நாட்ட கூத்து” பாட்டும் ஆட்டமும் அரங்கையே துள்ளளாட்டம் போட வைக்கிறது.
அஜெய் தேவ்கன் விடுதலை போராளிகளை உருவாக்கும் போராளி தலைவனாக நிமிர்கிறார். சமுத்திரக்கனி, ஆலியாபட், ஸ்ரேயா என மற்ற பாத்திரங்கள் கொடுத்த பணியை செய்திருக்கின்றனர்.
கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை, மதன் கார்க்கி வசனம், மரகதமணி இசை, ராஜமவுலி இயக்கம் என இந்த வெற்றி கூட்டணியின் 100 சதவீத உழைப்பும் ஆர் ஆர் ஆர் என்ற அற்புதத்தை உருவாக்கி தந்திருக்கிறது.
செந்தில்குமாரின் ஒளிப்பதிவு பிரிட்டிஷ் காலகட்டத்தை தத்ரூபமாக படம் பிடித்திருக்கிறது.
டி வி வி எண்டர்டெயிமெண்ட் சார்பில் டி வி வி தானய்யா தயாரித்திருக்கிறார். தமிழில் இப்படத்தை சுபாஷ்கரனின் லைகா நிறுவனம் வெளியிடுகிறது.
ரத்தம் ரணம் ரவுத்ரம் என்று ஆர் ஆர் ஆர் என்பதற்கு டைட்டில் விளக்கம் தரப்பட்டி ருக்கிறது. அதையே ராஜமவுலி ராம்சரண் , ராமராவ் எனவும் கூறலாம்
ஆர் ஆர் ஆர் – 3 மணி நேரம் ஓடும் படம் என்றாலும் கண்களை அகல விரித்தபடி கடைசிவரை இருக்கையில் ரசிகர்களை கட்டிப்போடுகிறது.