படம்: ரிங் ரிங்
நடிப்பு: விவேக் பிரசன்னா , சாக்ஷி அகர்வால், டேனியல், பிரவீன் ராஜா, அர்ஜுனன், சுவயம் சித்தா
தயாரிப்பு: தியா சினி கிரியேஷன்
இசை: பேட்டை வசந்த்
ஒளிப்பதிவு: பிரசாத்
இயக்கம்: சக்திவேல் செல்வகுமார்
பிஆர்ஓ: சக்தி சரவணன்
செல்போனை மையமாக வைத்து சமீபத்தில் சில படங்கள் வந்திருக்கின்றன. அதில் லவ் டுடே படமும் ஒன்று.. அந்த வரிசையில் செல்போனை மையமாக வைத்து வந்திருக்கிறது ரிங் ரிங்..
ஒரு சிலருக்கு செல்போனில் ரிங் அடித்தால் கிளுகிளுப்பாக இருக்கும், சிலருக்கு பதைதைப்பாக இருக்கும். இந்த இரண்டும் கலந்த கதை தான் ரிங் ரிங்.
விவேக் பிரசன்னா, டேனியல், பிரவீன் ராஜா, அர்ஜுனன் நான்கு பேரும் நண்பர்கள். ஒரு நாள் அர்ஜுனன் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுவதற்காக சக நண்பர்கள் மூவரையும் குடும்பத்துடன் தன் வீட்டிற்கு வரும்படி அழைக்கிறார். அதன்படி விவேக் பிரசன்னா மனைவியுடனும், டேனியல் காதலியுடனும் வருகின்றனர். பிரவீன் தன் மனைவிக்கு உடம்பு சரி இல்லை என்று கூறிவிட்டு தனியாக வருகிறார். அனைவரைம் அர்ஜுனன் தனது மனைவி சாக்ஷி அகர்வாலுடன் இணைந்து வரவேற்கிறார். அனைவரும் சாப்பிட ஒன்றாக அமர்கிறார்கள். அப்போது டேனியல், பிரசன்னாவை பார்த்து உன் செல்போனில் ரகசியம் இருக்கிறது என்ற ஒரு பிரச்சினையை கிளப்ப அதைக் கேட்டு பிரசன்னா மனைவி கோபம் அடைகிறார். போனில் என்ன ரகசியம் இருக்கிறது என்று கேட்க அதுவே எல்லோருக்கும் ஒரு சவாலாக மாறுகிறது. அனைவரும் தங்களது செல்போனை எடுத்து டேபிள் மீது வைக்கிறார்கள். அப்போதிருந்து வரும் மெசேஜ், போன் கால் எல்லாவற்றையும் ஸ்பீக்கரில் போட்டு கேட்கிறார்கள். அதில் பல ரகசியங்கள் அம்பலத்துக்கு வருகிறது. இதனால் இளம் ஜோடிகளுக்குள் மோதல் ஏற்படுகிறது. இதன் முடிவு என்ன என்பதற்கு விறுவிறுப்பான பதில் அளிக்கிறது ரிங் ரிங் திரைப்படம்.
காதலிக்கும் போது phone – அ மாத்துனா அது – Love Today
கல்யாணத்துக்கு அப்புறம் phone – அ மாத்துனா அது – Ring Ring என்று இயக்குனர் சக்திவேல் ரிங் ரிங் படத்திற்கு ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார். அது சரியான விளக்கம் தான்.
டேபிள் மீது விவேக் பிரசன்னா, டேனியல், பிரவீன், அர்ஜுனன் எல்லோரும் போனை வைத்துவிட்டு அதில் எந்த நேரத்தில் என்ன மெசேஜ் வருமோ, எந்த நேரத்தில் தனது ரகசிய காதலியிடம் இருந்து போன் வருமோ அல்லது ஆபாச படம் வருமோ என்று ஒவ்வொருவரும் பயந்து கொண்டிருக்கும்போது ஒவ்வொருவரின் ரகசியமும் உடைவதும் அதன் மூலம் மனைவிகளுடன் மோதல் ஏற்படுவதும் எதற்கு இந்த விபரீத விளையாட்டு என்று எண்ணத் தோன்றுகிறது இந்த விளையாட்டு எங்கு போய் முடியுமோ என்ற ஒரு பரபரப்பையும் ஏற்படுத்துகிறது.
படத்தின் பெரும்பகுதி நான்கு ஜோடிகளும் டைனிங் டேபிளில்.அமர்ந்தபடி பேசி காட்சிகளை நகர்த்துகின்றனர். ஆனால் கொஞ்சம் கூட சலிப்பு ஏற்படாமல் அடுத்து எந்த ஜோடிக்கு வேட்டு வரும் என்ற பதட்டத்தை இயக்குனர் ஏற்படுத்தியிருப்பது கெட்டிக்காரத்தனம்.
தன் மனைவிடம் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக விவேக் பிரசன்னா நண்பன் பிரவீன் போனை மாற்றி வைப்பதும் ஆனால் அதில் வரும் மெசேஜ் விவேக் பிரசன்னாவை வேறு ஒரு சிக்கலில் மாட்டி விடுவதும் எதிர்பார்க்காத ஷாக்.
படத்தில் நடித்திருக்கும் இந்த ஜோடிகள் அத்தனையுமே நடிப்பில் கை சேர்ந்த ஜோடிகள் என்பதால் உட்கார்ந்து இடத்திலேயே தங்களது முகபாவனை மூலம் காட்சிகளை மெருகேற்றி இருப்பது ஸ்டன்ட் காட்சி பார்ப்பதை விட இன்ட்ரஸ்டிங்காக படமாக்கப்பட்டிருக்கிறது.
இயக்குனர் சக்திவேல் செல்வகுமாருக்கு இப்படி ஒரு கதையை படமாக்க வேண்டும் என்று எப்படி தோன்றியதோ தெரியவில்லை அவரது தைரியத்தை பாராட்டலாம்.
சில ரகசியங்கள் மறைக்கப்படுவது தான் நாம் நேசிப்பவர்களுக்கு நிம்மதி தரும் என்ற ஒரு ரகசியத்தை முள்ளின் மேல் விழுந்த சேலையாக விளக்கி இருக்கிறார் இயக்குனர்.
வசந்த் இசை, பிரசாத் ஒலிப்பதிவு கை கொடுக்கிறது.
ரிங் ரிங் – செல்போன் ரகசியம் உடைந்தால் வாழ்க்கைக்கு சங்குதான்.