படம்: ராஜவம்சம்
நடிப்பு: சசிகுமார், நிக்கி கல்ராணி, ராதாரவி, தம்பி ரமையா, விஜயகுமார், சதிஷ், மனோபாலா, சிங்கம் புலி, யோகி பாபு, ஆடம்ஸ், சரவணா சக்தி, சிலம்பம் சேதுபதி, ரமணி, ராஜ்கபூர், தாஸ், நமோ நாரயணன், சுந்தர், சாம்ஸ், ரேகா, சுமித்ரா, நிரோஷா, சந்தான லட்சுமி, சசிகலா, யமுனா, மணி ஷர்மா, மணிமேகலைம, லாவண்யா, ரஞ்சனா, ரஞ்சிதா, ரம்யா,
தயாரிப்பு: டிடிராஜா, டி.ஆர்.சஞ்சய் குமார்
இசை: சாம் சி.எஸ்.
ஒளிப்பதிவு: சித்தார்த்
இயக்கம்:: கே.வி.கதிர்வேலு
பி.ஆர்.ஓ : ரியாஸ் அஹமத்
ஐடி கம்பெனியில் பணியாற்றும் சசிகுமார் கூட்டு குடும்பத்தை சேர்ந்தவர். தாய், தந்தை, அத்தை மாமா, அண்ணன், அண்ணி, தங்கைகள், அண்ணன் குழந்தைகள் என மொத்தம் 40 க்கும்மேற்பட்டவர்கள் ஒரே குடும்பமாக வசிக்கின்றனர். சுற்று சூழலை பாதுகாக்க நவீன சாதனங்களை கொண்டு ஒரு திட்டம் வகுத்து தருபவருக்கு ரூ 5000 கோடி தருவதாக பெரிய கோடீஸ்வரர் ஒருவர் அறிவிக்கிறார். அந்த சந்தர்ப்பத்தை அடைய ஜெய பிரகாஷ் உள்ளிட்ட 4 பெரிய கார்ப்பரேட் முதலாளிகள் எண்ணுகின்றனர். 4 பேரும் சேர்ந்து திட்டத்தை நிறைவேற்றலாம் என்று ஒருவர் யோசனை தெரிவிக்க அதற்கு ஜெயப்பிரகாஷ் ஒப்புக்கொள்ள மறுக்கிறார். தனது நிறுவனத்தில் பணியாற்றும் சசிகுமார் தலைமையிலான குழுவினரை கொண்டு 5000 கோடி திட்டத்துக்கான புராஜக்ட்டை தயார் செய்யச் சொல்கிறார். அதை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்கும் சசிகுமாருக்கு குடும்பத்தினர் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கின்றனர். பல பெண்களை பார்த்தும் அமையாத நிலையில் தனது அலுவலகத்தில் பணியாற்றும் நிக்கி கல்ராணியை தனது காதலியாக நடிக்க கேட்கிறார் சசிகுமார். அவரும் பணம் தந்தால் நடிப்பதாக கூறி சம்மதிக்கிறார். இருவரும் காதல் ஜோடிகளாக நடிக்கத் தொடங்குகின்றனர். அதை குடும்பத்தினரும் நம்புகிறார்கள். அவர்கள் பத்திரிக்கை அச்சடித்து திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார்கள். ஒருவழியாக திருமணம் நடக்கிறது. இந்தநேரத்தில் நிக்கி கல்ராணியை ஒரு கும்பல் கடத்திச் செல்கிறது. அவரை கண்டுபிடிக்கச் செல்கிறார் சசிகுமார். அப்போது 5 ஆயிரம் கோடி திட்டத்தை சிலர் திருட முயல்வதை சசிகுமார் அறிகிறார். அந்த திட்டத்தையும், நிக்கியையும் எப்படி சசிகுமார் காப்பாற்றுகிறார் என்பதை குடும்ப சென்டிமென்ட்டுடன் கிளைமாக்ஸ் விளக்குகிறது.
பார்க்க ஊர்க்காரர்போல் இருக்கும் சசிகுமார் ஐ டி கம்பெனியில் பணியாற்றுகிறார் என்றால் அது பொருந்துமா என்று சிலர் கேள்வி எழுப்புவதற்கு முன்பே அதே கேள்வியை படத்தில் கேட்க வைத்து அதற்கு பதிலும் தந்திருக்கிறார் இயக்குனர்.
சசிகுமார் ஐ டி ஊழியராகவும், குடும்பத்தினரின் செல்லப்பிள்ளையாகவும் கச்சிதமாகவே பொருந்தி இருக்கிறார். 5000 கோடி திட்டம்தான் படத்தின் தொடக்கமாக இருக்கிறது. ஆனால் படம் முழுவதும் கூட்டு குடும்பத்தின் பெருமையை பேசும் காட்சிகளாகவே அமைக்கப்பட்டிருக்கிறது. யார் யார் எந்த உறவு என்று ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு நட்சத்திர பட்டாளம் திரை முழுக்க காட்சிக்கு காட்சி விரிந்திருக்கிறது.
சசிகுமார் உறவுமுறை சொல்லி அழைப்பதும் உறவுகளின் பெருமையை எடுத்துச் சொல்வதும் அழகு. பெண் பார்க்கச் செல்லும் இடங்களில் தம்பி ராமையா, சிங்கம் புலி, சாம்ஸ் போன்றவர்கள் செய்யும் அலப்பறை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. வீட்டுக்குள் வரும் சசிகுமாரின் உறவினர்களுக்கு மரியாதை கொடுக்க எழுந்து நின்று வணக்கம் சொல்லியே ஒரு கிழவி செத்துவிழுவது மரண காமெடி.
இதற்கிடையில் வில்லனப்போல் பாவ்லா காட்டும் ராதாரவியும் தன் பங்கிற்கு காமெடி செய்திருக்கிறார். யோகி பாபு மாட்டு பண்ணையை பார்த்துக் கொள்பவராக வந்து தனி காமெடி டிராக் செய்திருக்கிறார். இதற்கிடையில் சுமித்ரா, விஜயகுமார் குடும்ப பாசத்தை தங்கள் பாணியில் உணர்த்துகின்றனர்.
இவ்வலவு கூட்டத்தையும் மீறி ஹீரோ சசிகுமார், நிக்கி கல்ராணி இருவரும் மனதில் நிற்பதற்கு காரணம் காட்சிகள் எல்லாமே இவர்களை சுற்றியே பின்னப்பட்டிருக்கிறது. குடும்ப சென்டிமென்ட் காட்டுவதுடன் ஆக்ஷன் காட்சிகளிலும் நடித்து தன்னை நிலைநிறுத்துகிறார் சசிகுமார். நிக்கி கல்ராணி சஸ்பென்ஸ் கேரக்டராக வருகிறார். அவரது பிளாஷ்பேக் கதையை நியாபப்படுத்துகிறது.
பணத்துக்காகத்தான் இவ்வளவு நாள் நிக்கி நாடகமாடியதாக சசிகுமார் குற்றம் சொல்லும்போது, ’நிறுத்து நான் யார் தெரியுமா?’ என கேட்டு தன்னைப்பற்றிய சஸ்பென்சை உடைக்கிறார் நிக்கி.
குடும்ப கதைக்கு ஏற்ப நிறுத்தாமல் இசையை பரப்பிய வண்ணமிருக்கிறார். சாம் சி.எஸ்.
என்ன தேவையோ அதைவிட கூடுதலாகவே நட்சத்திர கூட்டத்தை பிரேமிற்குள் அடக்கி எல்லோரையும் திருப்தி அடையச் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சித்தார்த்.
ராஜவம்சம் – கூட்டு குடும்பத்தின் அருமையை சொல்லும் படம்.