படம்: ரூ. 2000
நடிப்பு: பாரதி கிருஷ்ணகுமார், கராத்தே வெங்கடேஷ்,அய்யநாதன், வர்ஷிகா, தோழர்ஓவியா, தோழர் தியாகு
தயாரிப்பு:கோ.பச்சியப்பன்
இசை:இனியவன்
ஒளிப்பதிவு: பிரிமுஸ் தாஸ்
இயக்கம்: ருத்ரன்
பி ஆர் ஓ: பெரு துளசி பழனிவேல்
பெரிய நடிகர்கள் படங்கள் பெரிதான கதை அம்சம் இல்லாவிட்டாலும் பேசும்பொருளாக அமைந்துவிடுகிறது. சிறிய படங்கள் கதை அம்சம் ஸ்டாராங்காக இருந்து நடிகர்கள் பிரபலமாக இல்லாவிட்டால் அது கிணற்றில் விழுந்த கல்லாக சலனமில்லாமல் இருந்து விடுகிறது.இதில் 2வது வகை படம் தான் ரூபாய் 2000.
பணமதிப்பிழப்பு நடந்தபோது மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் நீங்கிய பாடில்லை. இந்நிலையில் புதிதாக அறிமுகப் படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டால் பாதிக்கப்படும் ஒரு விவசாயின் கதையாக 2000 ரூபாய் படக் கதை உருவாகி இருக்கிறது.
ஏழை விவசாயி ஒருவர் தன் கணக்கில் இருக்கும் 2000 ரூபாய் எடுத்தால்தான் கர்ப்பிணி மனைவியின் பிரசவத்துக்கு செலவழிக்க முடியும் என்ற நிலையில் பணத்தை எடுக்கிறார். ஆனால் வருவது 2000 ரூபாய் நோட்டாக இருக்கிறது. அந்த பணத்தை மருந்து கடையில் கொடுத்து மருந்து கேட்கும்போது அந்த பணம் செல்லாது என்று கூறுகிறார்கள். பணத்தாளின் மீது பால்பாயிண்ட் பேனா கொண்டு எழுதி இருப்பதுதான் பணம் செல்லாததற்கு காரணம் என்கின்றனர். அந்த பணத்தை மீண்டும் வங்கியில் கொடுத்து மாற்ற முயலும்போது அங்கும் மாற்றுப்பணம் தர மறுக்கிறார்கள். பிரசவ செலவுக்கு பணம் இல்லாததால் குழந்தை இறந்துவிடுகிறது. இதை யறிந்த வழக்கறிஞர் ஒருவர் விவசாயிக்கு நேர்ந்த இந்த கொடுமையை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்கிறார்.அதில் விவசாயிக்கு நியாயம் கிடைக்கிறதா என்பதற்கு படம் பதில் சொல்கிறது.
சமீபகாலமாக வந்த ஜெய்பீம், ருத்ர தாண்டவம் போன்ற படங்கள் கோர்ட்டு பின்னணியில் நடக்கும் கதைகளாக வந்து பேசப்பட்டது. அந்த பாணியில் இப்படமும் கோர்ட்டு பின்னணியில் நடக்கும் கதையாக பெரும்பகுதி காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த காட்சிகள் மக்களின் அவசியத் தேவையான பணத்தைபற்றியும் அவற்றின் மூலம் மக்களால் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்பதை விரிவாக பேசுகிறது.
ஏழை விவசாயி நடித்திருக்கும் அய்ய நாதன் மனைவியின் பிரசவத்துக்காக வங்கியிலிருந்து எடுத்த 2000 ரூபாய் பணம் செல்லாது என்பதால் மருந்து கூட வாங்க முடியாமல் திணறுவது பலரின் அனுபவ பூர்வ உண்மை.
எல்லாவற்றையும் ஒரு கை பார்க்கிறேன் பார் என்று கருப்பு அங்கி மாட்டிக் கொண்டு கோர்ட்டில் இந்த பிரச்னையை கொண்டு சென்று வக்கீல் பாரதி கிருஷ்ணகுமார் வாதாடும் ஒவ்வொரு பாயிண்ட்டும் சட்ட நுணுக்கத்துடன் அடித்து பேசுகிறது. அரசு தரப்பு வக்கீலாக ஷர்விதா நடித்துள்ளார்.
படம் நெடுக கோர்ட் காட்சிகளாக இருந்தாலும் இதுபோன்று பல படங்கள் வர வேண்டும் அப்போதுதான் மக்களுக்கு பணம் பற்றியும், சட்டத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் பற்றியும் தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.
பணம் அச்சிடுவதில் ரிசர்வ் வங்கியின் பங்கு என்ன? அது தனி அமைப்பாக இருந் தாலும் அதில் மத்திய அரசு எப்படி அதிகாரம் செலுத்துகிறது என்பதை பட்டவர்த்தனமாக காட்டி இருக்கி றார்கள்.
இதேகதையில் உயர்ஜாதி வகுப்பு பெண்ணை வக்கீல் ருத்ரன் திருமணம் செய்துகொள்ள அவரை ஆணவ கொலை செய்ய ஒரு கூட்டம் வலம் வருகிறது அதை மையமாக வைத்து மற்றொரு வழக்கும் இதே படத்தில் இடம்பெறுகிறது. அதுவும் பலரது கவனத்தை ஈர்க்கிறது.
சமீபகாலமாக படங்களை வம்பிழுக்கும் கும்பலிடம் இந்த படம் சிக்காமலிருப்பது தான் ஆச்சர்யம். இதிலும் குறை கண்டு பிடித்து போராடத் தொடங்கினால் பப்ளிசிட்டி கிடைத்து படம் நன்றாகவே ஓடும்.
இப்படத்தின் இசையை இனியவன் அமைத்திருக்கிறார். ஒளிப்பதிவை பிரிமுஸ் தாஸ் அமைத்திருக்கிறார். கோர்ட்டு காட்சிகளே அதிகம் இடம் பெறுவதால் கேமராமேனுக்கு அதிக வேலை இல்லை.
இயக்குனர் ருத்ரன் சமூதாய கருத்துள்ள ஒரு கருவை கச்சிதமாக பிடித்திருக்கிறார். காட்சிகளையும் துணிச்சலாக படமாக்கி பல உண்மைகளை உடைத்து காட்டி இருக்கிறார்.
ரூபாய் 2000 – பார்க்க வேண்டிய படம்.