படம்: புஷ்பா 2 தி ரூல்
நடிப்பு: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, ஸ்ரீ லீலா, பகத் பாசில், ராவ் ரமேஷ், சுனில், அனுசுயா பரத்வாஜ்
தயாரிப்பு: மைத்திரி மூவி மேக்கர்ஸ்
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
ஒளிப்பதிவு: மீரோஸ்லா குபா, புரோசக்
இயக்கம்: சுகுமார்
பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா
புஷ்பா தி ரைஸ் என்ற முதல் பாகத்தை தொடர்ந்து புஷ்பா தி ரூல் என்ற பெயரில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி இருக்கிறது. கதை என்னவென்று பார்த்தால் முதல் பாகத்தில் வந்த கதையின் எக்ஸ்டன்ஷன்தான் இரண்டாம் பாகம்.
செம்மரங்களை வெட்டி வெளி மாநிலங்களுக்கு கடத்தி வந்த புஷ்பாவுக்கு (அல்லு அர்ஜுன்) இரண்டாம் பாகத்தில் இன்டர்நேஷனல் அளவில் வியாபாரங்கள் கை கொடுக்கிறது. ஜப்பானுக்கு 2000 டன் செம்மர கட்டைகளை அனுப்புவதாக ஒப்புக்கொள்ளும் புஷ்பா அந்தக் கட்டைகளை எப்படி இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்தி கொண்டு போய் சேர்க்கிறார் என்ற கதை தான் படத்தின் முக்கிய கரு. இதற்கிடையில் குடும்ப செண்டிமெண்ட், ஆக்சன், அம்மன் சென்டிமென்ட், அரசியல் தலையீடு என்று பல கிளைக் கதைகள் ஒன்று சேர்ந்து புஷ்பா 2 படத்தை வேகமாக்கியிருக்கிறது.
புஷ்பா என்கிற புஷ்பராஜ் கதாபாத்திரத்தில் முதல் பாகத்திலேயே கலக்கிய அல்லு அர்ஜுன் இரண்டாம் பாகத்தில் அதைவிட அதிகமாக கலக்கினால்தான் எடுபடும் என்று டிஸ்கஷனில் பேசி இருப்பார்கள் போலிருக்கிறது முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகளுக்கு தன்னை அல்லு அர்ஜுன் அர்ப்பணித்து விட்டார். படத்தில் எந்த காட்சி மனதில் நிற்கிறதோ இல்லையோ அவரது சண்டை காட்சிகள்தான் கண்முன் வந்து இருக்கிறது.
குறிப்பாக கிளைமாக்சில் இரண்டு கைகளையும், இரண்டு கால்களையும் எதிரிகள் கட்டிப்போட்டுவிட கை கால் கட்டிய நிலையில் அல்லு அர்ஜுன் மோதியிருக்கும் காட்சிகள் கிராபிக்ஸில் எடுத்து விட்டார்களோ என்று எண்ணக்கூடிய அளவுக்கு அதிரிபுதிரியாக இருக்கிறது. ஆக்ரோஷமாக அல்லு மோதி பற்களால் கடித்து வில்லன் கூட்டத்தை ரத்தம் பீறிட கொல்வதெல்லாம் திகில் கிளப்புகிறது.
மனைவி ராஷ்மிகாவிடம் சமையலறையில் அல்லு அர்ஜுன் கொஞ்சுவது சிலுமிச சேட்டை செய்வது இளவட்டங்களுக்கு வேட்டை.
ஸ்ரீ லீலாவுடன் அல்லு அர்ஜுன் இஸ்க்கு இஸ்க்கு பாடலுக்கு போட்டிருக்கும் ஆட்டம் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கிறது.
பிரதான வில்லனாக பஹத் பாசில் நடித்திருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த வேட்டையன் படத்தில் பஹத் பாசில் நடிப்பை எதிர்பார்த்து ஏமாந்த ரசிகர்களுக்கு இந்த படத்தில் நடிப்பு விருந்து போட்டிருக்கிறார் பஹத்.
அல்லு அர்ஜுன் படங்கள் என்றாலே ஸ்பெஷல் கேர் எடுத்து தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பது வழக்கம். இந்தப் படத்திலும அதைத்தான் செய்திருக்கிறார். ஆனால் புஷ்பா முதல் பாகத்தில் எல்லா பாடல்களும் ஹிட்டானது போல் இந்தப் படத்தில் பாடல்களை பார்க்கும்போது ஓகே என்று தோன்றுகிறது தியேட்டரை விட்டு வெளிய வந்தவுடன் மறந்து விடுகிறது.
இயக்குனர் சுகுமார் முதல் பாக கதையையே நீட்டி முழக்கி இரண்டாம் பாகத்திலும் எடுத்து வைத்திருக்கிறார். இதில் மூன்றாம் பாகம் வரும் என்று அறிவிக்கப்படுகிறது அப்படி வந்தால் அந்த கதை முதல் இரண்டாம் பாகத்திலிருந்து முற்றிலும் வேறு கோணத்தில் இருந்தால்தான் எடுபடும். இரண்டாம் பாகத்தை பொறுத்தவரை ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு ஈடு செய்திருக்கிறார். ஆனால் படத்தில் கற்றுக்கொள்வதற்கு ஒன்றுமில்லை வேண்டுமானால் கடத்தல் செய்வது எப்படி என்று கற்றுக் கொள்ளலாம்.
காடானாலும் நாடானாலும் தயாரிப்பாளர் பிரமாண்டத்துக்கு குறை ஒன்றும் வைக்கவில்லை
புஷ்பா 2 தி ரூல் – ஆக்சன் அமர்க்களம்.