ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து தமிழ் சினிமாவில் சாதனை படைத்தவர் நடிகை மனோரமா. கின்னஸ் புத்தகத்திலும் இவர் பெயர் இடம் பெற்றது. எம்ஜிஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார், விஜய், அஜித், சிம்பு, தனுஷ் என ஐந்து தலைமுறைகளுக்கு மேலாக தமிழ் திரையில் நடித்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு
கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம், மனோரமா காலமானார். அவரது ஒரே மகன் பூபதி (70). இவர் கடந்த சில மாதங்களாகவே மூச்சுத் திணறல் மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் பூபதி சென்னையில் காலமானார். தனது தாயார் மனோரமா பயன்படுத்திய கட்டிலிலேயே இன்று காலை அவர் உயிர் பிரிந்தது.
விசு இயக்கிய ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படத்தில் பூபதி நடிகராக அறிமுகமானார். மகனுக்காக தூரத்து பச்சை என்ற படத்தையும் மனோரமா தயாரித்தார். சீரியல்கள் சிலவற்றிலும் பூபதி நடித்தார்.


தி. நகர் நீலகண்ட மேத்தா தெரு, மனோரமா இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பூபதி உடலுக்கு தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பூச்சி எஸ்.முருகன், கருணாஸ் மற்றும் நடிகர் சங்க மேலாளர் தாமராஜ் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பூபதிக்கு ராஜராஜன் என்ற மகன், அபிராமி, மீனாட்சி என்ற மகள் உள்ளனர். பூபதி இறுதி சடங்கு நாளை நடக்கிறது.
