படம்: பெருசு
நடிப்பு: வைபவ், சுனில், தனலட்சுமி, சாந்தினி, நிஹாரிகா, கஜராஜ், முனிஷ்காந்த், கருணாகரன், ரெடின் கிங்ஸ் லி, பால சரவணன், சுவாமிநாதன், வி டி வி கணேஷ், அலெக்சிஸ், சுபத்ரா, தீபா,
தயாரிப்பு: கார்த்திகேயன் சந்தானம்
இசை: அருண் ராஜ்
ஒளிப்பதிவு: சத்யா திலகம்
இயக்குனர்: இளங்கோ ராம்
பி ஆர் ஓ: சுரேஷ் சந்திரா, அப்துல் ஏ . நாசர்
துரைக்கண்ணு (வைபவ்), சாமிக்கண்ணு (சுனில்) அண்ணன், தம்பிகள். திடீரென்று இவர்கள் தந்தை இறந்துவிடுகிறார். அவர் இறந்த ஷாக்கைவிட இன்னொரு விஷயம் அண்ணன், தம்பி உள்ளிட்ட குடும்பத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. இறந்த தந்தையின் ஆண்குறி இயல்பைவிட பெரிதாகி நிற்கிறது. இதை ஊர்மக்கள் பார்த்தால் குடும்ப மானம் கப்பல் ஏறிவிடும் என்பதால் ஆண்குறியை இயல்புநிலைக்கு சிறியதாக்க குடும்பத்தினர் முயல்கின்றனர். இதன் முடிவு என்னவாகிறது என்பதை அடல்ட் காமெடியாக விளக்குகிறது கிளைமாக்ஸ்.
எப்படியோ ஒரு வழியாக இதுதான் கதை என்பதை சொல்லியாகி விட்டது. இந்த கதையை ஹீரோயின் உள்ளிட்ட நடிகர், நடிகைகளிடம் எப்படி சொல்லி இயக்குனர் கால்ஷீட் வாங்கினார் என்பது இன்னொரு அடல்ட் கண்டன்ட்.. அது இப்ப வேண்டாம்.
இயக்குனர் எது பெருசு என்று சொல்லி எல்லோரையும் உற்று பார்க்க வைத்து நடிக்க வைத்து கோணம் வைத்து படமாக்கினார் என்று ஷூட்டிங் ஸ்பாட்டை நினைத்தாலே குபீர் சிரிப்பு வருகிறது.
வைபவ் மட்டும்தான் குடிபோதையில் எதையும் பெருசாக எடுத்துக் கொள்ளாமல் இயல்பாக நடித்திருக்கிறார். மற்றபடி சுனில் முதல் ரெடின் வரை பெருசுவின் பெருசை பார்த்து கண்ணுமுழி கீழே விழுந்துவிடும் அளவுக்கு கண்களை விரித்து பார்த்து அதிர்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள் ஒவ்வொருவர் ஷாக் ஆகும்போதும் அரங்கில் சிரிப்பை அடக்க முடியவில்லை.
டாக்டராக வரும் வி டி வி கணேஷ் “கட்” பண்ணி எடுக்கும் ஐடியா சொல்லிவிட்டு.பின்னர் தலைதெறிக்க ஓட்டுவது, முனிஸ்காந்த் ஏதோ ரகசியம் இருக்குன்னு சொல்லி ஒவ்வொரு முறையும் வாங்கிக் கட்டிக் கொள்வது என காமெடிக்கு பஞ்சமில்லை.
கார்த்திகேயன் சந்தானம் தயாரித்திருக்கிறார்.
அருண் ராஜ் அளவோடு வாசித்திருக்கிறார்.
சத்யா திலகம் கேமிராவை பல கோணங்களில் விரசம் இல்லாமல் கையாண்டிருக்கிறார்.
ஒரே விஷயத்தை ஊதி பெரிதாக்கி இயக்கியிருக்கிறார் இயக்குனர் இளங்கோ ராம்.
பெருசு – நண்பர்களோடு சென்றால் ரசிக்கலாம் .. குடும்பத்துடன் சென்றால் நெளியலாம்.

