அதிகார பரவலாக்கல் பற்றி தமிழக அரசு தலைமை செயலாளரிடம் மநீம தலைவர் கமல் மனு அளித்தார். அதன் விவரம் வருமாறு:
அனுப்புனர்
கமல் ஹாசன்
தலைவர் – மக்கள் நீதி மய்யம்
புதிய எண் 4 / பழைய எண் 172,
எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்பேட்டை,
சென்னை – 600018
பெறுநர்
தலைமைச் செயலாளர், தமிழ்நாடு அரசு,
தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை,
சென்னை – 600009
ஐயா,
பொருள்: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பங்கேற்புடன் கூடிய மக்களாட்சி மலர – ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைப்புகளை – நடைமுறைப்படுத்த கோரும் மனு.
‘‘அதிகாரப்பரவலாக்கல்” மூலமே சிறந்த அரசு நிர்வாகத்தைத் தரமுடியும் என்பதில் மக்கள் நீதி மய்யம் அசையா நம்பிக்கை வைத்திருக்கிறது. ஆகவே தான், “மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்ற அணுகுமுறையோடு “உள்ளாட்சியில் தன்னாட்சி” என்ற கருத்தாக்கத்தையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். “கிராம சுயாட்சி”க்கு வழிவகுக்கும் ”கிராமசபைகள்” மேம்பட களத்தில் பணியாற்றும்போது பங்கேற்பு ஜனநாயகத்தின் மகத்துவத்தை கண்கூடாக உணரமுடிகிறது. நகர்ப்புறங்களிலும் “கிராம சபைகள்” போன்ற மக்கள் பங்கேற்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டு, அவை விரைவில் செயல்பாட்டுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த மனுவைத் தங்களிடம் சமர்ப்பிக்கிறேன்.
நகர்ப்புறங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள், குடியிருப்போர் நலச் சங்கம் (Resident welfare association) அமைத்து தங்களது தேவைகளைத் தீர்க்கும் ஒரு பங்கேற்பு ஜனநாயகத்தை உருவாக்கி வைத்திருக்கின்றனர். இதன் மூலமாக மின் தூக்கி, குடிநீர் வினியோகம், குப்பை அள்ளுதல், கழிவுநீர் சுத்திகரிப்பு, தெரு விளக்கு, சிறுவர் பூங்கா, குடியிருப்பின் பாதுகாப்பு ஆகியவற்றைத் திறம்பட நிர்வகிக்கிறார்கள். இதில் ஏற்படும் குறைகளைத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உடனுக்குடன் விவாதித்து சரி செய்கிறார்கள். தேவைக்கேற்ப தீர்மானங்கள் இயற்றி செயல்படுத்துகிறார்கள். செலவினங்கள், வருவாய் உள்ளிட்ட கணக்கு வழக்குகள் சங்க உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. கணக்கும் ஆடிட்டர்கள் உதவியுடன் தணிக்கை செய்யப்படுகிறது. தான் செலுத்தும் மாதாந்திர பராமரிப்புத் தொகை எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதை அறியும் உரிமை நலச்சங்க உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இது ஒரு தனியார் அமைப்பில் உள்ள பங்கேற்பு ஜனநாயகம். மக்களின் வரிப்பணத்தை நிர்வகிக்கும் உள்ளாட்சி நிர்வாகத்தில் இதைவிடச் சிறந்த மக்கள் பங்கேற்பு ஜனநாயகம் மலர வேண்டும் என்பது மக்கள் நீதி மய்யத்தின் அடிப்படைக் கொள்கைகளுள் ஒன்று.
‘‘கிராம சபைகள்” குறைந்தபட்சம் ஆண்டுக்கு நான்கு முறை கூடுவதால், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்தாலோசிக்கும் வாய்ப்பு உருவாகிறது. மேலும், இதன் மூலம் கிராமப் பஞ்சாயத்தின் வரவு செலவுகள், உள்ளூரில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் ஆகியவை பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரியவருகிறது. கிராமசபைகளைப் போலவே நகரங்களிலும் பங்கேற்பு ஜனநாயகத்தை உருவாக்குவதற்காக, தமிழக அரசு ‘தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் (திருத்தம்) சட்டம் 2010 (எண் 35)’ இயற்றியது. ( 02-12-2010 தேதியிட்ட அரசிதழ் நகல், இணைப்பில்) இந்தச் சட்டம் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில், மக்கள் பங்கேற்புடைய ‘‘ஏரியா சபை” மற்றும் ‘‘வார்டு கமிட்டி” அமைப்புகளை உருவாக்க வழிவகை செய்கிறது.
இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டு 11 ஆண்டுகளாகியும் இதனை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கான செயல்முறை விதிகள்(Rules) உருவாக்கப்படாததால், இன்றுவரை அமல்படுத்தப்படாமல் இருக்கிறது. தமிழகத்தில் சுமார் 50% மக்கள் நகர உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் வாழ்கின்றனர். இவர்களுக்கு பங்கேற்பு ஜனநாயம் மறுக்கப்பட்டு வருகிறது.
மேலும், மேற்குறிப்பிட்ட சட்டத் திருத்தமானது, மாநகராட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளுக்கு மட்டுமே, ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டி உருவாக்க வழிவகை செய்கிறது. இதனை விரிவுபடுத்தி பேரூராட்சிப் பகுதிகளுக்கும் இதனைச் செயல்படுத்த தமிழக அரசு உரிய சட்ட திருத்தம் கொண்டுவரவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
நமது பக்கத்து மாநிலமான கேரளா மற்றும் கர்நாடகாவில் ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டிகள் செயல்பாட்டில் உள்ளன. ஹரியானாவின் ஃபரிதாபாத், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் போன்ற நகரங்களிலும் இதனைச் செயல்படுத்த முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கர்நாடகாவின் பெங்களூரு மாநகராட்சியில், ஒவ்வொரு வார்டு கமிட்டிக்கும் 50 லட்சம் தனி பட்ஜெட் என மொத்தம் 198 வார்டுகளுக்கும் சுமார் 120 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டை எவ்வாறு செலவிட வேண்டும் என்பதை அந்தந்த வார்டு கமிட்டியே முடிவு செய்துகொள்ளும். கர்நாடகாவின், மங்களூரு நகரத்திலும் இந்த அமைப்புகள் மிகச்சமீபத்தில் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. தமிழகத்திலும் இதுபோல நிதி ஒதுக்கீடு மற்றும் அதிகாரங்கள் ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டிகளுக்கு வழங்கப்படவேண்டும். இதன்மூலம் அந்தந்தப்
பகுதி மக்கள் குடிநீர்,பாதாள சாக்கடை,சாலை, குப்பை மேலாண்மை, போக்குவரத்து சீரமைப்பு, நீர்நிலை பாதுகாப்பு போன்ற முக்கிய அடிப்படைத் தேவைகளில் எதெற்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்த வேண்டும் என்பதை முடிவுசெய்வதற்கு வாய்ப்பு கிடைக்கும். மக்களின் தேவையின் அடிப்படையில், மக்கள் பங்கேற்போடு பணிகள் நடைபெறும்போது செயல்படுத்தப்படும் திட்டங்களின் தரம் சிறப்பாக இருக்கும்.
காமராஜர்,பெரியார்,ராஜாஜி உள்ளிட்ட தமிழகத்தின் பல தலைவர்கள் நகர உள்ளாட்சி அமைப்புகளில் இருந்தே தங்களது பயணத்தைத் துவங்கினர். அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்க நகர உள்ளாட்சிகளில் பங்கேற்பு ஜனநாயகத்தை உருவாக்குவது அவசியம்.
முறையாக செயல்படுத்தப்பட்டால், நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகத்தில் மாபெரும் புரட்சியை உருவாக்கும் வல்லமை கொண்டவை ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைப்புகள். இதனை சிறப்பாகச் செயல்பாட்டுக்குக் கொண்டுவரும் பொருட்டு பொதுமக்கள், சமூகநல அமைப்புகள், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் துறைசார் வல்லுனர்களிடம் இதன் செயலாக்கம் குறித்து விரிவான கருத்துக்களைப் பெறுவது குறித்தும்(Public Consultation) தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.
கடைக்கோடி குடிமகனுக்கும் பங்கேற்பு ஜனநாயகத்தை உறுதி செய்தால் மட்டுமே காந்தி, அம்பேத்கர் விரும்பிய உண்மையான மக்களாட்சியும், அண்ணா விரும்பிய உண்மையான அதிகாரப் பரவலாக்கமும் மலரும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்து உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி ஏற்கவுள்ள தற்போதைய சூழலில், ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டி போன்றவற்றிற்கான செயல்முறை விதிகள் விரைவில் வெளியிடப்பட்டு நடை முறைப்படுத்தப்படும் என்று நம்புகிறோம்.
தங்கள்,
கமல் ஹாசன்,
தலைவர் – மக்கள் நீதி மய்யம்.
இணைப்பு:
தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் (திருத்தம்) சட்டம் 2010 (எண் 35) – அரசிதழ் நகல் (02-12-2010)