படம்: மார்கழி திங்கள்
நடிப்பு: பாரதிராஜா, ஷியாம் செல்வன், ரக்ஷனா, நக்ஷா சரண், சுசீந்திரன், அப்புக்குட்டி
தயாரிப்பு: சுசீந்திரன்
இசை: இளையராஜா
ஒளிப்பதிவு: வாஞ்சி முருகேசன்
இயக்கம்: மனோஜ் பாரதிராஜா
பி ஆர் ஒ: நிகில் முருகன்
ராமையா (பாரதிராஜா) பெற்றோரை இழந்த தன் பேத்தி கவிதா (ரக்ஷனா) மீது அன்பும், பாசமும் காட்டி வளர்க்கிறார். பள்ளியில் படிக்கும் அவர் படிப்பில்.படுசுட்டியாக இருக் கிறாள். வகுப்பில் அவள்தான் முதல்மார்க் வாங்குவாள். இதெல்லாம் அந்த வகுப்பில் வினோத் ( ஷியாம் செல்வன்) சேர்வதற்கு முன்பு. வினோத் எப்போது வகுப்பில் சேர்ந்தானோ அன்று முதல் அவன்தான் முதல் மார்க் வாங்குவான். அதைக்கண்டு கவிதா அவன் மீது கோபம் கொள்கிறாள். அனாவசியமாக அவள் தன் மீது கோபப்படுவதை கண்ட வினோத் அவள் மீதுள்ள காதலால் பொதுத்தேர்வில் விட்டுக் கொடுக்கிறான். விடை தெரிந்தும் அதை எழுதாமல் விட்டு கவிதாவை விட குறைந்த மதிப் பெண் பெறுகிறான். இந்த விஷயம் தெரிந்து அவன் மீது பரிதாபப்படுகிறாள் கவிதா. அதுவே காதலாக மாறுகிறது. தாத்தாவிடம் தன் காதலை சொல்லி சம்மதம் வாங்குகிறாள். ஆனால் அதற்கு தாய்மாமன் தர்மன் ( சுசீந்திரன்) எதிர்ப்பு தெரிவிக்கிறான். குடும்ப சூழல் காரணமாக படிப்பை பாதியில்.நிறுத்திவிட்டு துபாய் செல்ல முடிவு செய்கிறான் வினோத். போனவன் திருப்பி வரவில்லை என்பதால் அதுபற்றி தோழியிடம் விசாரிக்கிறாள் வினோத் கொல்லப்பட்ட விஷயம் தெரியவர கவிதா பயங்கர முடிவு எடுக்கிறாள். அது என்ன என்பது கிளைமாக்ஸ்.
மதங்களை கடந்தது காதல் என்று அலைகள் ஓய்வதில்லை படத்தில் நெற்றிப் பொட்டில் அடித்து சொன்னவர் பாரதிராஜா. அவரது மகன் இயக்கும்.படத்தில் சமூக நீதியை எதிர்பார்ப்பதில் தப்பில்லை. புலிக்கு பிறந்தது. பூனை அல்ல என்று நிரூபித்தி ருக்கிறார். ஆணவ கொலை பற்றிய படங்கள் நிறைய வந்திருக்கின்றன. இதில் ஆணவ கொலையால் பாதிக்கப்பட்ட பெண்ணே சாதி வெறி பிடித்தவர் களை பழிவாங்குவது துணிச்சல் முடிவு என்றாலும் அந்த துணிச்சல் முடிவு எடுத்த பெண் கடைசியில் தூக்கு போட்டு சாகிறாள் என்ற முடிவு அதுவரை சொன்ன துணிச்சலுக்கு அர்த்தமில்லாமல் போய்விடுகிறது.
புதுமுகங்கள் ஷியாம் செல்வன், ரக்ஷனா வேடத்தை நிறைவு செய்திருக்கின்றனர். அதிலும் ரக்ஷனா ரொம்பவே ஸ்கோர் செய்கிறார். தன் காதலனை கொன்று விட்டார்கள் என்று தெரிந்து சுசீந்திரன் மற்றும் அவரது ஆட்களை கிணற்றில் தள்ளி பாறாங்கல் தூக்கிப்போட்டு சாகடிப்பதும் அதற்கு இசைஞானி அமைத்திருக்கும் பின்னணி இசையும் அரங்கை அமைதிக் கடலாக்குகிறது.
ராமையா என்ற பாத்திரத்தில் தனது 82 வயதிலும் தான் சிறந்த இயக்குனர் மட்டுமல்ல சிறந்த நடிகன் என்பதையும் நிரூபித்தி ருக்கிறார் பாரதிராஜா.
தான் இயக்கிய படங்களில் காதலின் புனிதம் பேசிய பாரதிராஜா ஆணவ கொலைக்கு துணை போகும் ஒரு பாத்திரத்தில் நடித்திருப்பதைத்தான் ஏற்க முடிய வில்லை. இது வெறும் நடிப்பு தானே என்று சொல்லி பாரதிராஜா இந்த பாத்திரத்துக்கு நியாயம் கற்பிக்க முடியாது, கற்பிக்கவும் கூடாது.
தர்மன் என்ற வில்லன் வேடத்தில் சுசீந்திரன் நடித்திருக்கிறார். அவரே படத்தின் கதை திரைக் கதை வசனம் எழுதி தயாரித்தும்.இருக்கிறார்.
மனோஜ் பாரதிராஜா தான் இயக்கிய முதல் படத்தில் தன் எண்ணத்தில் உதித்த கதையை இயக்க முடியவில்லை என்றாலும் தந்தையை போல் சமூக நீதி பேசும் கதைகளை இவரால் இயக்க முடியும் என்ற நம்பிக்கையை தந்திருக்கிறார்.
இசைஞானி இளையராஜா பின்னணி இசை படத்துக்கு பெரிய துணை. ஆனால் கூடுதலாக சில பாடல்களை அவரிடம் இயக்குனர் கேட்டுப் பெற்றிருக்கலாம்.
ராஜாவின் பொறுப்பில் இசையை விட்டுவிட்டாலும் தனக்கு என்ன தேவை என்பதை அவரிடம் சொல்லும் தைரியம் இயக்குனர் மனோஜிக்கு இருந்திருக்க வேண்டும் .
மார்கழி திங்கள் – ஆணவ காதல் கொலை.