படம்: ஜெயில்
நடிப்பு: ஜி.வி.பிரகாஷ்குமார், புதுமுகம் நந்தன் ராம், பசங்க பாண்டி, ராதிகா, அபர்நதி, பி.டி.செல்வகுமார், கானா முத்து,ஜெனிபர்,
தயாரிப்பு: ஸ்ரீதரன் மாரிதாசன்
இசை: ஜி.வி.பிரகாஷ்குமார்
ஒளிப்பதிவு: கணேஷ் சந்திரா
இயக்கம்: வசந்தபாலன்
பி ஆர் ஓ: பி.டி.செல்வகுமார்
நகர் புறத்தில் சேரிப்பகுதியில் உள்ளவர்களை அகற்றி அவர்களை மாற்றுகுடியிருப் பில் அமர்த்துகிறது அரசு. அப்படி உருவாக்கப்பட்ட காவேரி நகர்பகுதியில் வசிப்ப வர்கள் நண்பர்கள் கர்ணன், ராக்கி, கலை. எதிர்கோஷ்டி மாணிக் நண்பர்கள். திருட்டு, கஞ்சா விற்பது இவர்களின் பிழைப்பாக இருக்கிறது. இதில் இருதரப்புக்கும் அடிக்கடி மோதல் நடக்கிறது. ஒரு கட்டத்தில் ராக்கியை மாணிக் கோஷ்டி கொலை செய்கிறது. அதற்கு கர்ணன் பழிவாங்க முடிவு செய்கிறான். இதற்கிடையில் அப்பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டரோ, கர்ணன் மற்றும் அவரது நண்பர் கலை மீது வன்மம் காட்டுகிறார். கொலை வழக்கு ஒன்றில் கலை சிறைக்கு செல்ல அவனை ஜாமீனில் எடுக்க கர்ணன் பணம் திருடுகிறான். கொலை செய்யப்பட்ட ராக்கி பதுக்கி வைத்த ரூ 5 கோடி போதை மருந்தை தன்னிடம் ஒப்படைக்கும்படி போலீஸ் கர்ணனை டார்ச்சர் செய்கிறது. தந்திரமாக போலீஸ் இன்ஸ் பெக்டரை போதை தடுப்பு பிரிவினரிடம் மாட்டிவிடு கிறான். எப்படியோ வெளியில் வரும் இன்ஸ்பெக்டர் கர்ணனை என்ன செய்கிறார் என்பது கிளைமாக்ஸ்.
வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன் போன்ற அருமையான படங்களை இயக்கி அளித்த வசந்த பாலன் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயில் படத்தை இயக்கி இருக்கிறார். கதை சேரிப் பகுதி மக்களை பற்றி பேசுகிறது. ஆனால் அவர்களை குற்றவாளிகாகவே பல பாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.
கர்ணன் கதாபாத் திரத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் வித்தியாசமான கெட்டப் வித்தியாசமான நடிப்பு என அப்பகுதி இளைஞனாகவே மாறியிருக்கிறார். நாசுக்காக டூயட் பாடிவிட்டு செல்லும் கதாபாத்திரமில்லை என்பதை ஒவ்வொரு பிரேமிலும் பிரகாஷ் நிரூபிக்கிறார். அதற்கான உடல் மொழி, கடுமையான உழைப்பை அளித்து ரத்தம், வியர்வை சிந்தி நடித்திருப்பது தெரிகிறது.
ரவுடிகளுடன் ஜிவி மோதும்போது கோலியாத் கதைதான் நினைவுக்கு வருகிறது. ஆஜான பாகு தோற்ற ரவுடிகளுடன் பாய்ந்து, விழுந்து, புரண்டு ஜி வி பிரகாஷ் மோதியிருக்கும் காட்சி எதார்த்தமாக படமாக்கப்பட்டிருப்பதால் எத்தனை இடங்களில் அடிபட்டு வலியால் துடித்திருப்பார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
ஜிவிபிரகாஷின் தாயாக வரும் ராதிகா தனது உன்னத நடிப்பை வழங்கி இருக்கிறார். மகனை திருத்த வேண்டும் என்று அவர் போடும் தற்கொலை நாடகம், வீட்டை விட்டு வெளியேறும் காட்சிகள் காமெடி வகையறாவில் சேர்கிறது. ராக்கியாக நடித்திருக்கும் நந்தன்ராம் புதுமுகம்போல் இல்லாமல் தேர்ந்த நடிகராக நிறைவு செய்கிறார். பசங்க பாண்டியின் முகத்துக்கு ஏற்ப கலை என்ற நல்லபிள்ளை பாத்திரம். அந்த பாத்திரமும் ஆத்திரத்தில் கொலை செய்து விட்டு அழும்போது சோகம் வியாப்பிக்கிறது.
ஹீரோயின் அபர்மதி சேரி பகுதி பெண்ணாகவே மாறி மனதில் இடம் பிடிக்கிறார்.
ரவிமரியா இன்ஸ்பெக்டர் வேடம் ஏற்று வில்லத்தனம் செய்கிறார்.
சமூக அக்கறை கொண்ட கதாபாத்திரத்தில் அவ்வப் போது தோன்றி, ”வேர்ல்ட் கோர்ட்டில் கேஸ் போட்டிருக்கேன் ரீ செட்டில்மெண்ட் இன் இண்டியா” என்று வசனம் பேசி கவனத்தை ஈர்க்கிறார் பி டி;செல்வகுமார். அந்த வழக்கு என்ன ஆனது என்பதையும் கதையில் சேர்த்திருந்தால் இன்னும் சுவராஸ்யம் இருந்திருக்கும்.
ஸ்ரீதர் மரியதாஸ் தயாரித்திருக்கிறார். எழுத்து இயக்கத்தை வசந்தபாலன் கையிலெடுத் திருக்கிறார். சேரி பகுதி மக்களின் வாழ்க்கையை படம்பிடித்திருந்தாலும் ஏதோ ஒன்று மிஸ்ஸிங்.
ஜி வி பிரகாஷ்குமார் இசை பொறுப்பை ஏற்று அதிலும் தன்னை நிரூபித்திருக்கிறார். ”காத்தோடு காத்தானேன்..” பாடல் மெல்லிய தென்றலாக தழுவுகிறது.
ஜெயில் – சமூக அவலம்.