‘தமிழ் ராக்கர்ஸ்’ என்ற தலைப்பில் திரைப்படம் தயாரித்துள்ள தயாரிப்பாளர் கே.பிச்சாண்டியை தலைப்பை மாற்றும்படி மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும், என்று கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் தெரிவித்துள்ளார.
இது குறித்து இன்று காலை பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ஜாக்குவார் தங்கம் கூறியதாவது:
தயாரிப்பாளர் கே.பிச்சாண்டி என்பவர் கில்டில் ‘ தமிழ் ராக்கர்ஸ்’ என்ற தலைப்பை பதிவு செய்தார். நாங்கள், தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய வர்த்தக சபை ஆகிய சங்கங்களை முறையாக விசாரித்து, அவர்களின் ஒப்புதலுக்கு பிறகே தலைப்பை கில்டு (GUILD) சார்பாக பதிவு செய்தோம்.
தற்போது முழு திரைப்படத்தையும் முடித்து விட்டதோடு ‘தமிழ் ராக்கர்ஸ்’ என்ற தலைப்பில், தயாரிப்பாளர் பிச்சாண்டி தணிக்கை சான்றிதழும் பெற்றுவிட்டார்.
இந்த நிலையில், தயாரிப்பாளர் பிச்சாண்டிக்கு மர்ம நபர்கள் சிலர் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். அதேபோல், தயாரிப்பாளர் வாகனத்தில் செல்லும் போதும் சிலர், அவரை தலைப்பை மாற்றும்படி மிரட்டியுள்ளனர். தயாரிப்பாளரின் நண்பர் சரவணனையும் இது தொடர்பாக மிரட்டியுள்ளனர்.
மத்திய அரசு அங்கீகரித்த தணிக்கை சான்றிதழ் பெற்ற ஒரு திரைப்படத்தின் தலைப்பை மாற்றும்படி சொல்ல நீங்கள் யார்? அப்படியே அந்த தலைப்பில் எதாவது பிரச்சனை என்றால், அது குறித்து சங்கத்தில் புகார் அளிக்கலாம். அதை விட்டுவிட்டு தயாரிப்பாளரை தனிப்பட்ட முறையில் மிரட்டுவது சரியல்ல. இனியும் அவர்களின் மிரட்டல் தொடர்ந்தால், காவல்துறையில் சங்கம் சார்பாக புகார் அளிப்போம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், மிரட்டல் விடுப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதோடு, தமிழ் ராக்கர்ஸ் திரைப்படத்தை வெளியிட தயாரிப்பாளருக்கு துணையாக நிற்போம், என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் தெரிவித்துள்ளார்.