படம் : க்
நடிப்பு: யோகேஷ், குருசம்பத்குமார், அனிகா விக்ரமன், ஒய்.ஜி.மகேந்திரன், ஆடுகளம் நரேன்
தயாரிப்பு: தரம்ராஜ்பிலிம்ஸ்
இசை: கவாஸ்கர் அவினாஷ்
ஒளிப்பதிவு: ராதாகிருஷ்ணன்
இயக்கம்: பாபு தமிழ்
பி ஆர் ஒ: சதிஷ் (AIM)
கால்பந்தாட்ட வீரர் வசந்த் விளையாட்டின்போது தடுக்கி விழவதில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்படுகிறது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அந்த அறையில் இருக்கும் ஜன்னல் வழியாக கொலை நிகழ்வு ஒன்றை வசந்த் பார்த்து போலீசில் புகார் செய்கிறார். போலீசார் வந்து ஆய்வு செய்வதில் கொலை நிகழ்வு எதுவும் நடக்கவில்லை என்று சொல்கின்றனர். அதை நம்ப மறுக்கும் வசந்த் போலீசார் சரியான விசாரணை நடத்தவில்லை என்று சோஷியாவில் வீடியோ பதிவிடுகிறார். இதன் பின்னர் வசந்த்தின் போக்கில் மாற்றம் ஏற்படுகிறது. அவருக்கு உதவி செய்ய வரும் கார் டிரைவர் ஏற்கனவே குழப்பத்தில் இருக்கும் வசந்தை பல்வேறு சம்பவங்கள் சொல்லி குழப்புகிறார். கார் டிரைவர் மீது வசந்த்தின் மனைவி கோபப்பட்டு விரட்டி அனுப்புகிறார். வசந்த் ஜன்னல் வழியாக கண்டது கொலைச் சம்பவமா? கொலை செய்யப்பட்டது யார்? என்பதே கிளைமாக்ஸ்.
மேலே கதை சுருக்கத்தில் படத்தின் போக்கு தெளிவாக தெரியும் அளவுக்கு படத்தை பார்க்கும்போது அந்த தெளிவு கிடைப்பது சிரமம்.
சமீபத்தில் வெளிவந்த சில டைம்மிஷன் படங்களில் நடக்கும் சம்பவங்கள் டைம்மிஷின் பாணியில் படமாக்கப்பட்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும் அளவுக்கு டாஇமிஷின் பாணி படம் என்று கூற்ப்படும் “க்” படத்தில் புரிதல் என்பது குழப்பத்துக்கு உள்ளாக்குகிறது.
தாய் கர்ப்பமாக இருக்கும்போது தான் விளையாடும் கால்பந்து தாயின் வயிற்றில் பட்டு அவரது கரு கலைகிறது தாயும் இறக்கிறாள் இதனால் ஏற்படும் பாதிப்புதான் வசந்த் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹீரோ யோகேஷுக்கு நடக்கும் சம்பவங்கள் என்பதும் கிளைமாக்ஸ் நெருக்கத்தில் விளக்கப்படுகிறது.
ஹீரோ யோகேஷ் கட்டுமஸ்த்தான விளையாட்டு வீரராக இருக்கும் அதே நேரத்தில் தொடக்கம் முதல் அவர் முகத்தில் ஒரு முறைப்பு சுபாவம் தென்படுகிறது.
விளையாட்டு மைதானத்துக்குள் தன் கையை பிடித்துக்கொண்டு வந்த சிறுமியின் நெகடிவ் எனர்ஜிதான் தனது வாழ்க்கையில் நடக்கும் சப்பவங்களுக்கு காரணம் என்று எண்ணி அந்த குழந்தையை அழைத்து கண்டிப்பதும் பின்னர் தனது கோபத்துக்காக போலீஸ் அதிகாரி நரேன்,மற்றும் சிறுமி ஆகியோருடம் மன்னிப்பு கேட்பதும் இனிமேல் ஹீரோ வாழ்க்கையில் அமைதி ஏற்படும் என்று எண்ண வைக்கிறது. ஆனால் அடுத்தடுத்து வரும் காட்சிகள் அவரை ஒரு மனநோயாளிபோலவே மாற்றுவது கதையின் போக்கை சிக்கலாக்குகிறது.
டிரைவராக வரும் குருசம்பத்குமார் நல்லவரா? கெட்டவராக என்று யோசிக்க வைக்கிறார். ஹீரோ யோகேஷ் குழப்பத்துக்குள்ளாகும்போதெல்லாம் அவருக்கு தைரியம் சொல்வதும் ஆனால் ஹீரோவின் எல்லா குழப்பத்துக்கும் இவர்தான் என்று தெரியும்போது கதாபாத்திரத்தின் மீது வெறுப்பும் ஏற்படச் செய்கிறார்.
பட கதாநாயகி அமிகா சேலையில் குடும்ப குத்துவிளக்காக மின்னும் நிலையில் மார்டன் உடையில் தனது உடற்கட்டின் வளைவு நெளிவுகளை காட்டி இளவட்டங்களை ஜொல்லு விட வைக்கிறார்.
ஒய்.ஜி.மகேந்திரன் ஒரு சஸ்பென்ஸ் பாத்திரத்தில் வருகிறார். போலீஸ் அதிகாரி நரேன் மிரட்டல் தொணியில் பேசி மிரட்டுகிறார்.
இயக்குனர் பாபு தமிழ் வழக்கமான கதையாக இல்லாமல் வித்தியாசமான படம் தர முயற்சித்திருக்கிறார். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் தெளிவுபடுத்தி இருந்தால் காட்சிகளுக்கான விளக்கங்கள் எளிதாக புரிந்திருக்கும்.
ஒளிப்பதிவாளர் ராதாகிருஷ்ணன் இயக்குனரின் எண்ணத்துக்கேற்ப காட்சிகளை பதிவு செய்திருக்கிறார்.
”க்” – உளவியல் கதையில் இதுவொரு வித்தியாசமான பாணி.