இந்தியாவில் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு, இந்தியத் திரைப்படத் தணிக்கை வாரியம் தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கி வருகிறது. தணிக்கை வாரியத்தின் இறுதி முடிவில், படத்தில் ஏற்க முடியாத அளவிற்கு மாறுதல்களைச் செய்யச் சொன்னாலோ அல்லது தணிக்கை வழங்க மறுத்தலோ படத்தின் தயாரிப்பாளர்கள் திரைப்படச் சான்றிதழ் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்வது வழக்கம்.
கடந்த 1983 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்தத் தீர்ப்பாயம் இனி செயல்படாது என்று மத்திய சட்ட அமைச்சகம் அறிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தீர்ப்பாயங்கள் திருத்த மசோதா, 2021- ன் கீழ், விமான நிலைய மேல்முறையீட்டு தீர்ப்பாயம் , வர்த்தக சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட மேல்முறையீட்டு வாரியம், வருமான வரிச் சட்டம் தொடர்பான முன்கூட்டியே அதிகாரமளிக்கும் தீர்ப்பாயம் மற்றும் திரைப்பட சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ஆகிய நான்கு தீர்ப்பாயங்களும் களைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தணிக்கை வாரியத்தின் முடிவுகளுக்கு எதிராக இனி உயர்நீதிமன்றத்தில் தான் மேல்முறையீடு செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.