தமிழக முதல் அமைச்சராக பதவி வகித்து வந்த ஜெயலலிதா உடல் நல குறைவு ஏற்பட்டு கடந்த 2016ம் ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சுமார் 70 நாட்களுக்கு மேல் அவருக்கு பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டது. வெளிநாட்டு டாக்டரும் வந்து சிகிச்சை அளித்தார். ஆனால் சிகிச்சை பலனில்லாமல் 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி காலமானார்.
பிறகு அவரது உடல் சென்னை ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அதன்பிறகு ராணுவ மரியாதையுடன் சென்னை மெரினா கடற் கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடவளாகத்தில் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டது.
கடந்த 2017-ம் ஆண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் தெரிவித்தார். அந்த நினைவிடம் தர்போது பீனீக்ஸ் பறவை போல் வடிவமைத்து கட்டப்பட்டது.
50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில், ரூ.57.8 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த நினைவிடம் 15 மீட்டர் உயரம், 30.5 மீட்டர் நீளம் கொண்டது. 43 மீட்டர் அகலமும் கொண்டது. ரூ.12 கோடி மதிப்பில் அருங்காட்சியகமும் கட்டப்பட்டு உள்ளது. ஜெயலலிதா நினைவிட பணிகளுடன் எம்.ஜி.ஆர். நினைவிட புனரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அந்த பணிகளும் சமீபத்தில் நிறைவடைந்தன. கட்டுமானப் பணிக்கு கூடுதல் நிதி தேவைப்படும் என்பதை கருத்தில் கொண்டு மொத்தம் ரூ.79.75 கோடிக்கு நிதியை அரசு ஒதுக்கியது. அதன் பிறகு கட்டுமானப் பணிகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரியும் நியமிக்கப்பட்டார்.
சென்னை ஐ.ஐ.டி. நிபுணர்கள் வடிவமைத்து கொடுத்த தொழில்நுட்பங் களுடன் துபாய் நாட்டின் கட்டிடக்கலை நிபுணர்களும் இணைந்து கட்டுமானப் பணிகளை மிக நேர்த்தியாக அமைத்து வந்தனர். அதன் பணி முற்றிலும் நிறைவடைந்தது இன்று (புதன்கிழமை) திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்தது. இன்று காலை 11 மணிக்கு திறப்பு விழா நிகழ்ச்சிகள் தொடங்கியது. இதற்காக நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன் நுழைவிட வாயலில் மேடையும் அமைக்கப்பட்டதது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 10.55 மணியளவில் விழா நடைபெறும் இடத்துக்கு வந்தார். முன்னதாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், வாரிய தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் 10.45 மணியளவில் அங்கு வருகை தந்தனர்
முதலில் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சென்று நினைவிடத்தை திறந்து வைத்தார்முதல்வர். அங்கு வைக்கப்பட்டிருந்த கல்வெட்டையும் திறந்து வைத்தார். பின்னர் ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்
பிறகு எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு வந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செய்தனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி விழாவுக்கு தலைமையேற்று சிறப்புரையாற்றினார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்து பேசினார். முடிவில் செய்தித்துறை இயக்குனர் பாஸ்கரபாண்டியன் நன்றி கூறினார்.