Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மக்கள்  பணியாற்ற நல்ல தலைவன் பதவியில் அமரவில்லை! -சேரன்

செங்கோல் படைப்பகத்தின் சார்பில் தலைவனின் தம்பி சுதன் (இலண்டன்) அவர்களின் தயாரிப்பில், கலைமாமணி முனைவர் புதுவை சித்தன் தெ. ஜெயமூர்த்தி அவர்கள் இசையமைத்து திரைப்படப்பாடலாசிரியர்கள் கவிஞர் கவிபாஸ்கர் – கவிஞர் இளையகம்பன் மற்றும் தமிழீழக் கவிஞர்கள் புதுவை இரத்தினதுரை, துளசிச்செல்வன், திருக்குமரன், அகதன் உள்ளிட்டோர் எழுதிய பாடல்களின் தொகுப்பான “இந்த மண் எங்களின் சொந்த மண்” என்ற மக்கள் இசைப் பாடல்களின் வெளியீட்டு விழா 13.03. 2021 அன்று மாலை 6.00 மணியளவில் சென்னை – சாலிகிராமம் “பிரசாத்லேப்” நடைபெற்றது.

 

அந்த விழாவில் இயக்குநர் சேரன் பேசியதாவது;

”இந்த மண் மக்களின் சொந்தமண்.. என்று சொல்லுகிற இடத்தில் இருப்பது யாரென்றால் அது நாம்தான்! எந்த இடத்தில் போராடவேண்டுமோ, எந்த இடத்தில் குரல் கொடுக்க வேண்டுமோ அந்த இடத்தில் எதிர்த்து நிற்கவேண்டுமோ, எந்த இடத்தில் நமது உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று அழுத்திச் சொல்லனுமோ அந்த இடத்திலெல்லாம் நாம் மவுனமாக இருந்ததின் காரணம்தான் இன்று நாம் இந்த மண் நமது சொந்த மண் என்று சொல்லி ஆக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறோம்!

மழுங்கி போனவர்கள் தமிழர்கள் என்று வரலாறு பதிவு செய்துவிடுமோ என்று எனக்கு இருக்கிறது” அப்படி ஒரு இக்கட்டான இடத்திற்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்! நமது போராட்டமும், நமது குரலும் தொடர்ந்து ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால் நமது உரிமைக்காகவும், போராட்டத்திற்காகவும் இதுவரை எந்த பலனும் கிடைக்கவில்லை. எந்த மாற்றமும் நிகழவில்லை. அதற்குக் காரணம், அரசியல்.! மக்களுக்காக பணியாற்றக் கூடிய ஒரு தலைவன் இன்னும் நாற்காலியில் அமரவில்லை! அதுதான் இங்கு பிரச்சினை! அப்படி ஒருவர் நமக்காக அமர்ந்திருந்தால் ஈழத்தில் நமது மக்கள் கொல்லப்படும்போது அந்த மாற்றம் நிகழ்ந்திருக்கும் நமக்கான நியாயம் கிடைத்திருக்கும். இங்கு எல்லாமே நாடகங்களாகவே இருக்கு! மக்களை மயக்க பிஸ்கட் கொடுத்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். இது அவர்கள் மீதான குற்றமில்லை. நமது இயலாமையை, நமது பலவீனத்தை பயன்படுத்திக் கொண்டு ஆட்சிக்கு வருகிறவர்களுக்கு நாம் சாமரம் வீசிக் கொண்டிருக்கிறோம்! நமக்காக குரல் கொடுப்பவர்களை, நமக்காக சிந்திப்பவர்களை நாம் ஒதுக்கித்தள்ளுகிறோம்! நாம் விழித்துக் கொண்டால் மட்டுமே எழுச்சியும் மாற்றமும் நிகழும்!

நம்மை சோம்பாறிகளாக்கி, இலவசங்களுக்கு அடிமையாக்கி, நம்மை அவர்களுக்கான ஆட்களாக வைத்திருக்கிறார்கள்.. முதலில் மக்களிடமிருந்து புரட்சி எழவேண்டும். அதன்பிறகுதான் மாற்றம் நிகழும்!

மக்களுக்காகப் போராடுகிறவர்களை மக்கள் இன்னும் கண்டுகொள்ளவே வில்லை. அரிதாரம் பூசியவர்களின் முகமும், கவர்ச்சியும்தான் மக்களுக்கு தேவைபடுகிறது. அந்த கவர்ச்சிதான் நம்மை ஐம்பதாண்டு காலம் பின்னோக்கி இழுத்துவிட்டது. திரும்பவும் அந்த கவர்ச்சியின் பின்னாலில் நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம். நான், இயலாமையில் பேசவில்லை, கோபத்தில் பேசவில்லை, அனைத்தையும் உள்ளத்தில் போட்டு விழுங்கி நானும் அமைதியாக இருக்கும் ஒரு சராசரி மனிதனாகி விட்டேன்.ஆகவே இந்த மண் நமது சொந்த என்று சொல்லுவதற்கு காரணமே நாம் தான் என்பதை சிந்தித்துப்பார்க்கவேண்டும்.

சித்தன் தெ. ஜெயமூர்த்தி அடிக்கும் பறை அனைவரையும் விழிப்படைய செய்யும்! நாள் நெருங்கிவிட்டது. முதலில் நாம் விழிப்படைவோம்! இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ.மணியரசன் அவர்கள் பாடல்களை வெளியிட்டு நிறைவுரையாற்றினார். இயக்குநர் மு.களஞ்சியம், இயக்குநர் மணிமாறன், ஐயா கி. வெங்கட்ராமன் (இணையாசிரியர் – தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்) பேரா. கு.சின்னப்பன் (பதிவாளர் (பொ) தமிழ்ப்பல் கலைக்கழகம் – தஞ்சை) பேரா. பெ. கோவிந்தசாமி (கலைப்புலத்தலைவர், தமிழ்ப்பல் கலைக்கழகம்–தஞ்சை) கவிஞர் இளம்பிறை, கவிஞர் இளையகம்பன் தமிழீழக் கலைஞர் தேவர் அண்ணா, எழுத்தாளர் விசவனூர் தளபதி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பை பாடலாசிரியர் கவிஞர் கவிபாஸ்கர் மேற்கொண்டார். கவிஞர் ஜே. தமிழ்ச்செல்வன் வரவேற்புரையாற்றினார் விழா நிறைவில் இசையமைப்பாளர் – திரைப்படப் பின்னணி பாடகர் முனைவர் சித்தன் ஜெயமூர்த்தி ஏற்புரை நிகழ்த்தினார்

அரங்கு நிறைந்த இவ்விழாவில், பறையாட்ட கலைஞர்களின் சிறப்புமிக்க நடனங்களும் பாடலாசிரியர் கவிபாஸ்கர் – தமிழ் வணக்கம் மற்றும் பறையிசை பாடல்களும் திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரவேற்பை பெற்றது!

Related posts

கசட தபற வெற்றி, இயக்குனர் சிம்புதேவன் அறிக்கை

Jai Chandran

எம்.ஜி.ஆரின் கனவு நனவாகிறது ராஜா இசையில் ’பொன்னியின் செல்வன்’

Jai Chandran

Pooja still of NirangalMoondru

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend