படம்: பாட்டல் ராதா
நடிப்பு: குருசோமசுந்தரம்,
சஞ்சனா, ஜான் விஜய்
மாறன், பாரி இளவழகன்
ஆண்டனி
தயாரிப்பு: பா ரஞ்சித், டி.என். அருண் பாலாஜி
இசை: ஷான் ரோல்டன்
ஒளிப்பதிவு: ரூபேஷ் ஷாஜி
இயக்கம்: தினகரன் சிவலிங்கம்
பிஆர்ஓ: குணா
குடியின் தீமை பற்றி பல படங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. தனிப்பட்ட முறையில் குடியின் தீமை பற்றி சொல்லப்பட்ட படங்களும் உண்டு. அந்த வகையில் முழுக்க முழுக்க குடியால் குடும்பம் எப்படி சீரழிகிறது என்பதை சொல்லும் படமாக உருவாகி இருக்கிறது பாட்டல் ராதா.
கட்டிட வேலை செய்யும் ராதா (குரு சோமசுந்தரம்) வேலைக்கு முக்கியத்துவம் தராமல் அந்த நேரத்தில் கூட குடி குடி என்று குடிபோதையில் நாட்களையும் நேரத்தையும் கழிக்கிறார். குடியிலிருந்து விடுபடச் சொல்லி மனைவி எவ்வளவோ கேட்டும் இன்றைக்கு விட்டுவிடுகிறேன் நாளைக்கு விட்டு விடுகிறேன் என்று சாக்கு போக்கு சொல்லி தீராத குடிகாரனாக குடி நோயாளியாக குரு மாறுவதும். அவரை அதிலிருந்து மீட்க குடிபோதை மறுவாழ்வு மீட்பு மையத்தில் அவரை சேர்த்து அந்த நோயிலிருந்து அவரை மீட்க முடிந்ததா என்பதற்கு விடை கூறுகிறது பாட்டல் ராதா.
குரு சோமசுந்தரம் நன்றாக நடிப்பார் என்பது தெரிந்த விஷயம் தான். அவரை குடிகாரனாக நடிக்க வைத்தால் எப்படி எல்லாம் நடிப்பார் என்று நம் கற்பனைக்கு எட்டுமோ அப்படி எல்லாம் நடித்திருக்கிறார். அவரது அந்த நடிப்பு கதாபாத்திரத்திற்கு பிளஸ் ஆகவும் இருக்கிறது சில சமயம் ஓவர் ஆகி மைனஸ் ஆகவும் மாறிவிடுகிறது.
போலீஸ் நிலையத்தில் திருடி குடிப்பது, போலீசாரிடம் கையைக் கட்டி வாயை பொத்தி பவ்யமாக நிற்பது போன்ற காட்சிகளில் குடிகாரன் என்றால் இப்படி கூடவா இருப்பான் என்று யோசிக்கும் அளவுக்கு செய்திருக்கிறார்.
நடிப்பில் ஒரு எதார்த்தத்தை தவழவிட்டு குடிகாரன் மனைவி எவ்வளவெல்லாம் துன்பம், துயரம், அவமானம், தொல்லை, சோகம், குடும்ப பாரம் அனுபவிப்பாரோ அவ்வளவையும் தன் தோளில் சுமந்து நிஜ குடிகாரனின் மனைவியாகவே மாறி. கண்களில் ஈரக் கசிவை ஏற்படுத்தியிருக்கிறார் சஞ்சனா.
குடி குடி என்று படம் முழுவதும் ஒரே குடிகார புராணமாக இருப்பதால் கொஞ்சம் அலுப்பு தட்டவே செய்கிறது.
சொல்ல வந்தது குடிகாரன் கதை இதில் கமர்சியல் சாயம் பூசினால் கதைக்கரு கெட்டுப்போகும் என்று இயக்குனர் தினகரன் சிவலிங்கம் சித்தித்தாரோ என்னவோ பாட்டில் பாட்டிலாக ஊற்றிக் கொடுத்து படம் பார்ப்பவர்களையும் கண் சிவக்க செய்து விடுகிறார்.
ஷான் ரோல்டன் இசை மீட்டருக்குள் அடங்குகிறது. சிலுக்கோட கையால வாங்கி குடி என்பது போல ஒரு பாட்டு அமைத்திருந்தால் இயக்குனர் தான் சொல்ல வந்த கருத்தை இன்னும் கூட எளிதாக நிறைய பேருக்கு சொல்லி இருக்கலாம்.
குடியால் சீரழியும குடும்பத்தை எப்படியாவது ஒரு கதையைச் சொல்லி காப்பாற்றி விட முடியுமா என்ற கடமை உணர்வோடு பா ரஞ்சித், டி.என். அருண் பாலாஜி படத்தை தயாரித்திருக்கிறார்கள். கடமை முடிந்து விட்டது பலன் கிடைக்குமா என்பது தான் சந்தேகம்.
ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு இயல்பு.
பாட்டல் ராதா – விடிய விடிய இராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் என்ன உறவு என்ற கேட்ட கதை ஆகிவிடக்கூடாது என்பதுதான் ஆதங்கமாக இருக்கிறது.