படம்: பத்தா
நடிப்பு: விஜய் சேதுபதி, லிஜோ மோல் ஜோஸ், சாய் ப்ரித்வி ராஜ், சஹஸ்ரா, அர்ஜுன் சிதம்பரம், ஹரி கிருஷ்ணன், சாண்டி பாலச்சந்தர், விஷ்ணு கோவிந்த், பாலமுருகன்
தயாரிப்பு: முராத் கெதானி , பிரியா அட்லீ, அலோக் ஜெயின் & அஜித் அந்தாரே
இசை: சாய் அப்யங்கர்
ஒளிப்பதிவு :செல்வகுமார் எஸ்.கே.
இயக்கம்:பாலாஜி தரணிதரன்
பிஆர்ஓ : யுவராஜ்
கதை : பத்தா (விஜய் சேதுபதி) ஊரில் ரவுடித்தனம் செய்துக் கொண்டு சுற்றுகிறார். கண்ணில்பட்டவர்களை அடித்து துவம்சம் செய்கிறார். அவரை பார்க்கும் சிறுவர்களுக்கு அச்சம் ஏற்படுகிறது. இந்த நிலையில் விடுமுறை விடப்பட்ட நாளில் பள்ளி பாத்ரூமில் பத்தா இருக்க, அவரை பார்த்து பயப்படும் சிறுவன் ஒருவன் பத்தாவை உள்ளே வைத்து பாத்ரூம் கதவின் தாழ்ப்பாளை வெளியில் பூட்டி விடுகிறான். வெளியில் வர முடியாமல் தவிக்கும் பத்தா உள்ளே இருந்து சாகும் நிலைக்கு செல்கிறான். அவனை காப்பாற்றுகிறார்களா? பத்தாவை பாத்ரூமில் சிறை பிடித்த சிறுவனின் கதி என்ன? என்பதற்கு படபடப்பான பதில் அளிக்கிறது பத்தா.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் பத்தா படத்தை இயக்கியிருப்பார். 80ஸ் காலகட்ட கதை என்றாலே ஒரு தனி ஈர்ப்பு வந்துவிடும் அந்த வகையில் பத்தா படமும் தொடக்கம் முதலே ஒரு ஈர்ப்புடன்தான் செல்கிறது.
விஜய் சேதுபதி அடிதடி செய்யும் ரவுடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நடுரோட்டில் ஆட்களைப் போட்டு அடித்து உதைத்து கையை உடைக்கும் முரட்டுத்தனமான விஜய் சேதுபதியை பார்க்கும்போதே ஒரு பயம் வந்து விடுகிறது. அவரை பார்த்து அந்த ஊரில் உள்ள சிறுவர்கள் நடுங்குகிறார்கள் கதை கதையாக அவரைப் பற்றி பேசுகிறார்கள்.
விஜய் சேதுபதியின் அடாவடியை நேரில் பார்க்கும் சிறுவன் சாய் பிரித்வி ராஜ் அவரின் பெயரை கேட்டாலே பகிர்ந்து நடுங்குகிறான். அவனது அந்த பயம் கண்களிலும் முகத்திலும் உடல் மொழியிலும் வெளிப்படுவது ஆச்சரியம்.
பள்ளி பாத்ரூமில் விஜய் சேதுபதி இருப்பதை கவனிக்கும் சிறுவன் சாய் பிரித்வி ராஜ் எங்கே தன்னை நேரில் பார்த்தால் விஜய் சேதுபதி அடிப்பாரோ என்று பயந்து கதவை வெளிப்பக்கமாக தாழ்ப்பால் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பிக்கும்போது இந்த இடத்திலிருந்து தான் கதையே தொடங்கப் போகிறது என்ற விஷயம் சில காட்சிகள் நகர்ந்த பிறகு தான் உணர முடிகிறது, அதில் ஒன்றவும் முடிகிறது.
வெளியில் கதவை பூட்டிவிட்டு நிற்கும் சிறுவனிடம் உள்ளே சுற்றிக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி அதட்டலாக, மிரட்டலாக, கெஞ்சி கேட்டு, அழுது புலம்பிய பிறகும் சிறுவன் சாய் கதவை திறக்காமல் அவர் பசியில் வாடி விடக்கூடாது என்பதற்காக கடையில் பொறை வாங்கி வந்து அதை கதவுக்கடியில் திணிப்பது ஒரு சிறுவனால் இவ்வளவு யோசிக்க முடியுமா, இவ்வளவு திட்டம் போட முடியுமா என்ற கேள்விகளை எழுப்பினாலும் காட்சிகள் சுவாரஸ்யமாக நகரும்போது அந்த கேள்வி எல்லாம் காற்றில் கலந்து போகிறது..
பாத்ரூமில் சிக்கிய விஜய் சேதுபதி பின்னர் எப்படி வெளியே வருகிறார் என்பதெல்லாம் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குனரின் ஒவ்வொரு சிறு நகர்விலும் பதட்டத்துடன் காட்சிகளாக நகர வைக்கிறது.
விஜய் சேதுபதி கிளைமாக்சில் ஒரு பாடல் பாடுகிறார் தொடக்கத்தில் என்னடா பாட்டு இது என்று மற்றவர்களை போலவே ரசிகர்களையும் முகம் விரைக்க வைத்து அந்த பாடல் முடியும்போது கண்களில் கண்ணீரை கசிய வைத்து மனப்பாரத்தை ஏற்றும்போது அரங்கில் கைதட்டல் எழுகிறது. இவ்வளவு படங்களில் விஜய் சேதுபதி நடித்திருந்தாலும் கண்கலங்க வைக்கும் ஒரு படத்தில் நடித்திருக்கிறார் என்று சொன்னால் அது பத்தா திரைப்படமதான்
விஜய் சேதுபதி மனைவியாக லிஜோமோல் எதார்த்தமான நடிப்பை வழங்கி இருக்கிறார். அவரது மகளாக வரும் சஹஸ்ரா தேவையான இடத்தில் சிரிக்கிறார், முறைக்கிறார், அழுகிறார், தந்தை பாசம் வெளிப்படுத்துகிறார். அர்ஜுன் சிதம்பரம், ஹரி கிருஷ்ணன், சாண்டி பாலச்சந்தர், விஷ்ணு கோவிந்த், பாலமுருகன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
முராத் கெதானி , பிரியா அட்லீ, அலோக் ஜெயின் & அஜித் அந்தாரே படத்தை தயாரித்திருக்கிறார்கள்.
சாய் அப்யங்கர் இசை பழைய நினைவுகளை தூண்டி விடுகிறது. அதேபோல் கேமராமேன் செல்வகுமார் எஸ்.கே. ரசிகர்களை 80ஸ் காலத்துக்கு அழைத்துச் செல்கிறார்
ஏற்கனவே சொன்னது போல் இயக்குனர் பாலாஜி தரணிதரன் எப்போதோ ஒரு படத்தை தந்தாலும் முத்தான படத்தை தந்து கெத்தான இயக்குனர் என்ற பெயரை தக்க வைத்துக் கொள்கிறார்.
பத்தா – குடும்பத்துடன் குழந்தைகளுக்கும்..
Review by
K. Jayachandhiran
www.trendingcinemasnow.com
