படம்: அறம் செய்
நடிப்பு: பாலு எஸ் வைத்தியநாதன், அஞ்சனா கீர்த்தி, லொள்ளு சபா ஜீவா, மேகாலி மீனாட்சி, பயில்வான் ரங்கநாதன், ஜாகுவார் தங்கம்
தயாரிப்பு: தாரகை சினிமாஸ்
இசை: ஸ்ரீகாந்த் தேவா
ஒளிப்பதிவு: பாலு எஸ் வைத்தியநாதன்
இயக்கம்: பாலு எஸ் வைத்தியநாதன்
பிஆர்ஓ: சாவித்திரி
அரசு நடத்தும் மருத்துவ கல்லூரி ஒன்றை தனியாருக்கு தாரை வார்க்க மந்திரி முடிவு செய்கிறார். அதற்கு மருத்துவ கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தனியாரிடம் மருத்துவக் கல்லூரி சென்றால் ஏழை மாணவர்கள் படிக்க வாய்ப்பு கிடைக்காது என்று கூறி அரசு முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இதற்கிடையில் மற்றொரு புறம், அறம் செய் என்ற அமைப்பு நாட்டில் அரசியல் மாற்றம் வேண்டும் என்று தீவிர போராட்டம் நடத்த முடிவு செய்து மக்களை திரட்டுகிறது. இந்த இரண்டு பிரச்சனைகளையும் அரசு எப்படி எதிர்கொள்கிறது. இதன் முடிவு என்னவாகிறது என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.
அறம் செய் முழுக்க ஒரு அரசியல் படமாக உருவாகி இருக்கிறது. ஆட்சி மாற்றம் தேவையில்லை அரசியல் மாற்றம் தான் தேவை என்று சீனுக்கு சீனு வசனங்களை வலியுறுத்தி காட்சிகளை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் பாலு எஸ் வைத்தியநாதன்.
அரசியல் மாற்றம் வேண்டும் என்பதற்காக போராடும் செந்தாரகை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அஞ்சனா கீர்த்தி. ஆண்மை தனமான நடை, தடங்கல் இல்லாத பேச்சு. (டப்பிங் பேசியவருக்கு பாராட்டு) , கைகளை உயர்த்தி எண்ணங்களை வெளிப்படுத்தும் உறுதி என நடிப்பில் செம கெத்து காட்டியிருக்கிறார். இவர் வரும் ஒவ்வொரு காட்சியிலும் வசனங்களில் அனல் பறக்கிறது.
தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவதற்காக அஞ்சனா திரட்டும் போராட்ட அணி சில அரசியல் கட்சிகளுக்கு பாடமாக இருக்கும்.
அரசு மருத்துவக் கல்லூரியை தனியாருக்கு விற்கும் மந்திரியின் போக்கை எதிர்த்து போராடும் மருத்துவ மாணவர்களில் பாலு எஸ் வைத்தியநாதன், ஜீவா, மேகாலி மீனாட்சி தங்களது பாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார்கள்.
அரசியலுக்கு வருவதாக முன்பு ரஜினிகாந்த் கூறியபோது ” சிஸ்டம் மாற வேண்டும்” என்று அரசியல் மாற்றம் பற்றி குறிப்பிட்டிருந்தார்
அந்த வார்த்தை தான் இந்த படத்துக்கு கருவாக அமைந்திருக்கிறது.
அரசியல் மாற்றம் வேண்டும் என்று சீனுக்கு சீன் கூறினாலும் எப்படிப்பட்ட அரசியல் மாற்றம் வேண்டும் என்ற ஒரு ஐடியாவை தராமல் மேம்போக்காக அரசியல் மாற்றம் பற்றி பேசி இருப்பது சோர்வடைய வைக்கிறது.
ஆட்சி மாற்றம் எங்களது நோக்கம் அல்ல அரசியல் மாற்றம் தான் நோக்கம் என்று கூறினாலும் ஆட்சி மாற்றம் இல்லாமல் அரசியல் மாற்றம் எப்படி நிகழும் என்பதுதான் கேள்விக்குறியாக தொக்கி நிற்கிறது.
ஒரு காட்சியில் வந்து காமெடி செய்துவிட்டு செல்கின்றனர் பயில்வான் ரங்கநாதன், சாதனா. முதல்வராக ஜாகுவார் தங்கம் நடித்திருக்கிறார். ஓவர் ஆக்டிங் இல்லாமல் அடக்கி வாசித்திருப்பது நலம்.
இயக்குனர் பாலு எஸ் வைத்தியநாதன் ஒரு அரசியல் கருத்தை முன் வைத்திருக்கிறார். ஆனால் நடைமுறையில் அவ்வளவு எளிதில் இது சாத்தியமில்லை.
இது ஒரு அரசியல் படமாக உருவாகியிருப்பதால் காதல் என்ற பேச்சுக்கு இடமில்லை. ஆனாலும் படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குத்தாட்ட பாடல் வந்து தேவையில்லாமல் நேரத்தை வீணடிக்கிறது.
ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். அவருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பதற்காக பாடல் காட்சிகளை இயக்குனர் வைத்திருப்பார் போலிருக்கிறது.
அறம் செய் – அரசியல் ஆர்வம் உள்ளவர்களுக்கு..