படம்: ” ஆளில்லாத ஊர்ல அண்ணன்தான் எம்.எல்.ஏ
நடிப்பு: ராகுல், செல்வா அனிதா, பகவதி பாலா, ஆர்.சுந்தர்ராஜன், நளினி, மீரா கிருஷ்ணன், வையாபுரி, கிங்காங், போண்டாமணி, கொட்டாச்சி, கராத்தே ராஜா,பரோட்டா முருகேஷ், பெஞ்சமின், தாரை மணியன்,.
தயாரிப்பு: பெரியநாயகி பிலிம்ஸ்
.இசை ; தேவா
சண்டை பயிற்சி : விஜய் ஜாகுவார்
ஒளிப்பதிவு – இயக்கம்
பகவதி பாலா.
பி ஆர். ஓ: விஜயமுரளி, சத்யா
ஊர் முழுவதும் கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி தரமுடியாமல் தவிக்கும் ஹீரோ கடன்காரர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் வேறு ஊருக்கு வருகிறார். அங்கு போட்டோ ஸ்டுடியோ வைத்து நடத்த எண்ணும் அவர் அந்த ஊர் முன்னாள் எம் எல் ஏ மகளிடம் வட்டிக்கு கடன் வாங்குகிறார். ஊரில் புதிதாக எம் எல் ஏவாக தேர்வாகுபவரின் போட்டோ ஆல்பம் செய்ய ஆர்டர் கிடைக்கிறது. அதில் தெம்பாகும் ஹீரோ ஆல்பம் தயாரிக்க என்ணும்போது போட்டோ எடுத்த சிப் எரிந்துபோகிறது. வேறு ஒருவர் அதேபுகைப்படம் எடுத்திருக்கிறார் என்று தெரிந்து அவரிடம் அதை வாங்கச் செல்கிறார். இந்நிலையில் எம் எல் ஏ வை யாரோ படுகொலை செய்துவிடுகின்றனர். எம் எல் ஏவின் 4வது பொண்டாட்டி எம் எல் ஏ பிணத்தை கடத்தி வந்து தந்தால் 10 லட்சம் தருவதாக கூறுகிறார். அதை நம்பி பிணத்தை கடத்தி வருகிறார் ஹீரோ. ஆனால் இறந்துபோனது எனது கணவர் இல்லை என்று 4வது பொண்டாட்டி சொல்ல அதிர்ச்சி அடைகிறார் ஹீரோ. இதற்கிடையில் எம் எல் ஏ பிணத்தை அவரது குடும்பத்தினர் போலீஸில் சொல்லி தேடுகின்றனர். இக்கட்டான நிலையில் சிக்கிக் கொண்ட ஹீரோ செய்தது என்ன என்பதை காமெடியுடன் படம் விளக்குகிறது.
புதுமுகங்கள் நடித்த படம் என்றாலும் காமெடியாக திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் பகவதி பாலா. ஹீரோ ராகுல் புதுமுகம் என்றாலும் அறிமுக காட்சியில் அஜீத் ரேஞ்சுக்கு இசை அமைப்பாளர் தேவா இசை மூலம் பில்டப் தந்திருக்கிறார். வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஹீரோ தனது கதாபாத்திரத்தை சொதப்பாமல் செய்து முடித்திருக்கிறார்.
கடன்காரர்களுக்கு பயந்து ஹீரோ ராகுல் ஓடி ஒளிவதும் ஹீரோயின் அனிதாவிடம் வட்டிக்கு கடன் வாங்கிவிட்டு அவருக்கு டிமிக்கி கொடுப்பதெல்லாம் நகைச்சுவை சுளைகள். திடீரென்று ராகுல் மீது காதல் கொள்ளும் அனிதா தனது காதலை வெளிப்படுத்த ராகுலிடம் வெட்கம் மேலிட பேசுவதும் அதைப்பார்த்து ராகுல் தரும் ரியாக்ஷனும் கலகல.
முதல்பாதிவரை ஜாலியாக செல்லும் கதை இரண்டாம் பாதியில் வேறு திசைக்கு திரும்புகிறது. இறந்த எம் எல் ஏவின் உடலை ஆட்டோவில் கடத்தி வரும் ராகுலும், அவரது நண்பர் கொட்டாச்சியும் செய்யும் கலாட்டாக்கள் காட்சிகளை சுவைபட நகர்த்துகிறது, கடத்தி வரச் சொன்ன 4வது பெண்டாட்டியிடம் ராகுலின் நண்பர் 10 லட்சம் ரூபாய் கேட்கும் போதெல்லாம் கடுப்பாகி பிணத்தை துடைப்பத்தால் அடித்து அவர்களின் வாயை 4வது பெண்டாட்டி அடைப்பதும் ஒரு கட்டத்தில், “இது என்னுடைய புருஷன் இல்லை பிணத்தை தூக்கிட்டு போடா” என்று சொல்வதும் எதிர்பாராத ஷாக்.
பிணத்தை மீண்டும் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு ராகுலும் நண்பர்களும் அல்லாடும்போது இது எங்குபோய் முடியுமோ என்று யோசிக்க வைக்கிறது.
ஹீரோயின் அனிதா கிராமத்து பாங்காக இருக்கிறார். அதே நேரம் கதாபாத்திரத்துக்கு ஏற்ப வட்டி வசூலிக்கும் குட்டி தாதாவாக மாறி வட்டிக்கு கடன் வாங்கியவர்களை ஓடவிட்டு பொம்பள ரவுடியாகிறார்,
எக்ஸ் எம் எல் ஏ வாக ஆர்.சுந்தர்ராஜன் பெரிய மனுஷத்தனமாக வந்து செல்கிறார். வையாபுரி நீண்ட நாட்களுக்கு பிறகு காமெடியும் சென்டிமென்ட்டும் கலந்த பாத்திரம் ஏற்று மனதில் இடம் பிடிக்கிறார். நளினியின் கதாபாத்திரம் சர்ப்ரைஸ். போண்டா மணி, பகவதி பாலா, பரோட்டா முகேஷ், பெஞ்சமின், கிங்காங் என இன்னும் பலர் காமெடி பட்டாளத்தில் இணை ந்திருக்கின்றனர்.
டூயட், முத்தக்காட்சி என்று நேரத்தை வீணடிக்காமல் படத்தை காமெடி தளத்தில் இயக்கி இருக்கும் பகவதி பாலா குடும்பத்துடன் காணும் படமாக தந்திருக்கிறார். திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருந்தால் காமெடி இன்னும் தூக்கலாக இருந்திருக்கும். அதே சமயம் எம் எல் ஏவை கொன்றது யார் என்ற சஸ்பென்ஸும் எதிர்பாராத திருப்பமாக அமைந்திருக்கிறது ஒளிப்பதிவு பொறுப்பும் பகவதி பாலாவே ஏற்றிருக்கிறார்.
இசை அமைப்பாளர் தேவா தனது பணியை செவ்வானே செய்திருக்கிறார். ”நீதாண்ட கெட்டப்பையன்” பாட்டில் குத்தாட்டம் களைகட்டுகிறது. விஜய் ஜாகுவார் தேவைக்கு ஏற்ப ஆக்ஷன் காட்சி அமைத்திருக்கிறார்.
ஆளில்லாத ஊர்ல அண்ணன்தான் எம்.எல்.ஏ – கொரோனா கஷ்டத்தை மறந்து சிரித்துவிட்டு வரலாம்.