படம்: மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்
நடிப்பு: மோகன்லால், பிரபு, அர்ஜுன், சுனில் ஷெட்டி, நெடுமுடி வேணு, அசோக் செல்வன், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், மஞ்சுவாரியர், கல்யாணி
தயாரிப்பு: ஆசிர்வாத் சினிமாஸ், ஆண்டனி பெரும்பவூர்
இசை: ரோனி ரபேல்
பின்னணி இசை – ராகுல் ராஜ் , அன்கித் சூரி ,லில் இவான்ஸ் ரோடர்
ஒளிப்பதிவு : எஸ்.திருநாவுக்கரசு
வசனம் ஆர் பி பாலா
இயக்கம்: பிரியதர்ஷன்
தமிழ்நாடு ரிலீஸ்: வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ். தாணு
பி ஆர் ஓ : ரியாஸ் அஹமத்
கேரள வரலாற்று படம் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம், 16ம் நூற்றாண்டில் கோழிக்கோடு பின்னனியில் நடந்த சரித்திர சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி இருக்கிறது
சாமுத்ரி மன்னர் தங்கள் நாட்டுடன் வியாபார ஒப்பந்தம் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் போர் தொடுப்போம் என்று போர்ச்சுக்கள் நாட்டு அரசாங்கம் அடாவடித்தனம் செய்கிறது. அதற்கு சாமுத்ரி மன்னர் அடிபணிய மறுக்கிறார். அந்த படையுடன் எதிர்த்து போரிட முடிவு செய்கிறார். அதற்கு துணையாக கடற்கொள்ளையனாக மாறி போர்ச்சுகள் நாட்டினரின் கப்பல்களை கொள்ளையடித்து அவர்களை திணறடிக்கும் மரைக்காயர் 4வது பரம்பரையை சேர்ந்த குஞ்ஞாலியின் உதவி வேண்டும் என சாமுத்ரி மன்னர் எண்ணுகிறார். குஞ்ஞாலியை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி அவருக்கு கப்பற்படை தளபதி பதவி அளிக்கிறார் மன்னர். அதையேற்கும் குஞ்ஞாலி எதிரி படையுடன் போரிட்டு அவர்களை வீழ்த்துகிறார். பின்னர் மன்னரின் அன்பிற்கு பாத்திரமாகி நாட்டில் தன்னை சேர்ந்து மக்களும் வீடு கட்டி வாழ அனுமதிக்க வேண்டும் என்று குஞ்ஞாலி கேட்கிறார். அதற்கு மன்னர் அனுமதி தருகிறார்.குஞ்ஞாலி தன்னை சார்ந்தவர்களுக்கு குடியிருப்பு ஏற்படுத்தி தந்து அங்கேயே வாழ்கிறார். இதற்கிடையில் குஞ்ஞாலி கூட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும் மன்னர் பரம்பரையை சேர்ந்த மந்திரியின் மகளுக்கும் காதல் மலர்கிறது. அதே பெண்ணை மற்றொரு மந்திரியின் மகனும் காதலிக்கிறார். மந்திரியின் மகனுக்கும் அவன் காதலிப்பவரை திருமணம் செய்துகொள்ள சாமுத்ரி மன்னர் அனுமதி அளிக்கிறார். இதற்கிடையில் மந்திரியின் மகள், தான் காதலித்த குஞ்ஞாலி கூட்டத்தை சேர்ந்தவருடன் வெளியேறுகிறார். இவள் கர்ப்பமாக இருப்பதை அறிந்த குஞ்ஞாலி காதலர்களை பிரிக்க தயங்குகிறார். இதையே காரணமாக வைத்து குஞ்ஞாலி மீது மந்திரியின் மகன் வீரர்களை ஏவி தாக்குதல் நடத்த அது பெரிய சண்டையாக மாறுகிறது. ஒரு கட்டடத்தில் சாமுத்ரியின் மன்னர் பதவியை பறித்து மந்திரியின் மகன் மன்னராகிறான். அவன் போர்ச்சுகள் வீரர்களுடன் சேர்ந்து வியாபார ஒப்பந்தம் செய்துகொள்வதுடன் குஞ்ஞாலியை அழிக்க நினைக்கிறான். இரண்டு படைகளுடன் வருபவர்களை மக்களின் துணையுடன் குஞ்ஞாலி எதிர்த்து போராடுகிறார். ஆனால் போரில் அவர் சிறை பிடிக்கப்பட்டு தூக்கிலிடப்படுகிறார்.
தமிழில் அந்த காலத்தில் சிவாஜி நடிப்பில் வந்த வீரபாண்டிய கட்டபொம்மன் போல் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் படம் உருவாகி இருக்கிறது. இது சரித்திர பின்னணி படமாக இருந்தாலும் சினிமாவிற்காக சில கற்பனை கதாபாத்திரங்களையும் இயக்குனர் பிரியதர்ஷன் இணைத்து பிரமாண்ட வரலாற்று படமாக தந்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.
குஞ்ஞாலி மரைக்காயர் என்ற கதாபாத்திரத்தில் மோகன்லாலை தவிர வேறு யார் நடித்திருந்தாலும் இவ்வளவு பொருத்தமாகவும் நேர்த்தியாகவும் இருந்திருக்காது என்று கூறும் அளவுக்கு குஞ்ஞாலி மரைக்காயர் என்ற ஒரு போராளியாக வாழ்ந்திருக்கிறார்.
சாமுத்ரி மன்னரின் அவைக்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தி கப்பற்படை தளபதியாக பதவி ஏற்பதும் பின்னார் நடுக்கடலில் திரண்டு வரும் போர்ச்சுக்கள் கப்பற்படையை சூழ்ச்சியை பயன்படுத்தி நடுக்கடலிலேயே மூழ்கடித்து வெற்றி பரணி கொட்டுவதும் மோகன்லாலுக்கே உரித்தான ஆக்ஷன் களம்.
தன் கூட்டத்தை சேர்ந்த வீரனை கொன்றுவிட்டார் என்று எண்ணி அர்ஜூனுடன் மோகன்லால் பயங்கரமாக கத்தி சண்டையிட்டு அவரைக் கொல்லும்போது அரங்கு அமைதியாகிறது. பிரபு மோகன்லாலின் வலது கரமாக வருகிறார். குறைந்த அளவே காட்சிகள் என்றாலும் சிறந்த நடிப்பால் மனதில் இடம் பிடிக்,கிறார்.
கதை முழுவதுமே மோகன்லாலை சுற்றியே பின்னப்பட்டிருப்பதால் படம் தொடங்கி சில காட்சிகளுக்கு பிறகு வரும் அவர் கிளைமாக்ஸ் வரை தனது இருப்பை தக்க வைக்கிறார். சிறுவயது மோகன்லாலாக அவரது மகன் பிரணவ் மோகன்லால் நடித்துள்ளார். ஆரம்ப காட்சியிலிருந்து குறிப்பிட்ட காட்சிகள் வரை பரபரப்புடன் செயல்பட்டு யார் இந்த புதுமுகம் என கேட்க வைக்கிறார். மோகன்லாலின் தாயாக சுஹாசினி வேடமேற்றுள்ளார்.
மன்னர் மகளாக கீர்த்தி சுரேஷ், பிரணவ் காதலியாக கல்யாணி ஆகியோர் பனிமர்கள்போல் கண்ணுக்கு குளிர்ச்சியாக தோன்றுகின்றனர். சாமுத்ரி மன்னராக நெடுமுடிவேணு பொறுமையின் சிகரமாக நடித்துள்ளார். அச்சுதனாக வரும் அசோக் செல்வன் கோபம் கொப்பளிக்க எதிர்மறை வேடத்தில் நடித்திருக்கிறார்.
படத்தின் பிரமாண்டத்தை கிராபிக்ஸ் வி எப் எக்ஸ் எபெகட்ஸ் மூலம் வடிவமைத்து ஹாலிவுட் படமோ என்று வியக்க வைத்திருக்கிறார் சித்தார்த் பிரியதர்ஷ்ன் அதேபோல் அற்புதமான செட் அமைத்துள்ள சாபு சிரில், படத்தின் வரலாற்று சிறப்பு கெடாமல் படமாக்கி இருக்கும் ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு, வசனம் பாடல் எழுதியிருக்கும் பாலா, இசை அமைப்பாளர் ரோன்னி ரபால் என தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோரின் கூட்டணியும் தங்கள் பங்களிப்பை நிறைவாக தந்திருக்கின்றனர்.
தமிழில் இப்படத்தை கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன் வெளியிட்டிருக்கிறது.
மரைக்கயர் அரபிக்கடலின் சிங்கம் -கடல் கடந்தும் கர்ஜிக்கும்.