திரையுலகில் தனது நடிப்பு மற்றும் சிந்தனை மிக்க கருத்துக்கள் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் விவேக். நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இந்நிலையில் அவர் வீட்டில் நேற்று குடும்பத்தினர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார்,. உடனடியாக அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.
சுயநினைவு இல்லாமல் இருந்த விவேக்கை டாக்டர்கள் பரிசோதித்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவரை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தது. விவேக்கிற்கு எக்மோ சிகிச்சை, ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. 24 மணி நேரம் கழித்துத்தான் விவேக் உடல் நிலை பற்றி கூறமுடியும் என்று நேற்று டாக்டர்கள் தெரிவித்திருந்தனர்.
தீவிர சிகிச்சை அளித்துவந்த நிலையில் விவேக் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை மரணம் அடைந்ததாக அதிகாலை 4.35 மணிக்கு மருத்துவமனை அறிவித்தது. அவருக்கு வயது 59. விவேக் உடல் மருத்துவமனையிலிருந்து விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டு பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இன்று மாலை அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.
ரசிகர்களும், பொதுமக்களும் விவேக் உடலுக்கு வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விவேக் மறைவு திரையுலகினரையும், ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
நடிகர்கள் சத்யராஜ், பாண்டியராஜன். எஸ்.ஏ.சந்திரசேகரன், நடிகை கஸ்தூரி உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் விவேக் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். விவேக் மறைவுக்கு தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்திருக்கிறார்.