பிரபல நடிகர் ஜெய் முன்பெல்லாம் தான் நடிக்கும் படங்களின் நிகழ்வுகளுக்கு கூட வராமல் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வந்தார். சமீபத்தில் ஜெய் இசையமைப்பாள ராகவும் மாறினார். இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய வீரபாண்டியபுரம் படத்திற்கு இசை அமைத்து ஹிரோவாகவும் நடித்தார்.
இதையடுத்து புதிய மாற்றத்துடன் ஜெய் திரையுலகில் உலா வருகிறார். எல்லா பட நிகழ்வுகளுக்கும் தவறாமல் கலந்து கொள்கிறார். அவரது இந்த மாற்றம் திரையுலகினர் மத்தியில் வரவேற்பும் பாராட்டும் பெற்றுள்ளது.
அதோடு, இனி அடிக்கடி பத்திரிகையாளர்களை சந்திப்பேன் என வாக்குறுதியும் கொடுத்தார் ஜெய். அந்த வாக்குறுதியை உண்மையாக்கும் விதமாக பெண்கள் தினத்தில் மீண்டும் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் ஜெய்.
திடீரென நடிகர் சுப்பு பஞ்சு மூலமாக தமிழ் சினிமாவில் உள்ள பெண் செய்தியாளர் களுக்கு பெண்கள் தினத்தை கொண்டாட அழகிய பட்டுப்புடவைகளை வழங்கி ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார் ஜெய். அதிலும், அந்த பட்டுப்புடவைகளை தனது தந்தை சம்பத், சகோதரி சந்தியா அவர்களை அனுப்பி ஒவ்வொரு பெண் செய்தியாளர் களிடமும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

ஜெய் இப்போது சுந்தர்.சி இயக்கி வரும் படத்திற்காக ஊட்டியில் படப்பிடிப்பில் இருக்கிறார்.
பட்டுப்புடவை வழங்கியது பற்றி ஜெய்யிடம் கேட்ட போது, “நம் குடும்பத்து சகோதரிகளில் ஒருவராக பார்க்கிறேன்.நேரம் காலம் பார்க்காமல் குடும்பத்தையும் வேலையையும் அவர்கள் சமாளிக்கின்றனர்.அவர்களுக்கு ஏதாவது செய்ய ஆசைப்பட்டேன்.அதனால் அவர்களுக்கு என் அன்பை, நன்றியை சொல்லும் வகையில் பட்டுப் புடவைகளை வழங்கினேன்.” என்றார்.
